தவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் புதுச்சேரியை விட்டு கிளம்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கிரண்பேடி, மத்தியில் மீண்டும் பா.ஜ.க. அரசு அமைந்ததால் புதுச்சேரி அரசின் மீதான அவர் பிடி மேலும் இறுகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி நாராயணசாமி அரசுக்கு எவ்வளவு இடைஞ்சல்கள் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு கொடுத்த கிரண்பேடியின் அதிகாரப்போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் "மாநில அரசுக்கே அதிகாரம்' என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, நேரு நினைவுநாளில் பேசிய முதல்வர் நாராயணசாமி, புதுவையில் காங்கிரஸ் வெற்றி மக்கள் ஆதரவு யாருக்கு என்பதை நிரூபிப்பதாகவும், கிரண்பேடியும் இந்த வெற்றிக்கு ஒரு காரணம் என்றும் நக்கலாக கூறினார். உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து மே 28 ஆம் தேதி ட்விட்டரில் கிரண்பேடி வெளியிட்ட ஒரு கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது. கவர்னர் மாளிகையை பொதுமக்களுக்குத் திறந்துவிட்டதாகவும், புதுச்சேரியின் அனைத்துப் பிரச்சனைகளையும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுபோனதாகவும், பறக்கும் நேரம் வந்துவிட்டதாகவும் அந்த ட்வீட்டில் கூறியிருந்தார்.

நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து புதுச்சேரியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறார் என்றே செய்திகள் வெளியாகத் தொடங்கின. அவருக்கு பதிலாக சு.சாமி, புருஷோத்தமன் என்று சில பெயர்களும் அடிபடத் தொடங்கின. ஆனால், அவருடைய ட்வீட் வெளியான நாளிலேயே உச்சநீதிமன்றத்தில் அவர் சார்பில் மத்திய உள்துறை அமைச்சகம் மனுதாக்கல் செய்தது. அதில் "அதிகாரிகள் தன்னுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்பட வேண்டும்' என முதல்வர் மிரட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு சென்ற கிரண்பேடி, மோடியையும், அமித் ஷாவையும் சந்தித்து பேசியிருக்கிறார். இதையடுத்து, மேலும் குடைச்சல்கள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில், கிரண்பேடி மீது பெரியகடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பின் தலைவர் சுவாமிநாதன் நம்மிடம் பேசும்போது…""துணை நிலை ஆளுநரோ, அதிகாரிகளோ தங்களது சொந்த வலைத்தளங்களை பொதுமக்களின் குறைகேட்பதற்காக பயன்படுத்தக்கூடாது. அதிகாரிகளுக்கென்று ஒதுக்கப்பட்ட சமூக ஊடகங்களையே பயன்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால், மத்திய அரசின் குறிப்பாணைக்கு எதிராகவும், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவருடைய சொந்த வலைத்தளப் பக்கத்தில் தொடர்ந்து பதிவிடுகிறார். எனவே கிரண்பேடி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்துள்ளோம். கிரண்பேடியை புதுச்சேரியை விட்டு வெளியேற்றும்வரை பிரச்சாரத்தை கொண்டுசெல்வோம்''’என்றார்.

அதேசமயம் "புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடியே தொடரவேண்டும்' என்கிறார் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர். அவர் நம்மிடம் ""புதுச்சேரியில் இதுவரை பல கவர்னர்கள் பணியாற்றி உள்ளனர். ஆனால், கிரண்பேடி தனது வித்தியாசமான அணுகுமுறையால் புதுச்சேரி மக்களின் உள்ளத்தை கவர்ந்து, மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை அமல்படுத்தி வருகிறார். அரசு அதிகாரிகள் நேர்மையாகவும், நேரம் தவறாமலும் பணிக்கு வந்து கடமையாற்ற கண்டிப்புடன் நடந்துகொண்டதால்தான் சிலரின் வெறுப்புக்கு ஆளானார். கிரண்பேடியின் நடவடிக்கைகளால் ஊழல் செய்ய முடியவில்லையே என்பதால்தான் சில அரசியல்வாதிகள் அவரை பற்றி அவதூறு பரப்புகிறார்கள். கவர்னரிடம் முதல்வர் நாராயணசாமி மோதல் போக்கை கடைபிடித்து மாநில வளர்ச்சிக்கு முட்டுகட்டை போட்டுவருவது தவறான செயல். அவருடன் ஒத்துழைத்து மாநில வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். புதுச்சேரி மக்களுக்கு கிரண்பேடியின் உழைப்பும், நேர்மையும் கட்டாயம் தேவை'' என்கிறார்.

இதுகுறித்து முதலமைச்சர் நாராயணசாமியிடம் கேட்டபோது, ""“யூனியன் பிரதேச சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் உள்ளதென புதுடில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடுத்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில், புதுச்சேரி அரசுக்குதான் அதிகாரம் உள்ளதென உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்திருக்கிறது. அந்த தீர்ப்பை மதித்து துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என்றுதான் நாங்கள் சொல்கிறோம். மற்றபடி அவர் மாறுதலாகிச் செல்வதா… வேண்டாமா.. என்பது அவரது விருப்பம்... மத்திய அரசின் பொறுப்பு''“ என்றவரிடம், "உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுமா?'… என்று கேட்டோம். “""உள்ளாட்சி பகுதிகள் வரையறைகள் செய்து தேர்தல் நடத்துவதற்கான வகையிலும் தயாராக இருக்கிறோம். உள்துறை அமைச்சகத்துடன் பேசி தேர்தலை நடத்த ஏற்பாடு செய்வோம்''’என்றார்.

Advertisment

ஐந்து ஆண்டுகளில் மூன்றாண்டுகள் இவர்களின் அதிகார போட்டியிலேயே கடந்துவிட்டது. போட்டி இன்னும் முடிவுக்கு வரவில்லை. மக்கள்தான் பாவம்!

-சுந்தரபாண்டியன்