Skip to main content

கூத்து!22

எம்.எல்.ஏ. மகனும் முந்நூறு கோடியும்!

kuthoo

ஆரணி முன்னாள் எம்.எல்.ஏ. தயாநிதி என்கிற தயாளன் வீட்டுக்கு 9-4-18 அன்று ஆந்திரா -கடப்பா போலீசார் வந்தனர். தயாளன் மகன் சத்தியநாராயணாவை இழுத்துச் சென்றனர். கடத்திச் செல்வதாக போன் போனதால் ஆரணி போலீசார் ஆந்திர போலீசாரை வழிமறித்தனர்.

""இது 300 கோடி மதிப்புள்ள செம்மரக் கடத்தல் விவகாரம்'' என்று ஆந்திரா சொன்னதும், "தாராளமாகக் கூட்டிச் செல்லுங்கள்' என்று ஒதுங்கிக்கொண்டது ஆரணி.

சந்தவாசலில் உள்ள செங்கல் சூளை வியாபாரத்தால் வரும் வருமானம்தான் எக்ஸ் எம்.எல்.ஏ. குடும்பத்தை கோடீஸ்வரக் குடும்பமாக்கியது என்றுதான் ஆரணி தி.மு.க.வினர் எண்ணிக்கொண்டிருந்தனர்.

எக்ஸ் எம்.எல்.ஏ. தயாநிதி (தயாளன்) திருவண்ணாமலை வடக்கு தி.மு.க. மா.செ. சிவானந்தத்தின் ஆதரவாளர், மிகவும் நெருக்கமானவர்.

-து.ராஜா

ஏழெட்டு அதிகாரிகளும் 67 லட்சமும்!

"வந்தவாசி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் அலுவலகத்தில் 67 லட்ச ரூபாயை பங்கு போடுவதில் பெரும் தகராறு. வெட்டுக் குத்து ஏற்படுமுன் வந்து காப்பாற்றுங்கள்' என்று திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சரவணகுமாருக்கு தகவல் சென்றது.

இன்ஸ்பெக்டர்கள் அருள்பிரசாத், ரஜினிகாந்த் அடங்கிய டீமோடு தனி தாசில்தார் அலுவலகம் சென்றார் டி.எஸ்.பி. அங்கே 67 லட்சம் இல்லை. அந்த ரொக்கம், பக்கத்திலுள்ள ஒரு வார்டன் வீட்டில் இருந்தது. ""இருக்கட்டும்... அப்புறம் வாங்கிக்கிறேன்னு தனி தாசில்தார் அற்புதம்மாள் தந்தாங்க'' என்றார் அந்த வார்டன். தனி தாசில்தாரிடம் "இதுக்கு கணக்கு இருக்கா?' என்று கேட்டார் ல.ஒ.துறை டி.எஸ்.பி. கண்கள் கலங்க பரிதாபமாய் பார்த்தார் தாசில்தார்.

வந்தவாசி தாலுகாவுக்கு அரசு ஒதுக்கிய நிதி, செலவு செய்யாமல் வைத்திருந்து வருடம் முடிந்ததும் தாலுகாவிலுள்ள 28 ஆதிதிராவிட விடுதிகளுக்கும் மளிகைச் சாமான்கள் வாங்கியதாக பில் தயாரித்துக் கொடுத்து கருவூலத்தில் இருந்து 67 லட்சத்தை வாங்கியிருக்கிறார்கள். இப்போது துறைரீதியான விசாரணை தொடங்கியுள்ளது. ஏனெனில் இது லஞ்சம் இல்லையாம்!

-து.ராஜா

ஒரு பாலம்; இரண்டு பூமி பூஜை!

kuthoo

நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட களக்காடு நகரின் மையப் பகுதியில் அம்பை, நெல்லை, குமரி ஆகிய நகரங்களுக்குச் செல்லும் சாலைகளின் சந்திப்பில் ஒரு குறுகலான பழைய பாலம். போக்குவரத்து நெரிசலை உண்டாக்கும் இப்பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்டவேண்டும்'' என்று சட்டமன்றத்தில் வலியுறுத்தினார் தொகுதி எம்.எல்.ஏ. காங்கிரஸ் வசந்தகுமார். புதிய பாலம் கட்ட 67 லட்சம் ஒதுக்கியது நெடுஞ்சாலைத்துறை.

