கொடநாடு எஸ்டேட் வாங்கப்பட்ட காலத்திலிருந்தே அதன் மர்மங்களை வெளியிட்டு வருகிறது நக்கீரன். ஜெ மறைவுக்குப் பிறகு அங்கே கொலை-கொள்ளை நடந்தபிறகு, மனோஜையும் சயானையும் கேரளாவிற்குச் சென்று பேட்டியெடுத்து நக்கீரன் வெளியிட்ட பிறகு, திடீரென்று சயானும் மனோஜும் கொடநாடு விவகாரத்தைப் பற்றிப் பேசும் ஒரு ரகசிய வீடியோ வெளியிடப்பட்டது.
அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் ஒரு ரெஸ்டாரண்டில் கொடநாடு விவகாரம் பற்றி மனோஜிடமும் சயானிடமும் பேசுகிறார்கள். அதில் ஒருவர் மீடியாவைச் சேர்ந்தவர். அவர் கொடநாடு விவகாரத்தில் எடப்பாடியையும் ஓ.பி.எஸ்.ஸையும் சிக்க வைத்தால் என்ன நடக்கும் என மனோஜுடமும் சயானிடமும் பேசுகிறார்கள். அதில் பிடிகொடுக்காமல் பேசும் சயான் இந்த விவகாரத்தை தேசிய அளவில் பெரிய பத்திரிகைகளில் கொண்டுவர முடியுமா என்று விசாரிக்கிறார். அப்படி மீடியாக்களில் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தை வெளிக்கொண்டு வந்தால் ஏற்படும் சாதக பாதகங்கள் பற்றி உரையாடல் செல்கிறது.
அந்த வீடியோவை மறுபடியும் அ.தி.மு.க.வின் ஐ.டி. விங், எடப்பாடி கட்டளைப்படி தற்பொழுது வெளியிட்டிருக்கிறது. பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சயானின் வாக்குமூலத்திற்கெதிராக அ.தி.மு.க.வினர் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டிருக்கிறது என விசாரித்தோம்.
இந்த வீடியோவில் இடம் பெற்றி ருப்பவர்கள் பிரதீப், ஷைஜு ஆகிய இருவர். இதில் பிரதீப் மீடியாக்காரர். அவர் மீது விபச்சார வழக்குகளும் இருக்கிறது. இவர்கள் சயானையும் மனோஜையும் கோவைக்கு வரவழைக்கிறார்கள். அங்கு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள காபி ஷாப்பில் மனோஜையும் சயானையும் சந்திக்கிறார்கள். மாத்யூ சாமுவேலை சயானும் மனோஜும் சந்திப்பதற்கு முன்பு மாத்யூ உட்பட கலந்து பேசி, எப்படி பத்திரிகையில் செய்தி வரவேண்டும் என்கிற முயற்சியின் தொடர்பாக நடந்த சந்திப்பு இந்த வீடியோவில் வந்துள்ளது.
இதில் எடப்பாடியிடம் இந்த விவகாரத்தை வைத்து பேரம் பேசுவது பற்றி பிரதீப்பும் ஷைஜும் மனோஜிடமும் சயானிடமும் பேசுகிறார்கள். இந்தக் கொலை விவகாரத்திலிருந்து அவர்கள் இருவரையும் வெளியே கொண்டுவருவது பற்றி, வந்தவர்கள் பேச... நாங்கள் அதில் ஏற்கனவே மாட்டிக் கொண்டிருக்கிறோம் என மனோஜும் சயானும் பதிலளிக்கிறார்கள். இந்த விவகாரத்தை ஊடகங்களில் கொண்டுவந்தால் ஒரு பயனும் இல்லை என பிரதீபும் ஷைஜுவும் சொல் கிறார்கள்.
