சிவகார்த்திகேயனின் ஜோடி!
சிவகார்த்திகேயன், அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக "எஸ்.கே. 20' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மாடலும், நடிகையுமான மரியா ரியாபோஷாப்காதான் "எஸ்.கே. 20' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். முதலில் "ஆர்.ஆர்.ஆர்.' படத்தில் நடித்துள்ள ஒலிவியா மோரிஸ் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பதாகக் கூறப்பட்ட நிலையில்... தற்போது மரியா ரியாபோஷாப்கா ஒப்பந்தமாகியிருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
வில்லன் விஜய்சேதுபதி!
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் "பொன்னியின் செல்வன்' மற்றும் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் "விருமன்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள கார்த்தி, இயக்குநர் ராஜுமுருகன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ராஜுமுருகன் இயக்கம் இப்படத்தில் முதன்முறையாக கார்த்தியும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும், நெகட்டிவ் கேரக்டரில் வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க வுள்ளாராம். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் விஜய்சேதுபதி, கதைக்குத் தேவைப்பட்டால் அவ்வப்போது வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். ஏற்கனவே "பேட்ட' , "மாஸ்டர்' போன்ற படங்களில் வில்லனாக நடித்து பலரையும் ஆச்சரியப் படுத்தியிருந்த விஜய்சேதுபதி, தற்போது ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்திக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக வெளியான இந்த தகவல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோதனை தீரவில்லை!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் "மகான்' படத்தில் நடித்திருந்தார். கடந்த 10-ஆம் தேதி ஓ.டி.டி. தளத்தில் நேரடியாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, அஜய் ஞானமுத்து இயக்கும் "கோப்ரா', மணிரத்னம் இயக்கும் "பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களில் விக்ரம் நடித்துவருகிறார்.
இப்படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். "சீயான் 61' எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ. ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் கதையை "மெட்ராஸ்' படத்தை இயக்கும்போதே பா.ரஞ்சித், விக்ரமிடம் கூறி விட்டதாகவும், அதற்கு அவரும் ஓ.கே. சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், "மெட்ராஸ்' படத்தைத் தொடர்ந்து "கபாலி', "காலா', "சார்பட்டா பரம்பரை' என ரஞ்சித் பிஸியாகிவிட்டார். இதனால் விக்ரம் படத்தின் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது "நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் கவனம் செலுத்திவரும் ரஞ்சித், அடுத்ததாக "சீயான் 61' படத்தின் பணிகளில் ஈடுபடவுள்ளார். விக்ரமிற்கு கதை மீது இருந்த நம்பிக்கை காரணமாக அவர் இத்தனை ஆண்டுகள் காத்திருந்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே சோதனைகளைச் சந்தித்து வரும் விக்ரமிற்கு, இந்த எட்டு வருட காத்திருப்பு பலன் தரும் என நம்புவோம்.
ரஜினி வர்றாரு!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் "சிறுத்தை' சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்த ‘"அண்ணாத்த'’ படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து ரஜினி அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், யாருமே எதிர்பாராத வகையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அவர் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளது. "டாக்டர்' படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய்யின் "பீஸ்ட்' படத்தை இயக்கிவரும் நெல்சன், அடுத்ததாக இந்த படத்தில் ரஜினியை இயக்க உள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் கதா நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக் கப் போவதாக ஒரு தகவல் வெளியாகியுள் ளது. ரஜினியுடன் "எந்திரன்' படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித் திருந்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில்... இதே ஹிட் காம்போவை மீண்டும் திரையில் கொண்டுவர, படக்குழு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது மணிரத்னம் இயக்கி யுள்ள "பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-எம்.கே.