கொடநாடு கொள்ளை முயற்சியின் தொடர்ச்சியாக மொத்தம் 5 மரணங்கள் நடந்துள்ளன. இதில், கொலை, விபத்து, தற்கொலை எனச் சொல்லப்பட்டவை உண்டு. டிரைவர் கனகராஜின் மரணம் போலீசாரால் கொலை வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது. கனகராஜின் சகோதரர்களான தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த கனகராஜின் குடும்பமே சேர்ந்து, எடப்பாடி தரப்புக்காக கொடநாடு கொலை, கொள்ளையை மறைப்பதற்கு கனகராஜை கொலை செய்தது. அதற்கு சேலம் இளங்கோவனின் ஆட்கள் உதவி செய்தனர் என்பதுதான் கனகராஜ் கொலை வழக்கின் தற்போதைய விசாரணைப் போக்கு.

dd

கொடநாட்டை அடுத்த கெங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ். 27 வயதான தினேஷ், கொடநாடு எஸ்டேட்டில் பல வருடங்களாக வேலை பார்த்து வந்தார். கொடநாடு மேனேஜர் நடராஜனுக்கு அடுத்தபடியாக கொடநாடு எஸ்டேட்டில் அனைத்து வேலைகளையும் பார்த்து வந்த தினேஷ், கொடநாடு கொள்ளை சம்பவத்திற்குப் பிறகு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கான காரணம், என்னவென்றே தெரியாமல் மர்மமாகவே இருந்தது.

தற்கொலை வழக்கை விசாரித்த சோளுர் மட்டம் காவல் ஆய்வாளர் வேல்முருகன் தினேஷின் தற்கொலைக்குக் காரணம், "தனக்கு கண் பார்வை சரியாக தெரியவில்லை என்கிற வருத்தமும், அவர் ஒரு பெண்ணை காதலித்தார்... அந்தப் பெண் அவர் இறப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பு அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார் என்கிற வருத்தமும்' என, இந்த இரண்டு காரணங்கள்தான் தினேஷைத் தற்கொலைக்குத் தூண்டியுள்ளது என காவல் துறை உயரதிகாரிகளிடம் தெரிவித்தார். காவல்துறை உயரதிகாரிகள் தினேஷின் தற்கொலைக்கு சொந்தக் காரணங்கள்தான் காரணம் என நம்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், நாம் தினேஷின் சொந்த ஊரான கெங்கரைக்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்தோம்.

Advertisment

kk

தினேஷின் தந்தை போஜனை சந்தித்துக் கேட்டோம். அவர் நம்மிடம், "சொந்த காரணங்களுக்காக தினேஷ் தற்கொலை செய்துகொண்டார் என சொல்வது தவறு. எந்த சொந்த காரணங்களுக்காக தினேஷ் தற்கொலை செய்துகொண்டாரென்பதை காவல்துறை விளக்க வேண்டும் என சவால்விட்டார். இந்த சூழ்நிலையில், 2019-ஆம் ஆண்டு கொடநாடு சம்பவத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ள தொடர்புகளைப் பற்றி முதலில் வெளிக்கொண்டு வந்த மேத்யூ சாமுவேல் டீமில் இடம்பெற்ற லிவின் என்பவர் சந்தித்தார். அவரிடம் போஜனைப் பற்றி கேட்டோம்.

"தினேஷ் தற்கொலை யில் நிறைய சந்தேகங்கள் இருந்தன. அப்போது கொடநாடு மேனேஜர் நடராஜன் தினேஷை திட்டியிருக்கிறார். அத னால்தான் தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். கொடநாடு சம்பவத்தில் சி.சி.டி.வி.க்கள் இயங்கவில்லை. கொள்ளை நடந்தபோது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது போன்ற விஷயங்கள் வெளியே வந்தது.

Advertisment

இவை எல்லாவற்றுக்கும் காரணம் நடராஜனே என சொல்லப்பட்டது. அந்த நேரம் தினேஷ் வேலைக்குச் செல்ல வில்லை. கொள்ளை நடந்தபிறகு வேலைக்குச் சென்ற தினேஷுக் கும் நடராஜனுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. அந்த வாக்குவாதத்தின் எதிரொலியாக தினேஷ் தற்கொலை செய்துகொண்டார் என கூறப்பட்டது.

;;

ஒரு கட்டத்துக்கு மேல் தினேஷை யாரோ சிலர் கட்டாயப்படுத்தி அவரது மரணத்தை, தூக்கிலிடப்பட்ட மரணமாக மாற்றியிருக் கிறார்கள் என சொல்லப்பட்டது. நான் தினேஷின் தந்தை போஜனை சந்தித்தேன். அப்போது அந்த பகுதியிலிருந்த அ.தி.மு.க.வினர், போஜன் என்னிடம் பேச முடியாத அளவிற்கு கலாட்டா செய்தார்கள். அப்பொழுதும் போஜன் தளரவில்லை. அவர் என்னிடம், தினேஷ் சொந்த காரணங்களுக்காக சாக வில்லை. எஸ்டேட்டில் ஏதோ நடந்திருக்கிறது என்று சொன்னார்.