எடப்பாடி கையில் எல்லா அதிகாரமும் இருக்கிறது, தமிழக போலீசாரும் ரௌடிகளும் மிக மோசமானவர்கள் என்கிற பயமுறுத்தலோடு கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ். தொடர்பான விவகாரங்களை ஒரு வீடியோவாக்கித் தந்தால் மனோஜை யும் சயானையும் வழக்கிலிருந்து விடுவிப்போம் என்கிற வாக்குறுதியும் தரப்படுகிறது. அதற்கு இருவரும் சம்மதிக்கவில்லை. கடைசிவரை நெகட்டிவாக பதில் சொல்லிவரும் சயான், இந்த விவகாரத்தை மீடியாக்களில் கொண்டுவர வேண்டும் என்பதைப் பற்றியே பேசுகிறார்.
இந்த பேச்சுவார்த்தை யை பிரதீப் தன் ஆப்பிள் செல்போனில் பதிவு செய்கிறார். அதன்பிறகு மாத்யூ சாமுவேலை சந்திக்கும் சயானும் மனோஜும் இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வருகிறார்கள். அவர்களை டெல்லியில் கைது செய்த தமிழக போலீசார், தமிழகத்திற்கு கொண்டு வருகின்றனர். எழும்பூர் மாஜிஸ்திரேட் சரிதா, அவர்களை ரிமாண்ட் செய்ய முடியாது என விடுவித்தபோது அவர்கள் கேரளா செல்கிறார்கள்.
அவர்களை மறுபடியும் பிரதீபும் சைஜுவும் சந்திக்கிறார்கள். எடப்பாடிக்கு ஆதரவாக அவருக்கும் கொடநாடு சம்பவத்திற்கும் தொடர்பில்லை என பேட்டியளிக்கச் சொல்கிறார்கள். அதற்கு நேர்மாறாக நடந்த உண்மைகளை மனோஜும் சயானும் நக்கீரனிடம் சொல்கிறார்கள்.
டென்ஷனான எடப் பாடி, சுப்ரீம்கோர்ட் வரை சென்று அவர்கள் மீடியாவில் பேசுவதற்கு தடை வாங்கி னார். மற்ற குற்றவாளிக ளெல்லாம் ஜாமீனில் வெளியே இருக்க... மனோஜையும் சயானையும் மட்டும் கைது செய்து சிறைக்கு அனுப்புகிறார்.
பாராளுமன்றத் தேர்தலில் கொடநாடு விவகாரத்தை தி.மு.க. பிரச்சாரமாக்கும்போது கோடிக்கணக்கில் பணம் கொடுத்து பிரதீப்பிடமும் ஷைஜுவிடமுமிருந் தும் மனோஜ்-சயான் பேசிய பேச்சுக்கள் அடங்கிய வீடியோவை எடப்பாடி வாங்குகிறார். அதை வெளியிடுகிறார். அதில் உள்ள உண்மை என்னவென மாத்யூ சாமுவேல் தி.மு.க.விடம் விளக்குகிறார். அதாவது, அ.தி.முக. ஆட்சியின் மேலிடத் தொடர்புகள் பற்றி விவரிக்கிறார்.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் மனோஜ், சயான் ஆகிய இருவரும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ்., வேலுமணி ஆகியோருக்கும், கொடநாடு கொள்ளைக்கும் உள்ள தொடர்புகளை வெளியிடுகிறார்கள் என்கிற உண்மை தெரிந்த பிறகுதான், மறுபடியும் ஜாமீனில் வந்த சயானிடமிருந்து 3 மணி நேர வாக்குமூலம் வாங்கப்பட்டி ருக்கிறது. அதைப் பார்த்து அதிர்ந்துபோன எடப்பாடி, மறுபடியும் பழைய வீடியோவை அ.தி.மு.க.வுக்கு சாதகமாக யூடியூப் சேனலில் சுற்ற வைத்துள்ளார். அதை டி.வி.க்களிலும் செய்தியாக்க முயன்றுள்ளார்.
அத்துடன் சஜீவனின் சகோதரரான சுகில் என்பவரை சயானின் கிராமத்திற்கே அனுப்பி அந்த வழக்கில் மறுபடியும் சிக்கல் வரப்போகிறது என பிஜின்குட்டி என்கிற மற்றொரு குற்றவாளியை எச்சரித்திருக்கிறார்.
