கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் "மகான்'. சிம்ரன், வாணிபோஜன், பாபிசிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
விக்ரம், துருவ் கூட்டணியில் இப்படம் உருவாவதாக அறிவிப்பு வெளியானதிலிருந்தே, இதன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதன் பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து, விக்ரம், துருவ் இருவரும் டப்பிங் பணிகளை முடித்துள்ள சூழலில்... சந்தோஷ் நாராயணன் இசையில் துருவ் இப்படத்தில் பாடல் ஒன்றை பாடவுள்ளாராம். இளைஞர்களைக் கவரும் விதத்தில் துள்ளல் இசையோடு இப்பாடல் உருவாகிறதாம். மேலும், அண்மையில் நடைபெற்ற இப்படத் தின் தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், படத்தை நேரடியாக ஓ.டி.டி.-யில் வெளியிடத் திட்டமிட்டுள்ள படக்குழு, அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளதாம்.
தனுஷ் இந்தியில் நடித்த "அத்ராங்கி ரே' படம் அண்மையில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கும் "திருச்சிற்றம்பலம்', செல்வராகவனின் "நானே வருவேன்' ஆகிய படங்களில் நடித்துவரும் தனுஷ், தனது அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தெலுங்கு, தமிழ் மொழிகளில் தயாராகும் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள தனுஷ், அடுத்ததாக "ராக்கி', "சாணிக்காயிதம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் எனத் தகவல்கள் பரவி வந்தன. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வராமல் இருந்த சூழலில், "அந்த தகவல் உண்மைதான்' எனக் கூறி, படத்தை உறுதி செய்துள்ளார் தனுஷ். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாகத் தெரிகிறது.
பாலிவுட் நடிகையாக இருந்தாலும் இந்தியா முழுவதும் இளைஞர்களிடையே பிரபல மானவர் நடிகை கத்ரினா கைப். அண்மையில் பாலிவுட் நடிகர் விக்கி கௌஷலை திருமணம் செய்துகொண்ட இவர், தொடர்ந்து திரைப்படங் களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். திருமணம் முடிந்த பிறகான தனது முதல் திரைப்பட அறிவிப்பை அண்மையில் வெளியிட்டார் கத்ரினா கைப். அதன்படி, நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் ‘"மெர்ரி கிறிஸ்துமஸ்'’ படத்தில் நாயகியாக நடிக்கிறார் கத்ரினா. "பத்லாபூர்', "அந்தாதுன்' போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இப்படத்தை இயக்க உள்ளார்.
ஏற்கனவே "மும்பைக்கர்' இந்தி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் விஜய் சேதுபதி, இப்படத்தின் மூலமாகக் கதையின் நாயகனாக பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையில் இத்திரைப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு.
பஷில் ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் அண்மையில் வெளியான "மின்னல் முரளி' திரைப்படம், இந்தியா முழுவதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. "மார்வெல்', "டி.சி.' படங்களைப் போல சூப்பர் ஹீரோ கதை என்றாலும், பில்டப் சீன்களுக்கும், அதிரடி சண்டைக் காட்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் தராமல், கதையையும், நடிகர்களின் நடிப்பையும் பிரதானமாக வைத்து எடுக்கப் பட்டுள்ள இந்த திரைப்படம், பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. குறிப்பாக ஹீரோ டொவினோ தாமஸ் மற்றும் வில்லன் குரு சோமசுந்தரத்தின் நடிப்பு பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
"ஆரண்ய காண்டம்', "ஜோக்கர்' உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் தனது நடிப்பின் காரணமாகப் பேசப்பட்ட குரு சோமசுந்தரத்திற்கு இப்படம் மலையாளத்திலும், தற்போது நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளதாம். இதன் காரணமாக நடிகர் மோகன்லால் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பும் குரு சோமசுந்தரத்திற்கு கிடைத்துள்ளதாம். "மின்னல் முரளி'யில் குரு சோமசுந்தரத்தின் நடிப்பைப் பார்த்து வியந்த மோகன்லால், தான் இயக்கி நடிக்கும் "பரோஸ்' படத்தில் அவருக்கு ஒரு வேடம் தந்திருக்கிறார். இது மட்டுமல்லாமல், இப்படத்தில் தனது நடிப்பால் பலரையும் கவர்ந்துள்ள குரு சோமசுந்தரம், பல முன்னணி தமிழ் மற்றும் மலையாள இயக்குநர்களின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியுள்ளாராம்.
-எம்.கே.