தி.மு.க. வி.ஐ.பி.யான கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு ஆறு ஆண்டுகளுக்குப் பின், வழக்கு விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டதும் புதிய புதிய பூகம்பங்கள் கிளம்பி வருகின்றன. அதில் ஒரு பூதம்தான் "சசிகலா உத்தரவில் ராமஜெயம் கொலை!'. இதை கடந்த மே.23-25 தேதியிட்ட நமது நக்கீரன் இதழில் பதிவு செய்திருந்தோம். பல்வேறு தரப்பிலும் நமது செய்தி பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ramajayam

அதனால் இப்போது ராமஜெயத்தைக் கொலை செய்வதற்கான சதிவலையின் பின்னணி குறித்து சிலர் நம்மிடம் பேச ஆரம்பித்தனர். “""2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி, சசிகலாவுடன் சேர்த்து அவரது சொந்தங்களையும் போயஸ்கார்டனைவிட்டு வெளியேற்றினார் ஜெயலலிதா. ஆனால் மூன்றே மாதத்தில் -அதாவது 2012 மார்ச் 27-ஆம் தேதி, மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டு, சசிகலா மட்டும் கார்டனுக்குள் என்ட்ரியானார். சசி என்ட்ரியான அதேநாள் அதிகாலையில்தான் ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார்.

2011 சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே தமிழகம் முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தி, தி.மு.க. புள்ளிகளைக் குறிவைத்து வறுத்தெடுத்தார் ஜெ. அதிலும் "கனிமொழியும் ராமஜெயமும் சேர்ந்து நிலக்கரி பிஸினஸில் கொள்ளையடிக்கிறார்கள்' என அனைத்துக் கூட்டங்களிலும் தவறாமல் பேசினார் ஜெ. ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் முடிவுக்கு வந்ததால், நேருவுக்கும் ராமஜெயத்துக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து தாக்கிப் பேசினார்.

Advertisment

இதனால் செம டென்ஷனான ராமஜெயம், ஸ்ரீரங்கத்தில் ஜெ. போட்டியிட்டபோது, கடுமையாக நெருக்கடி கொடுத்து ஜெ.வை கடுப்பேற்றினார். ராமஜெயத்தின் ஃபீல்டு ஒர்க்கால், ஜெ. வெற்றியின் வாக்கு வித்தியாசம் வெகுவாகக் குறைந்தது. இதுமட்டுமல்ல, திருவாரூரில் கலைஞர் வெற்றிக்கு கிடைத்த வாக்குவித்தியாசத்தைவிட தனக்கு குறைவாக கிடைத்தது ஜெ.வை ரொம்பவே ஆத்திரப்பட வைத்தது.

இதற்கடுத்ததாக, ஸ்ரீரங்கம் தொகுதியிலேயே கேர் கல்லூரி, காவிரிப் படுகையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் என ராமஜெயத்தின் வளர்ச்சி தான் எம்.எல்.ஏ.வாக இருக்கும் மாவட்டத்தில் எம்.பி. தேர்தலில் ராமஜெயம் நிற்கப்போவதாக கிடைத்த தகவல்... இவை எல்லாம் சேர்ந்து ஆத்திரத்தின் அளவைக் கூட்டியது. இதன் எதிரொலிதான் ஜெ. ஆட்சிக்கு வந்ததும் நேருவும் ராமஜெயமும் ஏகப்பட்ட வழக்குகளில் சிக்கி பெரும்பாடுபட்டனர்''’’ என்றார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. வி.ஐ.பி. ஒருவர்.

ரிடையர்டான உயர்போலீஸ் அதிகாரி ஒருவரை நாம் சந்தித்தபோது, ""தன் மீது போடப்பட்ட 17 வழக்குகளுக்கு ஜாமீன் கிடைத்த பிறகு, இந்தியாவில் இருக்கும் 17 கோவில்களுக்கு ஆன்மிக பயணம் போனார் ராமஜெயம். பயணம் முடிந்து மார்ச் 26-ஆம் தேதி ரயிலில் திருச்சிக்கு திரும்பிக்கொண்டிருக்கும் தகவல், அதே ரயிலில் பயணம் செய்த, பேராசிரியர் சிராஜுதீன் மூலமாக, அப்போதைய சென்னை கமிஷனர் ஜார்ஜுக்கு பாஸானது. இதே தகவலை தனக்கு நெருக்கமான திருச்சி கமிஷனர் சைலேஸ்குமார் யாதவுக்கும் பாஸ் பண்ணினார் சிராஜுதீன்.

Advertisment

police

சைலேஸ்குமார் யாதவுக்கு கீழ், ஏ.டி.எஸ்.பி.யாக இருந்தவர்தான் திவாகரனின் சம்பந்தியான ஜெயச்சந்திரன். ராமஜெயம் கொலை குறித்து துப்புத் துலக்கி, சில விஷயங்களை டி.சி.ராமய்யாவும் ஏ.சி.காந்தியும் கொடுத்தபோது, அந்த டீமையே மாற்றிவிட்டு, ஜெயச்சந்திரன் தலைமையில் புது டீமை ஃபார்ம் பண்ணினார் சைலேஸ்குமார். இது நடந்தவுடன் சென்னை கமிஷனர் ஜார்ஜ், திருச்சி கமிஷனர் சைலேஸ்குமாரிடம் பேசியதும் ராமஜெயத்தின் உதவியாளர் வினோத் மீது சந்தேக வலையை வீசி திசை திருப்பினர்.

அதன்பின் ராமஜெயத்தின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் திருப்தி இல்லை எனச் சொல்லி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அந்த ரிப்போர்ட்டை அனுப்ப, இரண்டு மாதம் கழித்து மீண்டும் ஒரு ரிப்போர்ட்டை வாங்கினார் சைலேஸ்குமார். அதேபோல், "காலை வாக்கிங் செல்லும்போது ராமஜெயத்தைப் பார்த்தேன்' எனச் சொன்ன நீதிபதி மணி, "வீட்டிலிருந்து கிளம்பினார்' எனச் சொன்ன வாட்ச்மேன் ஆகியோர் ஒருகட்டத்தில் "ஆளைவிட்டா போதும் சாமி' என ஓடும் நிலைக்குப் போய்விட்டார்கள். இதையெல்லாம் வெற்றிகரமாகச் செயல்படுத்தியதால்தான் திவாகரனின் சம்பந்தியானார் ஜெயச்சந்திரன்''’எனச்சொல்லி அதிர வைத்தவர்... ""ராமஜெயத்தின் உடல் மற்றும் உறுப்பு துண்டிக்கப்பட்டது சம்பந்தமான படங்களில் சில கிராபிக்ஸ் வேலைகளையும் போலீஸ் தரப்பு செய்துள்ளது'' என்றார்.

சி.பி.ஐ.யிடம் இன்னும் என்னவெல்லாம் சிக்குமோ?

-ஜெ.டி.ஆர்.