கடந்த ஜூலை 8-10 தேதியிட்ட நக்கீரனில் "தில்லா லங்கடி தில்லுமுல்லு திருகு ஜாலம்' என்ற தலைப்பில் கோலிவுட் ஏரியாவின் 3 செய்திகளை வெளியிட்டிருந்தோம். அதில் வரலட்சுமி நடித்த ‘ராஜபார்வை’ படத்தின் விநியோக உரிமையில் நடந்த தில்லுமுல்லு செய்தியும் ஒன்று.
“படத்தின் தயாரிப்பாளர் பாபுரெட்டி தன்னிடம் 10 லட்சம் வாங்கிவிட்டு, விஜயராகேஷ் ரங்கப்பா என்பவரிடமும் 5 லட்ச ரூபாய் அட்வான்ஸ் வாங்கி வெளிநாட்டு விநியோக உரிமையை விற்று என்னை மோசடி செய்துவிட்டார். எனவே ‘ராஜ பார்வை’ படத்தை ஓ.டி.டி. பிளாட்பார்மில் வெளியிட தடை விதிக்க வேண்டும்’’என சினிமா சங்கங் களிடமும் சென்னை போலீஸ் கமிஷனரிடமும் புகார் கொடுத்திருந் தார் மலேசியா பாண்டியன் என்பவர். இதையும் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
இந்த நிலையில் வரலட்சுமி ஹீரோயினாக நடித்த "டேனி' படத்தின் டீசர் ஜூலை 7-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆகும், படம் ஆகஸ்ட் மாதம் ஜி-5 ஒரிஜினல்’ ஓ.டி.டி. பிளாட்பார்மில் ரிலீஸாகும் என ஜூலை முதல் வாரத்திலிருந்தே பத்திரிகைகளில் விளம் பரம் கொடுத்துவந்தார் படத்தின் தயாரிப்பாள ரான கேமராமேன் பி.ஜி. முத்தையா.
"ராஜ பார்வை' பஞ்சாயத்து ஒருபக்கம் நடந்துகொண்டிருந்த நிலை யில்தான் நமது செய்தியும் வெளியானது. இதைப் பார்த்து அதிர்ந்துபோனார் பி.ஜி. முத்தையா. காரணம், சினிமா டிஸ்ட்ரிபியூஷன் பாணியைத் தான் ஓ.டி.டி. பிளாட் பார்மிலும் கடைபிடிக்கிறார்களாம். அதாவது ஒரு ஹீரோ, அல்லது ஹீரோயின் நடித்த இரு படங்களில் ஏதாவது ஒரு படத்திற்கு பஞ்சாயத்து நடந்தால், அந்தப் பஞ்சாயத்து முடியும்வரை அடுத்த படத்தை வாங்கமாட்டார்களாம்.
‘சில கோடிகள் கடன்பட்டு "டேனி' படத்தை எடுத்து முடித்தும் தியேட்டர்ல ரிலீஸ் பண்ண முடியல. இந்த நேரத்துல ஓ.டி.டி.யி லாவது வெளியிடலாம்னு நினைச்சா அதுக்கும் மண்டையிடி வந்துடுச்சே’ என ஃபீல்பண்ணிய முத்தையா, ‘திட்டமிட்டபடி "டேனி'யின் டீஸரை ரிலீஸ்பண்ண முடியல. வேறொரு நாளில் ரிலீஸாகும்’என தனது டுவீட்டரில் போட்டு விட்டு ஆஃப் ஆகிவிட்டார்.
"ராஜ பார்வை' பஞ்சாயத்து எப்படிப் போகுது? என மலேசியா பாண்டிய னிடம் கேட்டோம்.
