மிழகம் முழுவதிலும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, நடந்து முடிந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டு, மறுதேர்தல் நடத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்தமுறையும் கூட்டுறவு சங்கத் தேர்தல் பல்வேறு கோல்மால்களை எதிர்கொண்டிருக்கிறது.

ministers

அமைச்சர்கள் மோதலில் ந.செ.வுக்கு ஆப்பு!

வேலூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி கூட்டுறவு வங்கி மிக முக்கியமானது. இந்த வங்கியில் மிகவும் கவுரவமான தலைவர் பதவியை அடைந்துவிட தி.மு.க. நகரப் பொறுப்பாளர் சாரதிகுமார் அணியும், அ.தி.மு.க. நகரச்செயலாளர் சதாசிவம் அணியும் மும்முரம் காட்டியது. வாணியம்பாடி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான நிலோபர்கபில், என்ன நடந்தாலும் தலைவர், துணைத்தலைவர் பதவிகளை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது என சதாசிவத்திடம் வலியுறுத்தியிருந்தார். அதற்கு ஏதுவாக, அ.தி.மு.க., தி.மு.க. இடையே இயக்குநர்கள் சீட் பேச்சுவார்த்தை முடிந்து, அ.தி.மு.க. 6, தி.மு.க. 4, ம.தி.மு.க. 1 என 11 இயக்குநர்கள் அன்னப்போஸ்டாக தேர்வுசெய்யப்பட்டனர்.

vetrikumarஆனால், தேர்தல் நடத்துவதற்கு முன்பே உயர்நீதிமன்றத்தின் தடை குறுக்கிட்டது. ஒருவழியாக தடைநீங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெற்ற நிர்வாகிகளுக்கான தேர்தலில், அமைச்சர் வீரமணி ஆதரவாளரான ந.செ. சதாசிவம் தலைவர் பதவிக்கும், அமைச்சர் நிலோபர் கபில் ஆதரவாளரான தென்னரசு துணைத்தலைவர் பதவிக்கும் மனுத்தாக்கல் செய்தனர். பலமில்லாத தி.மு.க. சார்பில் தலைவர் பதவிக்கு சாரதிகுமாரும், துணைத்தலைவர் பதவிக்கு ம.தி.மு.க.வின் நாசீர்கானும் நின்றனர். தோற்கிறதுக்குன்னே வருவாங்க போல என இவர்களைப் பார்த்து ஆளுந்தரப்பு கிண்டலடித்ததையும் பார்க்க முடிந்தது.

இந்தத் தேர்தலில் எதிர்பாராத விதமாக தி.மு.க. சாரதிகுமார் வெற்றிபெற்று தலைவரானார். துணைத்தலைவராக அ.தி.மு.க. தென்னரசு தேர்ந்தெடுக்கப்பட்டார். “"எங்ககிட்ட 6 இயக்குநர்கள் இருக்காங்க. துணைத்தலைவரா எங்காளு ஜெயிச்சிருக்கும்போது, தலைவர் பதவியில் மட்டும் தி.மு.க. எப்படி ஜெயிக்கும்?'’என சதாசிவம் அதிகாரிகளிடம் ஆத்திரம் காட்டியதோடு, ‘தேர்தல் செல்லாது’ என சண்டையும் போட்டார். ஆனால், "உங்காளு ஒருத்தர்தான் மாத்தி ஓட்டுப் போட்டிருக்காரு. நியாயமா பார்த்தா நீங்க அங்கதான் கேட்கணும்'’என அதிகாரிகள் பதில் சொல்ல அதிர்ச்சியானார் சதாசிவம்.

