அழுதபிள்ளை பால் குடிக்கிறது!

loganathanவேலூர் அ.தி.மு.க. மா.செ.யும் அரக்கோணம் எம்.எல்.ஏ.வுமான ரவியிடம், தன்னை கே.வி.குப்பம் ஒ.செ.யாக்கும்படி கோரிக்கை வைத்தார் கே.வி.குப்பம் எம்.எல்.ஏ. லோகநாதன். ""முடியாது'' என கூறிவிட்டார் மா.செ.

""மணல் கடத்தும் சுபாஷை காட்பாடிக்கு ஒ.செ. ஆக்கினார் நம்ம மா.செ. ஆனால் எம்.எல்.ஏ.வான என்னை கே.வி.குப்பத்துக்கு ஒ.செ. ஆக்க மறுக்கிறார். அமைச்சர் வீரமணியும் என்னை மதிக்கலை. மா.செ. ரவியும் என்னை மதிக்கலை'' என்று இ.பி.எஸ்.ஸிடமும் ஓ.பி.எஸ்.ஸிடமும் புலம்பியிருக்கிறார். அவர்களுக்கு அவர்கள் பிரச்சினை.

எரிச்சலடைந்த எம்.எல்.ஏ. லோகநாதன், ஆகஸ்ட் 23-ல் நடந்த அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தைப் புறக்கணித்தார். அதோடு, ""என்னை அழைக்கிறது டி.டி.வி. தரப்பு'' என்ற தகவலையும் பறக்கவிட்டிருக்கிறார்.

Advertisment

பிறகென்ன? மேலிட உத்தரவின்படி எம்.எல்.ஏ. லோகநாதனை வெயிட்டாக சமாதானப்படுத்திக்கொண்டிருக்கிறார் அமைச்சர் வீரமணி.

-து.ராஜா

தாலிச்செயின் கொள்ளை!

Advertisment

தமிழகத்தில் தினமும் தாலிச்சங்கிலிப் பறிப்பு நடக்காத நகரமே இருக்காது. புதுக்கோட்டையில் கொஞ்சம் அதிகம். அதுவும், இப்போது அரசுப்பணி செய்யும் பெண்களை குறிவைத்து அறுக்கிறார்கள்.

25-8-18 சனிக்கிழமை, கந்தர்வகோட்டை தாலுகா குரும்பூண்டி கிராம நிர்வாக அலுவலர் ரேணுகாதேவியின் ஸ்கூட்டியை பின்தொடர்ந்திருக்கிறது ஒரு டூவீலர். ஆதனக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகில் வந்தபோது, ஐந்து பவுன் தாலிச்செயினை அறுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

மறுநாள் ஞாயிறு. புதுக்கோட்டை பெரியார் நகர் சத்துணவு அமைப்பாளர் ராணியின் தாலிச்செயினை பின்னால் வந்த இருவர் புத்தாம்பூரில் பற்றியிழுத்திருக்கிறார்கள். தாலிச்செயினை காப்பாற்றிக்கொண்டுவிட்டார் ராணி. ஆனால் இப்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.

அன்றுமாலை ராசியமங்கலம் வழக்கறிஞர் வினோத், தன் மனைவியோடு டூவீலரில் போகும்போது, தாலிச்செயின் பறிப்பு நடந்தது. வக்கீலும் மனைவியும் இப்போது ஆஸ்பிடலில்.

-இரா.பகத்சிங்

கறுப்புக்கொடி கேன்சல்!

governor

மாவட்டம்தோறும் ஆய்வு செய்வது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் வழக்கம். அவருக்கு மாவட்டம்தோறும் கறுப்புக்கொடி காட்டுவது தி.மு.க.வின் வழக்கம்.

கடந்த மாதம் நாமக்கல்லுக்கு வந்தார். கறுப்புக்கொடி காட்டி கைதானார்கள் உடன்பிறப்புகள். 29-ஆம் தேதி ஈரோட்டுக்கு வந்தார் ஆளுநர். கோபியில், விடுதலைப்போராட்ட வீரர் தியாகி லட்சுமண ஐயர் சிலையைத் திறந்து வைத்தார். ஈரோடு காளிங்கராயன் அரசு விடுதியில் அதிகாரிகளுடன் ஆலோசனை, பொதுமக்களிடம் மனு... பிறகு, ஏற்பாட்டின்படி ஈரோடு பேருந்து நிலையத்தில் குப்பை ஒதுக்கி தூய்மைப் பணியாற்றினார். மாலை 6 மணிவரை ஈரோட்டில் இருந்தார். அறிவித்தபடி கறுப்புக்கொடி காட்டுவார்களே! எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்தது காவல்துறை.

