சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடை பெற்ற புத்தகக் கண்காட்சியில், கடந்த 13ஆம் தேதி, "அறிவு ஒளி பரவ!' என்ற தலைப்பில், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா உரையாற்றினார். அவரது உரையில்... "புத்தகக் கண்காட்சி களில் வெறுமனே பார்த்துவிட்டுச் செல்லாமல், நூல்களை வாங்கிச் செல்கின்ற மக்கள் நிரம்பியது தமிழ்நாடு மண் என்பதற்கு எடுத்துக்காட்டு சென்னை புத்தகத் திருவிழா. இன்றைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் எல்லா மாவட்டங்களிலும் வெற்றிகரமாக இந்த புத்தகத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. எங்கு நோக்கினும் நூல்கள், எல்லா இடங்களிலும் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம், பதிப்பாளர் களுக்கு ஒரு புது வாழ்வு என்கின்ற அளவிற்கு தமிழ்நாடு இன்றைக்கு எல்லாவற்றிலும் முன்னோடியாகத் திகழ்கிறது.
இந்த நிகழ்ச்சியினுடைய சிறப்பாக இலக்கிய ஆளுமைகளுக்கு தமிழக முதலமைச்சர் விருதுகளை வழங்கி கௌரவித்திருக்கிறார். இந்த புத்தகக் கண்காட்சி என்பது நீண்ட நெடுங்காலமாக தொய் வின்றி நடந்துவருவதும், மக்கள் அதற்கு திரளாக வருவதுமாக, பார்த்து பரவசப்படக்கூடிய ஒன்று. எனக்கு தெரிந்து இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு நிலை கிடையாது.
இன்றைய நிகழ்ச்சிக்கு அதிக விளம்பரம் இல்லை. ஆனால் வந்திருப்பவர்கள் அதிக மென்று நான் நம்புகின்றேன். இதுபோன்ற இடங்களுக்கு வரு கிறவர்கள் யார் என்பதை பொறுத்துதான் இந்த அரங்கத்தி னுடைய தகுதி தீர்மானிக்கப்படுகிறது. இது ஒரு திரைப்படக்காட்சி அல்ல. உங்களை மகிழ்விப் பதற்கு ஒரு திரைப்படத்திலே நடிக்கக்கூடிய நடிகரோ, அல்லது அது தொடர் பானவர்களோ இங்கு வரவில்லை. அதற்கு மாறாக இலக்கியம் பேசுகிறவர்கள், வரலாறு பேசு கிறவர்கள், நூல் களை ஏன் படிக்க வேண் டும் என்று விளக்கிச் சொல்கிறவர்கள், புதிய சிந்தனைகளை மக்கள் மனதிலே விதைக்கக்கூடியவர்களை அழைத்து நடத்துகிற இந்த மன்றத்தில் இத்தனைபேர் வந்து அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் நான் மீண்டும் சொல்வேன், இதுதான் தமிழ்நாடு என்ற பேருவகை எங்களுக்கு ஏற்படுகிறது.
