மத்திய- மாநில அரசுகளின் மீதான தொடர்விமர்சனங்கள், போராட்டங்கள் என இடைஞ்சல் தந்துகொண்டிருந்த திருமுருகன் காந்தி, ஐ.நா. சபைவரை சென்று தூத்துக்குடி படுகொலை குறித்துப் பேசியதற்காக பெங்களூரில் இறங்கியதும் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
"திருமுருகன் காந்தி உயிருக்குக் குறி! உணவில் சந்தேக மருந்து' என்று கடந்த நக்கீரன் இதழில் செய்தி வெளியிட்ட நாம், அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருமுருகன் காந்திக்கு என்ன நடந்ததென விசாரித்தோம்.
""கைது செய்யப்பட்டபோது உடல்நலத்துடன் இருந்த அவர், உடல்நிலை மோசமாகவே நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படும்போது தொடர்ச்சியாக நீதிபதிகளிடம் முறையிட, அவர்களும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர். ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவேயில்லை.
கடந்த சனியன்று சிறையில் திருமுருகன் காந்தி மயங்கிவிழவே பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர் சிறை மருத்துவமனைக்கு தோளில் தூக்கிச் சென்றிருக்கிறார். எடுத்துக்கொண்ட உணவு குறித்து திருமுருகனிடம் மருத்துவர் கேட்க சேமியா சாப்பிட்டதாக சொல்ல, மருத்துவரோ அதுதான் மயக்கத்துக்கு காரணமென கிண்டலாகச் சொல்லியிருக்கிறார். குறைந்த ரத்த அழுத்தம் இருப்பதாக திருமுருகன் தொடர்ச்சியாகச் சொல்லியும் சிறைத்துறை கண்டுகொள்ளவே இல்லை.
40 வழக்குகள் திருமுருகன் காந்தி மீது இருந்தாலும் எந்த வழக்கிலும் இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை. அப்படியிருந்தும் நீதிபதியின் அனுமதியின்றி தனிமைச்சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
திருமுருகன் காந்தி மயங்கி விழுந்தவுடன் திங்களன்று அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சோதனை செய்த மருத்துவர், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமெனச் சொல்லியும், அவருக்கு எதுவுமில்லையென அன்றே சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அதன்பின்னரும் தொடர்ச்சியாக இரண்டு தினங்கள் சிறையில் மயங்கி விழுந்திருக்கிறார்.
சிறையில் சோடியமும், சுண்ணாம்பும் அதிகம் கலந்த உணவு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக பலமுறை உணவு எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்திருந்திருக்கிறார். இந்த 50 நாட்களில் 15-க்கும் மேற்பட்ட முறை வேலூர் சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது மதிய உணவு தரப்படுவது இல்லை. மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லும்போது இரவு உணவு இல்லை என்று தொடர்ந்து சொல்லிவந்திருக்கிறார்கள்.
அதன் காரணமாகவே குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு தொடர்ச்சியாக மயங்கியிருக்கிறார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட முதல் நாளில் 6 பாட்டில் குளுக்கோஸ் உடம்பில் ஏற்றப்பட்டிருக்கிறது''’ என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
அரசியல் காரணங்களுக்காக திருமுருகன் காந்தியை தனிமைச் சிறையில் வைத்தே கொலைசெய்ய முயற்சி நடைபெறுவதாக பலரும் சந்தேகம் கிளப்புகிறார்கள்.
-சி.ஜீவாபாரதி