அப்புறம்தான் ""மா.செ. முத்துச்சாமி உட்பட எல்லாரும் மு.க.ஸ்டாலின் தலைவர் பதவியேற்பு விழாவுக்குப் போய்விட்டார்கள்'' என்ற தகவல் கிடைத்தது. அதிகாரிகளுக்கும் காவல்துறைக்கும் நிம்மதி.

-ஜீவாதங்கவேல்

""வண்டியை விட்டு இறங்கு!''

ttv

டி.டி.வி. தினகரன் வேளாவேளைக்கு, நேராநேரத்துக்குச் சாப்பிடும் பழக்கமுடையவர். சிவகங்கை மாவட்டத்திற்கு முதன்முறையாக வந்தார். செவ்வாய் இரவு காரைக்குடியில் தங்கினார்.

மறுநாள் காலை 19 கார்கள் தொடர மானகிரி, கல்லல் சோமநாதபுரம் நிகழ்ச்சிகள், பாகனேரியில் ஒரு திருமணம், கீழக்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு துவக்கி வைத்துவிட்டு வந்த வழியிலேயே தேவகோட்டைக்குப் பயணம். ஒத்தக்கடை தாண்டி சித்தானூரை நெருங்கியபோது மணி 2:30.

""சாப்பாடு... ஒரு பழமாச்சும் வாங்கி வச்சிருக்கக்கூடாதா?'' காரில் தன்னோடு இருந்த மா.செ. உமாதேவனிடமும் அம்மா பேரவை மாரியப்பன் கென்னடியிடமும் கேட்டார். ""இன்னும் இரண்டு ஊர்தான்... பிறகு தேவகோட்டைக்கு திரும்பி இரவுசேரியில் கட்சிக்காரர் வீட்டில் சாப்பாடு'' என்றார்கள்.

தலைவருக்கு பசி டென்ஷன். வண்டியை நிறுத்தச் சொன்னார். ""இறங்கி உங்க வண்டியில வாங்க'' மா.செ.வையும் மாரியப்பன் கென்னடியையும் இறக்கிவிட்டார். 4 மணிக்கு இரவுசேரியில் சாப்பாடு. சுமார் 150 பேர் சென்றார்கள். அங்கே 7 பேருக்கு தரையிலும் தலைவர் உட்பட 7 பேருக்கு டேபிளிலும் இலை போட்டிருந்தார்கள். மற்றவர்கள் வங்கொலை.

-நாகேந்திரன்

வாசல் தேடிவரும் போலீஸ்!

ஓ.பி.எஸ். தொகுதியான போடி நகரின் 33 வார்டுகளிலும் பிட் நோட்டீஸ் விநியோகித்துக்கொண்டிருக்கிறது போடிநகர் காவல்நிலையம்.

""உங்கள் வார்டுக்கு ஒரு போலீஸ்காரரை நியமித்திருக்கிறோம். அவருடைய போன்நம்பர் இதுதான்... திருட்டா, அடிதடியா, வேறு தகவலா? உங்கள் போலீஸ்காரருக்கு போன் செய்யுங்கள். அவர் உங்களை அழைத்துச் சென்று, சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டரிடம் நிறுத்துவார். அவர் நடவடிக்கை எடுப்பார்'' என்று அச்சிடப்பட்டிருக்கிறது அந்த பிட் நோட்டீஸில்.

33 வார்டுகளுக்கும் 33 காவலர்கள். போடியில் மட்டுமின்றி பெரியகுளத்திலுள்ள 32 வார்டுகளுக்கும் காவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். வழக்குப்பதிய வாசல்தேடி வருகிறது போலீஸ்.

""தமிழகம் முழுவதும் நடைமுறையாகும் திட்டம்தான். தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இதை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறோம்'' என்கிறார் டி.ஐ.ஜி. ஜே.ஜி.

-சக்தி