கொடநாடு கொள்ளை, கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணையுடன் நக்கீரன் புலனாய்வும் தொடர்கிறது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த ஆறுகுட்டியிடம், கனகராஜ் டிரைவராக இருந்ததால்... அந்த ஆறுகுட்டியை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.
அப்போது அவர், "அனுபவ் ரவி மூலம் அசோக் ப்ரெண்ட் ஆனார். அவர் சென்னைக்கு வந்தால் நம்ம காரை எடுத்துக்கொள்ளலாம் என சொன்னதற்கு பிறகு, சென்னை ஏர்போர்ட்டுக்கு கார் அனுப்பினார்கள். அந்த காரை கனகராஜ் ஓட்டிவருகிறான். அதுவரை எனக்கு அவனைத் தெரியாது. தான்தான் கனகராஜ், அம்மா வீட்டில் டிரைவராக இருந்தேன், என்னை உங்களுக்கு தெரியாது'' என்று சொன்னான்.
கனகராஜ் ஒரு நாள்கூட அம்மா காரை ஓட்டி நான் பார்த்தது இல்லை. ஒரு நாள் மட்டும் சசிகலாவுக்கு கார் ஓட்டியிருக்கலாம் என நினைக்கிறேன். கார்டனில் கடைகண்ணிக்கு போக அவனை வைத்திருந்தார்கள். இதுதான் உண்மை. போயஸ் கார்டனில் சாதிக்கிற மாதிரி எந்த செல்வாக்கும் அவனுக்கு இல்லை.
மா.செ. சரவணன், கனகராஜை வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார். சரவணன் விபத்தில் தவறிய பிறகு, எடப்பாடி மா.செ.வானார். கனகராஜ் எடப்பாடி ஊருக்கு பக்கம். அதனால அங்கு கனகராஜ் இருப்பது அவருக்கு பிடிக்கல. ஏன்னா, கனகராஜ் தனது அண்ணன் தனபாலுக்கு சின்னம்மாகிட்ட சொல்லி எடப்பாடிக்கு தெரியாமலேயே மாவட்ட கவுன்சிலர் சீட் வாங்கினார். இதற்கு பிறகு எடப்பாடி அம்மாகிட்ட சொல்லி அந்த சீட்டை கேன்சல் செய்ததோடு, கனகராஜையும் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார்.
கொடநாட்டில் கார் ஓட்டினானா என்பது தெரியாது. அம்மா கொடநாடு செல்லும்போது சென்னை, கோவை யில் இருந்தும் சாமான்கள் போகும். அதனை பூங்குன்றன் ஆபீசில் இறக்கி வைக்க கனகராஜ் போயிருப்பான். ஆனால் வீட்டுக்குள்ள போயிருப்பானா என்பது தெரியாது. எனக்கு தெரிந்த வகையில் சஜீவன், வேலுமணி சகோதரர் அன்பரசன் ஆகியோரிடம் கனகராஜுக்கு பெரியதாக பழக்கம் இல்லை.
நான் சென்னை வரும்போது ஓட்டலிருந்து சட்டமன்றத்திற்கும், மீண்டும் ஓட்டலுக்கு வருவதற்கும் டிரைவராக இருந்தான். கனக ராஜுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால் 2016 தேர்தலுக்கு முன்பு அவனிடம் சங்கடப்பட்டேன். அதிலிருந்து வேலைக்கு வைத்துக் கொள்ளவில்லை. அதன் பிறகு கோவைக்கு பலமுறை வந்துள்ளான், ஆனால் எப்படி வந்தான், எதற்கு வந்தான் என தெரியவில்லை.
திடீரென கனகராஜ் மரணம் குறித்து விசாரிக்கணும் என ஆத்தூர் போலீசில் இருந்து போன் வந்தது. இரவு போன் வந்ததும், காலையில் சென்றுவிட்டேன். அங்கு போலீசார் விசாரித்தனர். உங்களிடம் சொன்னது போலத்தான் சொன்னேன். பிறகு செய்தியாளர்களையும் சந்தித்தேன்'' என சொன்னார் ஆறுகுட்டி.
"ஓ.பி.எஸ். அணியில் இருந்த நீங்கள் இ.பி.எஸ். அணிக்கு வந்தது கொடநாடு கொள்ளை, கொலை வழக்குதான் காரணம் என சொல்கிறார்களே?'' என கேட்டோம். அதற்கு ஆறுகுட்டி, "தொகுதியில் ஆறு மாதமாக வேலை நடக்கவில்லை. மக்களுக்கு பதில் சொல்ல வேண்டுமே, மக்கள் பணி செய்யணும் என்பதற்காக மாறினேன். அம்மா வீட்டில் வேலை செய்த கனகராஜ், ஏன் இப்படி ஆனான். எப்படி போனான், எப்படி கேரளா வரைக்கும் பழக்கம் ஏற்பட்டது என தெரியவில்லை. கனகராஜ் கோவை வந்தான் என சொல்லுவார்கள். எதுக்கோ வந்துட்டு போறான் என நினைத்தோம். ஆனால் இப்படி ஒரு திட்டம் இருக்கும் என தெரியவில்லை. அம்மா வீட்டில் கொள்ளை நடந்த விசயம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த விசயம் கேள்விப்பட்ட உடனே இப்படி ஒரு ஆள் நமக்கு வண்டி ஓட்டியிருக்கானே என ரொம்ப டென்ஷனாக இருந்தது. ஒன்று மட்டும் கேட்டுக்கொள்கிறேன். அம்மா டிரைவர் என சொல்லாதீர்கள். அம்மா வீட்டு டிரைவர் என சொல்லுங்கள்'' என்றார்.
"சாதாரண ஆள்தான் கனகராஜ் என்கிறீர்கள். அவனுக்கு எப்படி இவ்வளவு பெரிய மேப் கிடைத்திருக்கும், இவனுக்குப் பின்னால் யார் இருந்திருப்பார்கள்?'' என்றதற்கு, "தெரியாது' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. அம்மா வீட்டில் இப்படி நடந்ததற்கு யார் காரணம் என விசா ரணையில் தெரியவந்தால், அவர்கள் கண்டிப் பாக தண்டனை அனுபவித்தே ஆகணும். அதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது'' என்று உறுதியான குரலில் சொன்ன ஆறுகுட்டி, "தேர் தலில் கொடுத்த வாக்குறுதிப்படி முதலமைச்சர் ஸ்டாலின், அம்மா மரணத்தில் உள்ள மர்மம், கொடநாடு கொள்ளை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கிறார்'' என்றார்.