இந்த குற்றச்சாட்டுகள் பற்றி தனக்கு நெருக்கமானவர் களிடம் பேசும் வேலுமணியின் அண்ணன் அன்பரசன், கொட நாடு கொலை நடந்த அன்றே, செத்துப்போன டிரைவர் கனகராஜிடம் பேசியதாக ஒப்புக்கொள்கிறாராம். இதனால் சகோதரருக்கு வாய்ப்பூட்டுப் போட்டிருக்கிறார் எஸ்.பி.வேலு மணி. டிரைவர் கனகராஜின் மர்ம மரண விவகாரத்தில் எடப்பாடி யின் நிழலான சேலம் கூட்டுறவு சங்கத் தலைவரான இளங்கோ வன் பெயரும் அடிபடுவதால் அவரும் விசாரணை வளையத் திற்குள் வரலாம் என்கிறார்கள்.
கனகராஜின் சகோதரரையும், தாயாரையும் இறந்துபோன கொடநாடு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷின் தங்கையையும் அடுத்தகட்ட சாட்சிகளாக விசாரிக்க போலீஸ் தீர்மானித்துள்ளது. கொலை, கொள்ளை நடந்த சமயத்தில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்ட சஜீவன் துபாயில் இருந்தார். அவர் சார்பாக அனைத்து வேலைகளையும் செய்தவர் சுனில் என்பவர். அவரும் விசாரணை வளையத்திற்குள் வருவார் என்கிறார்கள். கொடநாடு மேனேஜர் மற்றும் உயிர் தப்பிய காவலாளி ஆகியோரையும் போலீசார் விசாரித்திருக்கிறார்கள்.
இதற்கிடையே மனோஜுக்கும் சயானுக்கும் எதிராக சாட்சியமளிக்க மற்ற குற்றவாளிகளுக்குப் பணம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கனகராஜுக்கும் சயானுக்கும் மட்டுமே எடப்பாடி தொடர் பான ரகசியங்கள் தெரியும் என்பதால் வழக்கு தீவிரமாகும். இந்த விவகாரத்தில் மிக முக்கிய பங்குவகிப்பது கனகராஜின் செல்போன். அதைப்பற்றி சயானுக்கு என்ன தெரியும் என்றும், அந்த போனுக்கு எடப் பாடி பேசினாரா? கனகராஜுக்கு அருகில் சயான் இருந்தாரா? அவர் சொன்ன ஆதாரம் என்ன என சயானை கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறது போலீஸ்.
உண்மையைச் சொன்ன சயான், நீலகிரியில் ஒரு மாணவர் விடுதியில் தங்கி ஹாஸ்டல் சாப்பாட்டில் காலம் தள்ளு கிறார். இந்த நிலையில், சயானையும் மனோஜையும் ரகசியமாக வீடியோ எடுத்தவர்களுக்கு கோடிக்கணக்கில் எடப்பாடி பணம் கொடுத்ததோடு, அந்த வீடியோவில் சயான் பேரம் பேசினார் என அ.தி.மு.க. வட்டாரங்களில் இடம்பெறச் செய்கிறார் என்கிறார்கள் சயான் தரப்பினர்.
அ.திமு.க உள் அரசியலி லும் கொடநாடு விவகாரம் புகைச்சல் எடுக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாகவே அ.தி.மு.கவுக் குள் கொடநாடு புகைகிறது. சசிக்கு எதிராக ஓ.பி.எஸ் கச்சை கட்டிய போது இந்த விவகாரம் பெரிதா னது. ஜெ. தங்கியிருந்த பாதுகாப்பும் ரகசியங் களும் நிறைந்த எஸ்டேட் டில் கொள்ளை -அதில் எடப்பாடி மீது குற்றச்சாட்டு என்பதை வைத்து, ‘அம்மா வீட்டில் கொள்ளையடித்த எடப்பாடி’ என அரசியல் காய் நகர்த்த நினைக்கிறார் சசிகலா. அதன் மூலம் அ.தி.மு.க.வை வசப்படுத் தும் வியூகங்களும் சசி தரப்பில் நடக்கிறது.