இந்த நிகழ்ச்சியிலே எனக்கு முன்னாலே அருமை தங்கை கபிலா விசாலாட்சி பேசினார். அவர் ஒரு காலத்திலே "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது நானும் அதில் நடுவராக சென்றிருந்தேன். அன்றைக்கு நம்பிக்கைக்குரியவராகத் தெரிந்தவர், இன்றைக்கு இந்த மேடையிலே ஆற்றொழுக்காக எந்தவிதமான தங்குதடையுமில்லாமல் பேசுகிறார். நிறைய நூல்களை படித்து அதனுடைய கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துகொண்டார். ஒரு காலத்திலே இந்த தமிழ்நாட்டில் வாழ்ந்த எங்கள் திராவிட இயக்கத்தினுடைய முன்னோடி அண்ணன் மன்னை நாராயணசாமி அவர்கள் சொல்வார்கள், "எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் கொஞ்சம் முன்கூட்டியே செல்லவேண்டும். அதற்கு காரணம், எதிர்பார்ப்பவர் களுக்கு பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம் என்பதை விட, முன்னால் பேசுகிறவருடைய உரையினைக் கேட்க வேண்டும். அப்படி கேட்கிற போது அவர்கள் சொல்லக்கூடிய கருத்துக்கள் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். சில புதியவையாக இருக்கும். சில நேரங்களில் நாம் விளக்கம் சொல்ல வேண்டியதாக இருக்கும்' என்று சொல்வார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/19/trichyshiva-2026-01-19-16-54-58.jpg)
அதுபோல இந்த இளம்பெண் பேசிய பேச்சில் பலரைப் பற்றிய புதிய செய்திகள் இருந்தன. அதிலே குறிப்பாக அவர் சிங்கத்தைப் பற்றி ஒரு கருத்து சொன்னார். சிங்கத்தை எப்படி ராஜாவாக தேர்ந்தெடுத்தார்கள் என்றால், தான் உண்டது போக மீதியை எவர் உண்டால் என்ன என்று செல்லுகிற பெருந்தன்மை அதற்கு உண்டு. அதை எப்படி வேண்டுமானாலும் பார்க்க லாம். அது விமர்சனத்திற்கு உள்ளாகும். என்னைப் பொறுத்தவரை சிங்கம் என்பதை அதனுடைய கானகத்தி னுடைய ராஜா என்று சொல்வதற்கு காரணம், யாருக்குப் பின்னால் வலிமை பொருந்தியவர்களும் கட்டுப்பட்டு நடக்கிறார்களோ அவர்கள்தான் தலைவன். தனக்கு பின்னாலே ஆள் சேர்த்து வைத்துக்கொள்கிறவர்கள் அல்ல. காரணம் புரியாமல் பின்னால் வருகிறவர்கள் அல்ல. இவன் தன்னை விட உயர்ந்தவன் என்று நம்புகின்ற அளவிற்கு தகுதியும் தன்மையும் ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இல்லையென்றாலும் கூட, யாரிடம் தெரிகிறதோ, யாரிடம் புலப்படுகிறதோ, யார் தங்களுடைய செயல் மூலமாக உணர்த்துகிறார்களோ, அவர்கள் தான் தலைவர்கள். அந்த வரிசையில் தான் சிங்கம் வருகிறது. அதனாலேயே அது ராஜாவாக இருக்கிறது.
மேலும், புலி வலிமையானது தான். ஆனால் சிங்கத்தை எதிர்க்கும் துணிவு அதற்கு வராது. யானை மிகப்பெரிய வலிமை கொண்டதுதான். எதையும் தன்னுடைய துதிக்கையால் சுழற்றி அடித்துவிடும். ஆனால் அது துதிக்கையை உயர்த்துவதற்கு முன் பாகவே அதன் தலையின் மீது ஏறி மத்தகத்தின் மீது அடிக்கின்ற துணிச்சல், வலிமை சிங்கத்திற்கு தான் உண்டு. கானகத்திலே எல்லா மிருகங்களும் ஓடும். ஓடுகிற போது திரும்பிப் பார்க்கும்.
எதற்காக என்றால், பின்னால் வேறு மிருகங்கள் விரட்டி வருகிறதா? வேறு ஏதும் ஆபத்து வருகிறதா? என்று பார்க்கத்தான். ஆனால் சிங்கம் மட்டும் தான் ஓடிக்கொண்டிருக்கும்போது திரும்பிப் பார்க்காது. நின்று, மெல்ல திரும்பிப் பார்க்கும். அந்த பார்வையினுடைய பொருள், எனக்கு பின்னால் வருகிறவர்கள் எல்லாம் கட்டுப்பாட்டோடு வருகிறார்களா என்ற பார்வை. அதைத்தான் அரிமா நோக்கு என்று சொல்வார்கள். இது எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும்.