தினேஷ் படுகர் இனத்தைச் சார்ந்தவர். சாதாரண டிரைவரான அவரது தந்தை போஜன் மிகவும் கஷ்டப்பட்டு தினேஷையும் அவரது சகோதரியையும் படிக்க வைத்திருக்கிறார். கொடநாட்டில் வேலைக்குப் போன தினேசிற்கு கண் பார்வையில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அதற்காக அவர் ஆபரேஷன் செய்திருக்கிறார். அதன்பிறகே தற்கொலை செய்துகொண்டார். அந்த தற்கொலைக்குப் பிறகே தினேஷின் குடும்பத்தினர் கெங்கரை பகுதி அ.தி.மு.க. வினரால் கடுமையாக மிரட்டப்பட்டார்கள்.

பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது என அவர்கள் கொடுத்த அழுத்தத்தை பார்த்தபோது, இவர்கள் தினேஷின் தற்கொலைக்கு காரணமாக இருப்பார்கள் என்கிற சந்தேகம் ஏற்பட்டது. தினேஷின் மரணம் கொலையா? தற்கொலையா? என்கிற சந்தேகம் எனக்கு உருவானது. கொடநாடு கொள்ளை சம்பவத்தில் நடந்தவற்றை மறைக்க தினேஷ் தற்கொலை என்ற பெயரில் கொல்லப்பட்டிருக்கலாம் என நான் சந்தேகிக்கிறேன்'' என்றார் லிபின்.

கொடநாடு எஸ்டேட்டில் விழிப்புடன் வேலை பார்த்தவர் பிரதீப் ராஜா. அவர் தினேஷின் தற்கொலையைப் பற்றி நம்மிடம் பேசினார். "தினேஷ் காதல் தோல்வியின் காரணமாக தற்கொலை செய்து கொள்ள வில்லை. அவர் தற்கொலை செய்வதற்கு முன்தினம் அவர் காதலித்த பெண்ணோடு சிரித்து பேசிக் கொண்டிருந்ததை பார்த்ததாக எஸ்டேட் ஊழியர்கள் தெரிவித்தனர். கொடநாடு கொள்ளை நடந்தபிறகு கொடநாடு மேனேஜர் நடராஜன் முகத்தில் இப்படியொரு பெரிய சம்பவம் நடந்த சுவடுகளே காணப்படவில்லை.

தினேஷ் தற்கொலைக்குப் பிறகு சுமார் 50 லட்சம் ரூபாய் தினேஷின் தந்தையான போஜனுக்கு கொடுக்கப்பட்டது. அதை வைத்து அவர் நிலம் வாங்கியிருக்கிறார். தினேஷின் வீடு புதிதாக கட்டப்பட்டு வருகிறது என எஸ்டேட் ஊழியர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். தினேசுடன் நான் மூன்றரை வருடம் பணிபுரிந் தேன். அவர் என்னிடம் நன்றாக பேசுவார். எதிலும் தோல்வியடையக் கூடாது என்கிற மனநிலையை கொண்டவர் தினேஷ். காலையில் நாங்கள் வருவதற்கு முன்பே வேலைக்கு வரும் தினேஷ், நாங்கள் பணி முடித்து சென்ற பிறகுதான் வீட்டிற்கு செல்வார். எனது வீடு கொடநாடு எஸ்டேட்டிற்கு அருகில் உள்ளது.

தினேஷின் கிராமம் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து எனக்கு முன்பே வேலைக்கு வந்துவிடுவார். கொடநாடு கொள்ளை நடந்த பிறகு நடராஜனுக்கும் அவருக்கும் இடையே ஏதோ நடந்திருக்கிறது. அதன் விளைவாகத்தான் தினேஷின் மரணம் ஏற்பட்டிருக்கிறது என நான் சந்தேகிக்கிறேன்'' என்றார்.

தினேஷின் தந்தை போஜன் தினேஷ், தற்கொலை பற்றி நம்மிடம் பேசும்போது அவர் முகத்தில் எந்த வருத்தமும் காணப்படவில்லை. சிரித்துக்கொண்டே பேசினார். மகனின் மரணத்தைப் பற்றி சிரித்தபடி பேசுகிறீர்களே என நாம் கேட்டபோது, அதைப் பற்றி பெரிதாக அவர் அலட்டிக் கொள்ளவில்லை. நாம் "நீங்கள் எடப்பாடி தரப்பினரிடம் பணம் வாங்கிவிட்டீர்களா?'' என கேட்டோம்.

அதையும் சிரித்துக்கொண்டே மறுத்தார். ஆனால் அவரை நீங்கள் எப்படி பேட்டி எடுக்கலாம் என அந்த ஊரிலிருந்த அ.தி.மு.க.வினர் நம்மை மிரட்டினார்கள். முதல் நாள் அவரை சந்திக்க வந்தபோது அவர் நம்மிடம் பேசாமலே சென்றுவிட்டார். மறுநாள் அதிகாலையில் வந்தபோதே நம்மை தவிர்க்க முடியாது என்பதால் அவர் பேசினார்.

