எழுத்தாளர்கள், கவிஞர்கள், வாசகர்கள், பதிப்பாளர்கள்... இவர்களின் ஆண்டுத் திருவிழா என்றால் அது சென்னை புத்தகக் கண்காட்சி தான். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சி, இந்த ஆண்டிலும் ஜனவரி மாதத்தில் நடத்தப்படுவதாக இருந்த நிலையில், கொரோனாப்பரவல் அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
கொரோனா பரவல் குறைந்த நிலையில், பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை 45-வது சென்னை புத்தகக் கண்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. சென்னை புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காலை 11.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெறுகிறது. பபாசி தலைவர் எஸ்.வைரவன், செயலாளர் எஸ்.கே.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், தமிழக முதல்வரிடம் பதிப்பாளர் களுக்காக ஒருசில கோரிக்கைகளை முன்வைத்தனர். அதையடுத்து, புத்தகக் கண்காட்சிக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 75 லட்சம் ரூபாயோடு, கண்காட்சி தள்ளி வைக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்புக்கு ஈடாக கூடுதலாக 50 லட்சம் ரூபாயும் சேர்த்து 1.25 கோடி வழங்குவதாக முதல்வர் அறிவித்தார்.
இந்த ஆண்டு 800 அரங்குகள்வரை கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. நக்கீரன் பதிப்பகம், பாரதி புத்தகாலயம், சாகித்ய அகாதெமி, தமிழ் இந்து, காலச்சுவடு, பெரியார் சுயமரியாதை புத்தக நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பதிப்பகங்கள் பங்கேற்றுள்ளன. தற்போது நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களால் எழுதப்பட்டு பலராலும் விரும்பி வாசிக்கப்படும் "போர்க்களம்' தொடரின் முதல் பாகம், நக்கீரன் பதிப்பகத்தில் பரபரப்பாக விற்பனையாகிவருகிறது. மேலும், "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்... பெயர் அல்ல செயல்', "சித்ரவதை', "கரிசல் குயில் கி.ரா.' உள்ளிட்ட பல்வேறு நூல்கள், கட்டுரைத் தொகுப்புகளை வாசகர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள்.
கொரோனாப் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டைவிட்டு வெளியில் செல்லவும், பொது இடங் களில் நடமாடவுமே அச்ச மாக இருந்தது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. ஆனால் இம்முறை, தேனடையை மொய்க்கும் தேனீக்கள் போல வாசகர்களால் புத்த கக் கண்காட்சியில் திரு விழாக் கூட்டத்தைக் காண முடிந்தது. குறிப்பாக, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் மிகுதியாகக் காணப் பட்டது. இளம் தலைமுறை புத்தக வாசிப்பாளர்கள், பெண்களை அதிக அளவில் காண முடிந்தது புத்தகங் களின் தேவை குறித்த நம்பிக்கையை விதைப் பதாக இருந்தது. வாசகர்கள் பெரியார், அம்பேத்கார், கலைஞர், அண்ணா உள்ளிட்ட தலைவர்களைப் பற்றிய நூல்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். அனைத்து அரங்குகளி லும் பரவலாக விற்பனை நன்முறையில் இருப்பதாக பதிப்பகத்தார் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
புத்தகக் கண்காட்சி அரங்கின் முன்புறம், பொருநை நதி நாகரிகம் தொடர்பான கண்காட்சி அரங்கு, 5,000 சதுர அடிப் பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்தது. தொல்லியல் பொருட்களை மெய்நிகர் முறையில் காண்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததால் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
சென்னை புத்தகக் கண்காட்சியில் தினமும் மாலையில் பல்வேறு அறிஞர்கள், இலக்கியவாதி களின் சிறப்புரைகள் நடக்கின்றன. பல்வேறு நூல் களின் வெளியீடுகள், விமர்சனக் கூட்டங்களும் நடக்கின்றன. கடந்த பிப்ரவரி 21-ம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில், "உயிர்மை' அரங்கில், "ப்ரன்ட் லைன்' இதழின் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர் எழுதிய "சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது' என்ற நூலை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் வெளியிட, நக்கீரன் ஆசிரியர் நக்கீரன்கோபால் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் வரவேற்புரையாற்ற, நூலாசிரியர் ஆர்.விஜயசங்கர் ஏற்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நக்கீரன்கோபால் அவர்கள், "இப்போது மிகவும் அவசியமான புத்தகம் இது. சாவர்க்கர் யாரென்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் காந்தி நினைவு நாள் என்று சொல்லுவோம், உண்மையில் அது நினைவு நாள் அல்ல, காந்தி கொல்லப்பட்ட நாள் என்று சொல்லணும். ஏனென்றால், போறபோக்கில் காந்தி அவராகவே குத்திக்கொண்டு செத்ததாகச் சொல்லிவிடுவார்கள். காக்கிக்குள்ளும் காவி இருப்பதை கோவையில் தெரிந்துகொண்டோம். இப்போதுதான் நாம், காந்தி கொல்லப்பட்டார் என்ற உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும்'' என்றார்.
தொல்.திருமாவளவன் பேசும்போது, "உரிய நேரத்தில் இந்த புத்தகம் வெளிவந்திருக்கிறது. வீரசாவர்க்கர் தமிழ்ச்சூழலில் அதிகம் அறிமுகமாகாத பெயர். வீரசாவர்க்கரின் அரசியல், அவரது கோட்பாடு மிகவும் ஆபத்தானது. இந்திய தேசத்தின் பன்முகத்தன் மைக்கு எதிரானது. இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தக் கூடிய ஜனநாயகத்துக்கு எதிரானது. நாம் அனைவரும் விரும்பக்கூடிய சமத்துவத்துக்கு எதிரானது. சாவர்க்கர் யார் என்பதைத் தெரிந்துகொள்ளாமல் நம்மால் பி.ஜே.பி.யைத் தெரிந்துகொள்ளவே முடியாது. பாரதிய ஜனதா ஆபத் தான கொள்கையை முன்வைக் கக்கூடிய இயக்கம். ஆர்.எஸ். எஸ்.சினுடைய அரசியல் பிரிவு'' என்று அழுத்தமான பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். நிகழ்ச்சியில் திரளான வாசகர்கள் கலந்துகொண்டனர்.
-தெ.சு.கவுதமன்
படங்கள்: ஸ்டாலின், அசோக்