ஒருவழியாக வெளியாகிறார் மாமனிதன்!

உதயநிதியுடன் "கண்ணே கலைமானே' முடித்தவுடன் விஜய் சேதுபதியுடன் "மாமனிதன்' படத்தை தொடங்கியிருந்தார் சீனு ராமசாமி. இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். யுவன்சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இளையராஜா, யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா மூவரும் இணைந்து இசையமைக்க வுள்ளதாக முதலில் கூறப்பட்ட நிலையில்... இளைய ராஜாவும் யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து இசை யமைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கிய படக்குழு, 37 நாட்களில் மொத்தப் படப்பிடிப்பையும் நிறைவு செய்தது. அதே எக்ஸ்பிரஸ் வேகத்தில் படம் ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஃபைனான்ஸ் பிரச்சினை உள்பட, பல காரணங்களால் ஸ்டேஷனிலேயே நிற்கிறது "மாமனிதன்'.

cinema

"மாமனிதன்' படத்தின் பணிகளை மீண்டும் தொடங்குவதில் நிலவிவந்த இழுபறியை அடுத்து, ஜி.வி.பிரகாஷுடன் கைகோர்த்து தன்னுடைய அடுத்த படமாக "இடி முழக்கம்' படத்தைத் தொடங்கினார் சீனு ராமசாமி. அப்படத்தின் படப்பிடிப்பும் நிறைவுபெற்று, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில்... "மாமனிதன்' படம் ரிலீசிற் குத் தயாராகிவருவதாக இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மாமனிதன்' திரைப்படம் அடுத்த வாரம் சென்சாருக்கு அனுப்பப்பட வுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

வீ ஸ்டாண்ட் வித்....

சூர்யாவின் "ஜெய் பீம்'’திரைப்படம் கடந்த 2-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி பெரும் விவாதங்களை உருவாக்கி யுள்ளது. பழங்குடியின மக்களுக்கு இழைக்கப் படும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் வழக்கறிஞராக சூர்யா நடித்திருக்கும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்களைத் தாண்டி திரை விமர்சகர்கள், அரசியல் பிரமுகர்கள் என இந்தியா முழுவதுமிருந்து பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. அதே நேரத்தில், படத்தில் எதிர்மறை கதாபாத்திரமாக வரும் காவல் ஆய்வாளர் குருமூர்த்தி, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவராகத் திட்டமிட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகச் சர்ச்சையும் வெடித்தது. இது தொடர்பாக வன்னியர் சங்க அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததையடுத்து, குறிப்பிட்ட ஒரு காட்சியில் இடம்பெற்றிருந்த காலண்டர் நீக்கப்பட்டது. அண்மையில், பா.ம.க.வின் இளைஞரணிச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், "ஜெய் பீம்' படம் தொடர்பாக விளக்கம் கேட்டு நடிகர் சூர்யாவிற்கு ஒன்பது கேள்விகளுடன் கூடிய நான்குபக்க கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அன்புமணி ராமதாஸின் அந்தக் கடிதத்திற்கு நடிகர் சூர்யாவும் விளக்கமளித் திருந்தார். இருப்பினும், இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.

cinema

Advertisment

இதற்கிடையே, நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என பா.ம.க மாவட்ட செயலாளர் ஒருவர் தெரிவித்தது, எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் வகையில் அமைந்தது. மேலும், இந்த விவகாரத்தில் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் யாரும் கருத்து தெரிவிக்காதது குறித்து சூர்யா ரசிகர்கள் தங்களது அதிருப்தியை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தினர். இந்த நிலையில், பா.ம.க மாவட்ட செயலாளரின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாகவும் திரைத்துறை வட்டாரத்தில் இருந்து குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன. இயக்குநர்கள் வெங்கட் பிரபு, பா.ரஞ்சித் உள்ளிட்ட பலரும் சூர்யாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் இது தொடர்பாக அன்புமணி ராமதாஸிற்கு கடிதம் எழுதியுள்ளது.'we stand with surya'என்ற ஹேஷ்டேக்கில் பலரும் தங்களது ஆதரவை நடிகர் சூர்யாவிற்கு தெரிவித்து வருகின்றனர். எதிர்த்தரப்பு, 'we stand with anbumani' என்று கிளம்பியுள்ளது.

வருகிறார் மேதகு!

cinema

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட "மேதகு' திரைப்படம், கடந்த ஜூன் மாதம் பி.எஸ். வேல்யூ ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. பிரபாகரனின் இளமைப் பருவத்தில் தொடங்கி, யாழ்ப்பாண மேயர் ஆல்பர்ட் துரையப்பாவை சுட்டுக் கொல்வதோடு நிறைவடையும் இப்படத்தில், "பிரபாகரன் எப்படி போராளியாக உருவெடுத்தார்' என்பதை காட்சிப்படுத்தியிருப்பார்கள். கிரௌட் ஃபண்டிங் முறையில் நிதி திரட்டி தயாரிக்கப்பட்ட இப்படத்தை, கிட்டு இயக்கியிருந்தார். தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருந்த நிலையில்... "மேதகு' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. "மேதகு 2' ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் மற்றும் நடிகர் சசிகுமார் படக்குழுவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். "மேதகு 2' படத்தின் முன்னோட்டம், பிரபாகரனின் பிறந்ததினமான நவம்பர் 26-ஆம் தேதி வெளியாகவுள்ளதாகப் படக் குழு அறிவித்துள்ளது.

-இரா.சிவா