இங்கே எத்தனையோ கடைகள் உள்ளன. நான் இவற்றை கடைகளாகப் பார்க்கவில்லை. அங்கே இருப்பவைகளை அச்சிட்ட நூல்களாகப் பார்க்கவில்லை. காகிதங்களிலே மையினால் அச்சடிக்கப்பட்ட சில செய்திகளை சுமந்தவைகளாக நான் பார்க்கவில்லை. இன்றைக்கு இந்த அரங்கத்தில், இந்த திருவிழாவில், இந்த காட்சித்திடலில் ஆயிரக்கணக்கான அறிஞர் பெருமக்கள் உங்களுக்காக உள்ளே காத்திருக்கிறார்கள். என்னை உங்களோடு உங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள், நான் எந்த நேரமும் உங்களோடு இருப்பேன். உங்களுக்கு எந்த ஐயம் வந்தாலும் நான் தெளிவுபடுத்துவேன். உங்களுக்கு இதுவரை தோன்றாததை, தெரியாததை
நான் சிந்தித்து இதிலே சொல்லியிருக்கிறேன். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் படிக்க வேண்டியதையெல்லாம் சேர்த்து நான் படித்து, ஒரு நூலிலே தந்திருக்கிறேன். என்னை உங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் எனக்கூறும் அறிஞர்கள் கூடியிருக்கிற ஒரு திடலாகத்தான் இதை பார்க்கிறேன்.
எனவே இதை உயிரற்ற நூலாகப் பார்க்காதீர்கள். உயிருள்ள அறிஞர் பெருமக்கள் இங்கே திரண்டு நிற்கிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் எல்லாம் இருக்கிற இடத்தில் எங்களைப் போன்றவர் பேசுகிறபோது பெருமிதத்துடன் பேசுகிறோம். கொஞ்சம் உவகையுடன் பேசுகிறோம். ஒன்றா, இரண்டா, எத்தனை ஆயிரம் நூல்கள், எத்தனை நூறு பதிப்பகங்கள், எத்தனை எழுத்தாளர்கள். வியப்பு மேலோங்குகிறது.
ஒரு நூலகம் என்பது பல நூல்களின் தொகுப்பு அல்ல, பல அறிஞர்கள் ஒன்று கூடி ஒரு அறையில் இருக்கிறார்கள் என்று பொருள். எது தேவையோ அதை எடுத்துப் படிக்கிறபோது அதற்கு தேவையானவை கிடைக்கும்.
அறிவு என்று சொல்கிறபோது பல அறிவுகள் உண்டு. இயற்கையாக வரக்கூடிய பொது அறிவு. படிப்பறிவு, கல்வியினால் வருகிற அறிவு, அனுபவ அறிவு, பகுத்தறிவு... இப்படி ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே போகலாம். எது பகுத்தறிவு? எதையாவது சொல்லுகிறபோது அது நம்மை அச்சுறுத்துவதாக இருந்தால் அல்லது மனதிற்கு இதமாக இல்லாமல் இருந்தால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு மாறாக, என் மனம் ஏற்றுக்கொள்கிற அளவிற்கு அதை விளக்கிச்சொல், பின்னர் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்வதற்கு பெயர் பகுத்தறிவு.
அப்படி சொல்லுகின்ற வகையில், நல்ல அறிவு ஒளி பரவி, இங்கே எரிகின்ற விளக்குகளை விட உள்ளே இருக்கிற நூல்களின் அறிவு வெளிச்சம் அதிகம். அந்த சுடர் எல்லா இடங்களிலும் பிரகாசிக்கும்.
சூரியனுடைய ஒளியைப் போல நூல்களிலிருந்து வருகின்ற கருத்துக்கள். இன்றைக்கு கபிலா விசாலாட்சி இங்கே வந்து பேசினார் என்றால், சில நூல்களை படித்துவிட்டு வந்திருக்கிறார். சில அறிஞர்களைப் பற்றி படித்துவிட்டு வந்திருக்கிறார். அதைப்போல நாமும் வாசித்து அறிவை பெருக்கிக்கொண்டு பேச வேண்டும்'' என்றார்.
-தொகுப்பு:தாஸ்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2022-07/சித்து - Copy.jpg)
/nakkheeran/media/media_files/2026/01/19/trichyshiva1-2026-01-19-16-54-44.jpg)