""10 லட்சத்துக்கு ஒரு வருஷ வட்டியுடன் சேர்த்து 13.5 லட்சம் தர்றதா பாபுரெட்டி ஒத்துக்கிட்டாரு. ஆனா ரெட்டியுடன் இருப்பவர்களும், வரலட்சுமியை சுற்றியிருப்பவர்களும் வட்டியெல்லாம் கொடுக்கக்கூடாது. அசலை மட்டும் கொடுத்தாபோதும்னு பிரேக் போடுகிறார்கள். அதிலும் சென்னைக்கு வந்தா யூனியன் மூலமாத்தான் கொடுப்போம் என்கிறார்கள். இப்போ மதுரையில் இருக்கும் ஊரடங்கால் எப்படி நான் சென்னைக்குப் போகமுடியும்?'' என்கிறார்.
இது நடிகர் விஷாலின் விபரீத விளையாட்டு சங்கதி. சென்னை வடபழனி குமரன் காலனியில் தனது சினிமா தயாரிப்பு நிறுவனமான "விஷால் ஃபிலிம் பேக்டரி' அலுவலகத்தை நடத்திவருகிறார் விஷால். இப்போது "இரும்புத்திரை-2', "சக்ரா'’ என இரு படங்களையும் மெகா பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார். விஷாலின் இந்த தயாரிப்பு நிறுவனத் தில் ரூ.45 லட்சம் கையாடல் நடந்துள்ளது. ‘அலுவலக கணக்குவழக்குகளை பார்த்துவந்த ஒரு பெண் ஊழியர் மற்றும் சில ஊழியர்கள் மீது சந்தேகம் உள்ளது. எனவே அவர்களிடம் விசாரிக்க வேண்டும்’ என வடபழநி உதவி கமிஷனரிடம் கடந்த வாரம் புகார் கொடுத்தார் விஷாலின் மேனேஜர் ஹரி.
“அந்த பெண் ஊழியரின் செல்போன் சிக்னலை டிரேஸ்அவுட் பண்ணிவருகிறோம். விரைவில் அவரை பிடித்துவிடுவோம்’’ என போலீஸாரும் சொன்னார்கள்.
மேற்படி விவகாரம் குறித்து விஷால் அலுவலக வட்டாரத்திலும், தயாரிப்பு நிர்வாகிகள் வட்டாரத்திலும் உள்ள சிலரிடம் பேசினோம்.
“நடிகர் சங்க செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் சிறப்பாகத்தான் செயல்பட்டார் விஷால். ஆனா ரெண்டு சங்கத்திலயும் அவருக்கு ஏற்பட்ட குடைச்சலால் ரொம்பவே அப்செட் ஆயிட்டாரு. சினிமா ஃபைனான்ஸியர் மதுரை அன்புவிடம் பல கோடி ரூபாய் கடன் வாங்கி அடைக்க முடியாத நொம்பலத்திலும் இருந்தார். ஒருகட்டத்தில் மதுரை அன்புவின் நெருக்கடி அதிகரித்தபோது, அப்போது தன்னிடம் மேனேஜராக இருந்த முருகராஜ் 18 கோடியை சுருட்டிவிட்டு ஓடிவிட்டதாக சொல்லி அன்புவை டைவர்ட் பண்ணினார். அதன்பின்னர் ஹைதராபாத் தொழிலதிபர் ஒருவரின் மகளுக்கும் விஷாலுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பட்ட கடனை அடைப்பதற்காக மிகப்பெரிய தொகையை வரதட்சணையாக விஷால் கேட்டதால் விக்கித்துப்போன அந்த தொழிலதிபர், கல்யாணத்தையே நிறுத்திவிட்டார்.
அதனால் விஷாலின் இந்த விபரீத விளையாட்டுகள் இந்த 45 லட்சம் மேட்டரிலும் நடந்திருக்கலாம். பெண் ஊழியர் சீதாவிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) விசாரித்தால் எல்லா உண்மைகளும் வெளிவரும்’என்கின்றன.
மேற்கண்ட செய்திகளைப் பற்றி நாம் சொல்றதுக்கு என்ன இருக்கு?
-ஈ.பா.பரமேஷ்வரன்