நாம் அவரை பேட்டி எடுத்துவிட்டு சென்றபிறகு அ.தி.மு.க.வினர் புடைசூழ சோளுர் மட்டம் காவல்நிலையத்திற்கு போய் நாம் அவரை மிரட்டியதாக புகார் கொடுத்தார். தினேஷின் குடும்பத்தின் செயல்பாடுகளும் முழுக்க முழுக்க அவர்கள் அ.தி.மு.க.வினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே தெரிகிறது.

தினேஷ் கண் பார்வைக் கோளாறால் தற்கொலை செய்து கொண்டார் என்பதை அவரது நண்பர்கள் மறுக்கிறார்கள். தினேஷின் காதல் வெற்றிகரமாக சென்றது. அதற்கு காரணம் அவர் காதலித்தது அவரது படுகர் இனத்தைச் சேர்ந்த உறவுக்காரப் பெண்ணைத் தான். ஆக, கண் பார்வை கோளாறுமில்லை. காதல் தோல்வியுமில்லை என்ற சூழ்நிலையில், தினேஷின் தற்கொலையைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் அந்த சமயத்தில் பேசிய அவரது தந்தை போஜன், கொடநாடு எஸ்டேட்டிலிருந்து பணம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார் என பத்திரிகையாளர் சிபின் தெரிவிக்கிறார். எனவே தினேஷின் மரணம் மூடிமறைக்கப்பட்டதற்கான காரணம் அவரது தந்தை போஜனுக்கு அளிக்கப்பட்ட பணம்தான் என கொடநாடு எஸ்டேட் ஊழியர்கள் நம்மிடம் தெரிவித்தார்கள்.

முழுமையான -உறுதியான விசாரணை நடந்தால் மர்ம முடிச்சுகள் அவிழும். அவிழும் முடிச்சுகள் முந்தைய ஆட்சியாளர்களை சிக்க வைக்கும் புதிய முடிச்சுகளைப் போடும்.

-தாமோதரன் பிரகாஷ்

படங்கள்: ஸ்டாலின்

___________________________

சிக்கிய உதவியாளர்! சிக்கலில் எடப்பாடி!

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடமும் மோசடி செய்ததாக வந்த புகாரில், தீவிரமாகத் தேடப்பட்டுவந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணி, நவம்பர் 28-ஆம் தேதி சேலம் தீவட்டிப்பட்டி பண்ணை வீட்டில் வைத்து தனிப்படை போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப் பட்டுள்ளார்.

oo

ரேஷன் கடை ஊழியராக பணிபுரிந்துவந்த மணி, அங்கு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட காரணத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார். பின்பு எடப்பாடி அமைச்சராக ஆனபோது அவருடைய அறிமுகம் கிடைத்தது. மணியின் விசுவாசமான செயல்பாட்டைப் பார்த்து எடப்பாடி, அவரை தனக்கு உதவியாளராக நியமித்துக்கொண்டார்.

எடப்பாடி முதல்வராக ஆன காலகட்டத்தில் மணியின் விஸ்வரூப மும் வளர்ந்தது. போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறை, வருவாய்த் துறை, செய்தி மக்கள்தொடர்புத்துறை, வேளாண் துறை, கூட்டுறவுத் துறை போன்றவற்றில் பணி வாங்கித் தர தன்னால் முடியுமெனக் கூறி பொதுமக்களிடமும், பணி மாறுதல் வாங்கித் தருவதாகக் கூறி அதி காரிகளிடமும் பணம் வாங்க ஆரம்பித்தார். முதல்வரின் உதவியாளர் என்பதால் நம்பகமாக இருக்குமென எண்ணி அ.தி.மு.க. நிர்வாகி கள் பலரும் பணம் கொடுத்தனர்.

kk

ஆனால் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதும் வேலை, பணிமாறுதல் கிடைக்காத பலரும் அதிருப்தியடைந்தனர். அக்டோபர் மாதம் செம்மாண்டபட்டி அ.தி.மு.க. பிரமுகர் செல்வகுமார், வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.39 கோடி பணம் வாங்கி மோசடி செய்துவிட்டதாக மணி மீது எஸ்.பி. அலுவல கத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் தமிழ்ச்செல்வன் எஸ்.பி. அபிநவ்விடம் போக்குவரத்துக் கழகத்தில் உதவிப்பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 17 லட்ச ரூபாய் வாங்கியதாகவும், 4 லட்சத்தை மட்டும் திருப்பித் தந்திருப்பதாகவும் மணி மீது புகார் கொடுத்தார்.

இந்நிலையில் மணி, செல்வகுமார் மீது கூட்டுச் சதி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சேலம் கோர்ட்டிலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் முன்ஜாமீன் கோரி செல்வகுமார், மணி இரு வரும் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்ததையடுத்து, மணி, செல்வகுமாரைக் கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் ஊர் ஊராகச் சென்று தலைமறைவாக இருந்து வந்த எடப்பாடியின் உதவியாளர் மணியை தனிப்படை போலீசார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத் துள்ளனர். செல்வகுமார் மீதான தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மோசடிப் புகாரில் முன்னாள் முதல்வரின் உதவியாளரே கைது செய்யப்பட்டுள்ளது எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

-க.சு.