________________________________________
சயான் உயிருக்கு ஆபத்து!
ஹாஸ்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கும் சயானிடம், கேமரா இல்லாத செல்போன் மட்டுமே உள்ளது. நாம் அவரைத் தொடர்புகொண்டபோது, “கோர்ட்டில் கையெழுத்துப் போட போய்க் கொண்டிருக்கிறேன்” என்றார். கோர்ட், மார்க்கெட் எனத் தனியாக செல்லும் சயானுக்கும் இந்த வழக்கில் உள்ள மற்ற 9 பேருக்கும் ஆபத்து இருப்பதாக போலீசார் கருதுகிறார்கள் .
இதையறிந்த மக்கள் சட்ட மையத்தின் விஜயன், அந்த 10 பேருக்கும் பாதுகாப்பு கோரி போலீசிடம் கோரியிருப்பதுடன், நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யவிருக்கிறார். வரும் 27-ந் தேதி ஊட்டி போலீசார் முன் ஆஜராகும் சயானிடம் விசாரணை முடிந்த பின்பு, ஊட்டி நீதி மன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறது காவல்துறை.
-அ.அருள்குமார்
________________________________________
அன்று பேனர்! இன்று கொடி!
கழகங்களின் வரவேற்பில் பலியாகும் உயிர்கள்!
அ.தி.மு.க. பிரமுகர்களை வரவேற்று வைக்கப்பட்ட அனுமதியற்ற பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற பெண்ணின் உயிர் பறிக்கப்பட்ட நிகழ்வை மறந்திருக்க முடியாது. இப்போது, தி.மு.க.வின் கொடிக்கம்பம் நட்ட சிறுவன் தினேஷின் உயிர் பறிபோயுள்ளது.
விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் மகன் தினேஷ். அரசுப் பள்ளியில் எட்டாவது படிக்கும் சிறுவன். பொன் குமார் என்பவரது இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ள உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வருவதையொட்டி ஆகஸ்ட் 20-ஆம் தேதி தோரணங்கள், கட்சிக் கொடி நடும் பணியில் ஈடுபடுத்தப் பட்டார். தினேஷ் நடமுயன்ற கொடிக்கம்பம் உயர்மின்னழுத்தக் கம்பியில் பட்டு- தூக்கிவீசப்பட்டு,. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் சென்னை பள்ளிக்கரணை, கோவை பகுதிகளில் பேனர் விபத்துகள் சர்ச்சையானபோது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு இடைஞ்சலாக பேனர் வைக்கும் கலாச்சாரத்தை தி.மு.க. தொண்டர்கள் கைவிடவேண்டுமென கேட்டுக்கொண்டார். நீதிமன்றத்திலும் தி.மு.க இதற்கான உறுதியை அளித்தது. பேனர் கலாச்சாரம் குறைந்த நிலையில், கொடிக்கம்பம் வில்லங்கமாகியுள்ளது. தினேஷ் உயிர்ப்பலி விவகாரத்தில் நெடுஞ்சாலைத் துறையில் கொடி நடுவதற்கான முறையான அனுமதி பெறவில்லை எனத் தெரியவந்துள்ளாது. பள்ளிச் சிறுவனை வேலைக்கு பயன்படுத்தியதும் சட்டத்திற்குப் புறம்பானது. தினேஷ் உயிர்ப்பலி குறித்து அவரது அம்மா அளித்த புகாரை காவல்துறை, முறையான பிரிவுகளின்கீழ் வழக்குப் பதியவில்லை என்ற குரல்களும் எழுகின்றன.
முதல்வர் தலையிட்டு கொடி, பேனர் போன்ற விவகாரங்களில் கட்டுப்பாடுகளையும், அத்தியாவசியமாக அலங்காரங்கள் தேவையுள்ள இடங்களில் கடைப்பிடிப்பதற்கான வழிமுறைகளையும் வலியுறுத்து வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-க.சுப்பிரமணியன்