இதுபற்றி அ.தி.மு.க. தரப்பில் விசாரித்தபோது, ""அமைச்சர்கள் வீரமணியும், நிலோபர்கபிலும் எலியும் பூனையுமா இருக்காங்க. கூட்டுறவுத் தேர்தலுக்கு முன்னாடி நிலோபர்கபில் சதாசிவத்தை அழைத்து, "தலைவரா இருக்கணுமா, ந.செ. பதவி வேணுமான்னு கேட்க... அவர் "ரெண்டுமே வேணும்'னு சொல்லியிருக்காரு. "துணைத்தலைவரா ஆகிக்கோங்க, தலைவரா என் ஆதரவாளர் நிக்கட்டும்'னு அந்தம்மா வற்புறுத்த, இவர் அதை மறுத்துவிட்டு வீரமணிகிட்ட முறையிட்டாரு. அவரோ "நம்மகிட்டதான் பலமிருக்கு, நீ தைரியமா நில்லு'ன்னு தைரியம் கொடுத்து அனுப்பியிருக்காரு. இதனால், கடுப்பான நிலோபர்கபில், "தி.மு.க. ஜெயிச்சாக்கூட பரவாயில்லை. சதாசிவம் தோற்கணும்'னு சொல்லி, தலைவர் பதவிக்கு மட்டும் மாத்தி ஓட்டுப்போட வச்சிருச்சு. அந்தம்மாவோட சதிதான் தன் தோல்விக்குக் காரணம்னு சதாசிவம், வீரமணிகிட்ட கண்ணைக் கசக்க... "பொறுமையா இரு. நேரம் வரும்போது பார்த்துக்கலாம்'னு சொல்லியிருக்கார்''’என்கின்றனர்.

அமைச்சர் ஆதரவாளரை வீழ்த்திய மா.செ. ஆதரவாளர்!

ஒருபுறம் அமைச்சர்களுக்கிடையே மோதல் என்றால், திருச்சியில் அமைச்சர், மா.செ. ஆதரவாளர்கள் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடும் விநோத சம்பவமும் அரங்கேறியது.

திருச்சி மாவட்டம் புத்தூர் நகர கூட்டுறவு வங்கியில் மாற்றுக்கட்சியினர் யாரையும் போட்டியிட விடாமல், அமைச்சர் வளர்மதியின் ஆதரவாளர்கள் அக்தர், சாந்தி ஆகியோரும், அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் ஆதரவாளர்கள் சுரேஷ்குப்தா, காமராஜ், டி.கே.அய்யாச்சாமியின் மனைவி, உய்யகொண்டான் செல்வராஜ் ஆகியோரும், மா.செ. குமாரின் ஆதரவாளர் பத்மநாபன் உள்ளிட்ட கட்சி ஆட்களையே தங்களுக்குள் பேசி முடித்து இயக்குனர்களாக நியமித்தனர். இவர்கள்தான் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தலில் வாக்களிப்பார்கள் என்பதால், எந்தவித பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை என்றே எதிர்பார்க்கப்பட்டது.

முதலில் மா.செ. குமார் தனது ஆதரவாளர் பத்மநாபனை தலைவர் பதவிக்கு சிபாரிசு செய்தார். ஆனால், "வெல்லமண்டி நடராஜன் என்னைத்தான் நிற்கச் சொல்லியிருக்கிறார்' என அவரது ஆதரவாளர் சுரேஷ்குப்தாவும் அதே பதவிக்கு மனுத்தாக்கல் செய்தார். எப்படியும் தினகரன் அணியிலிருந்து ஏதாவதொரு பிரச்சனை வருமென்று பார்த்தால், அமைச்சர் - மா.செ. இடையே போட்டி உருவாகி பரபரப்பைக் கிளப்பியது. இறுதியில் மா.செ. குமார் முன்னிறுத்திய பத்மநாபன் 7 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். எதிர்க்கட்சிகள் யாரும் போட்டியிடாத தேர்தலில், உட்கட்சிக்குள்ளேயே கோஷ்டி மோதல் நடந்து, சொந்தக் கட்சிக்காரரே மண்ணைக் கவ்வியிருக்கிறார் என்ற அதிருப்தியில் உள்ளனர் அ.தி.மு.க.வினர்.

வாக்குப்பெட்டி திருட்டு!

பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம கூட்டுறவு சங்கம், மீனவர் சங்கம், வீட்டுவசதி உட்பட 240 சங்கங்கள் இருக்கின்றன. கடந்த மே மாதம் பல சங்கங்களில் தேர்தல் ரத்தானது. குறிப்பாக குன்னத்தில் மே 31-ல் நடக்கவிருந்த தேர்தலில், தி.மு.க.வினர் பெருமளவில் மனுத்தாக்கல் செய்தனர். இதனால் மிரண்டுபோன அதிகாரிகள் தேர்தல் நடத்தவே வரவில்லை. இதைக் கண்டித்து தி.மு.க. மா.செ. ராசேந்திரன் சாலைமறியல் நடத்தினார். சங்கம் பூட்டப்பட்டு, தேர்தலும் ரத்தானது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி அ.தி.மு.க.வினர் 11 பேரை இயக்குனர்களாக தேர்வு செய்துள்ளதாக நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டது. தேர்தல் நடத்தாமலேயே அறிவிப்பு வெளியிடுவதா எனக்கேட்ட மற்ற கட்சியினர், அதைக் கிழித்தெறிந்தனர்.

ministers

Advertisment

வடக்கநந்தலில் அ.தி.மு.க., தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது. கட்சிரீதியில் இயக்குநர் பதவியைப் பங்குபோடும் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், அங்கு தேர்தல் கிடப்பில் போடப்பட்டது. சின்னசேலம், கண்டாச்சிபுரம் உள்ளிட்ட பல இடங்களில் தன்னிச்சையாக இயக்குனர்களைத் தேர்வுசெய்து நோட்டீஸ் ஒட்டும் வேலையும் நடந்தது. இதன் விளைவாக அங்கும் தேர்தல் நடக்கவில்லை.

பெண்ணாடம் அருகேயுள்ள எறையூரில் கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெற்றது. தேர்தல் இயல்பாக நடந்துகொண்டிருந்தபோது, தலைவராக சுப்பிரமணியன் என்பவரை நியமிக்கவேண்டும் எனக்கூறி, அ.தி.மு.க. தொழிற்சங்க செயலாளரான வாசு ராமச்சந்திரன் கூச்சல் போட்டார். அவரைக் கட்டுப்படுத்த முயன்றபோது வாக்குப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகினார். காவல்துறையிடம் புகார் கொடுத்து தேடுதல் வேட்டை நடந்தது. அதற்குள் நல்லூர் அ.தி.மு.க. ஒ.செ. ராசேந்திரன் தலைமையில் காவல்நிலையம் முன்பு அ.தி.மு.க.வினர் குவிந்தனர். அங்கு அழைத்துவரப்பட்ட ராமச்சந்திரனை விடுவிக்கக் கோரியவர்கள், "ஒரே கட்சி விவகாரம் ; பிரச்சனை வேண்டாம்' எனக்கூறி புகாரை வாபஸ் வாங்கினர். இதையடுத்து ராமச்சந்திரனை கண்டித்து அனுப்பிவிட்டது காவல்துறை.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகேயுள்ள வி.சாத்தமங்கலம் கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தலை நடத்தாமலேயே தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். இதனால் ஆத்திரமடைந்த சங்க உறுப்பினர்கள் சங்கத்தை முற்றுகையிட, காவல்துறை சமாதானம் பேசியும் கலையவில்லை. பின்னர் வரவழைக்கப்பட்ட அதிகாரிகள், "ஒட்டப்பட்ட நோட்டீஸை கிழித்துப் போட்டுவிட்டு, தேர்தல் முறையாக நடத்தப்படும்' என கூறிச் சென்றுள்ளனர்.

அதிகார வெறியும், மோதல்களும் ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் என்பதற்கு நல்ல உதாரணமாக இருக்கிறது கூட்டுறவு சங்கத் தேர்தல்.

-எஸ்.பி.சேகர், து.ராஜா, ஜெ.டி.ஆர்.