பூமி பூஜைக்கான நல்லநாளை தேர்வு செய்து, காங்கிரஸ்-தி.மு.க. நிர்வாகிகளையும் அழைத்து 13-04-18 அன்று பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார் எம்.எல்.ஏ. வசந்தகுமார்.

இதைக் கேள்விப்பட்ட நெல்லை எம்.பி. பிரபாகரன் பதட்டமாகிவிட்டார். ""பூமி பூஜை போட யாரைக் கேட்டு அனுமதித்தீர்கள்?'' என்று நெடுஞ்சாலை அதிகாரிகளை வறுத்தெடுத்த எம்.பி. பிரபாகரன் 14-04-18 அன்று களக்காடு வந்தார். எம்.எல்.ஏ. பூமி பூஜை போட்ட இடத்திற்கு எதிரில், அதே பாலத்திற்காக தானும் ஒரு பூமி பூஜை போட்டார். பிறகு, காலரைத் தூக்கிவிட்டபடி திரும்பிச் சென்றார்.

பாலம் திறப்புவிழா எப்போது, யாரால், எத்தனை முறை நடக்கும்?

-நாகேந்திரன்

இருவரின் கலெக்ஷன் மேளா!

தலைமைச் செயலக அதிகாரிகள் இருவர் டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி வகுப்புகளை நடத்தினால், வசூல் வேட்டைக்கு கேட்கவா வேண்டும்?

தலைமைச் செயலக பள்ளிக் கல்வித்துறை அதிகாரியான பிரிவு அலுவலர் சீனிவாசனும், வேளாண்துறை பிரிவு அலுவலர் முத்துக்குமாரும் சேர்ந்து காஞ்சிபுரத்தில் அபாகஸ் மற்றும் ஏ.டி.சி. என்கிற டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி வகுப்புகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் பயிற்சி வகுப்பில் சேர்ந்தால் வேலை நிச்சயம் என்று உறுதியும் அளிக்கிறார்கள்.

அமைச்சர்களுக்கு வேண்டியவர்கள் என்ற போர்வையில் பணியிட மாற்றம், வேலை, காண்ட்ராக்ட் என பிக்ஸட் ரேட் பேசி, கலெக்ஷன் மேளாவும் நடத்துகிறார்கள். இவர்கள் வாங்கியிருக்கும் அசையாச் சொத்துக்களின் எண்ணிக்கையை வாய் பிளந்து வர்ணிக்கிறார்கள், சக பணியாளர்கள்.

-அரவிந்த்

நூறு கிலோ கற்பூரம்!

திருக்கார்த்திகை தீபத்தால் திருவண்ணாமலைக்குப் புகழ். மகரஜோதியால் சபரிமலைக்குப் புகழ். அதைப்போல, கற்பூர ஜோதியால் நம்ம அரசன்குடிக்குப் புகழை உண்டாக்கப் போகிறேன் என்று கிளம்பியிருக்கிறார் புதிய பூசாரி லட்சுமணன்.

கடலூர் மாவட்டம் மேற்கு கடைக்கோடி கிராமம் அரசன்குடி. இங்குள்ள கருப்பையா-கன்னியம்மாள் காவல் தெய்வங்கள்தான் சுற்றியுள்ள இருபது கிராமங்களுக்கும் சக்தியளிக்கும் தெய்வங்கள். இக்கோயிலின் பரம்பரை பூசாரி ராமலிங்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு அழையா பூசாரியாக வந்தார் லட்சுமணன்.

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் கற்பூரத்தை கோயில்களில் ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டதில் இருந்து, இக்கோயிலிலும் எண்ணெய் விளக்குதான் தீப ஆராதனையாக இருந்தது. லட்சுமணன் வந்ததிலிருந்து ஒவ்வொரு அமாவாசை இரவிலும் ஒரு கிலோ, இரண்டு கிலோ என்று ஆரம்பித்து, கடந்த அமாவாசை அன்று 50 கிலோ கற்பூரத்தை ஏற்றி ஊரையே மூச்சுத்திணறலுக்கு ஆளாக்கினார். அடுத்த அமாவாசைக்கு 100 கிலோ கற்பூரம் ஏற்றுவோம் என்று மக்களைப் பயமுறுத்தி கலெக்ஷன் செய்துகொண்டிருக்கிறார்.

இதைத் தடுத்து நிறுத்தக் கோரி வட்டாட்சியர் சந்தோஷினி சந்திராவிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள் சிலர்.

-எஸ்.பி.சேகர்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்

மிஸ் பண்ணிடாதீங்க