Skip to main content

திட்டமிட்டுக் கொன்ற போலீஸ் கொலையாளிகள்! -அம்பலமாகும் அரசு சூழ்ச்சி!

ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசின் எதேச்சதிகார நடவடிக்கையால் இழவுவீடாய் மாறிய தூத்துக்குடி, இப்போதுதான் மெல்ல மெல்ல இயல்புநிலைக்குத் திரும்பிவருகிறது. முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் மாநில அரசு ஒரு நபர் விசாரணை கமிஷனை அமைத்துள்ளது. தவிரவும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையும் நடைபெற்றுவருகிறது. எனினும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணைதான் தமிழக ஆட்சியாளர்களையும், ஐ.பி.எஸ். அதிகாரிகள் அந்தஸ்திலான அதிகாரிகளையும் நிம்மதியிழக்க வைத்துள்ளது.

tutyfiring

கடந்த மே 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்ததோடு நூற்றுக்கணக்கான பேர் துப்பாக்கிச் சூட்டிலும் தடியடியிலும் காயமடைந்தனர். வழக்கறிஞர் ராஜராஜன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்கவேண்டுமென மனுத்தாக்கல் செய்தார். அவரது கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், தேசிய மனித உரிமை ஆணையம் தூத்துக்குடிக்கு வந்திறங்கியது.

இந்தக் குழுவில் தேசிய மனித உரிமை ஆணைய காவல் கண்காணிப்பாளர் புகுல் பிரிட்டோ பிரசாத், துணைக்கண்காணிப்பாளர் ராஜ்வீர் சிங், ஆய்வாளர்கள் நிதின்குமார், அருண் தியாகி, லால்பகர் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். தூத்துக்குடி எஸ்.ஆர்.எம். ஹோட்டலில் 6 அறைகளைப் பதிவுசெய்து தங்கியவர்கள், தூத்துக்குடி மாநகராட்சிக்குச் சொந்தமான மேற்கு மண்டல அலுவலகத்தையே விசாரணை அலுவலகமாக மாற்றிக்கொண்டனர்.

சம்மன் 13 - ஆஜர் 8 !

கடந்த ஜூன் 2-ஆம் தேதி தூத்துக்குடிக்கு வந்த ஆணைய உறுப்பினர்கள், முதலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, புதிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, எஸ்.பி. முரளி ரம்பா உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்திவிட்டு, அங்கே எரிக்கப்பட்ட வாகனங்கள், சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட்டனர். ஆணையத்திலுள்ள அதிகாரிகள் ஆங்கிலம், இந்தி அறிந்தவர்கள். தமிழ் தெரியாதவர்கள் என்பதால், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி தெளிவான வாக்குமூலம் பெற பேராசிரியர் சுப்பிரமணியம் என்பவர் நியமிக்கப்பட்டார்.

அதன்பின் அங்கிருந்து கிளம்பும்போது துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்துக்கு வருவாய்த்துறை மூலமாக சம்மன் அனுப்பப்பட்டது.

ஞாயிறன்று மனித உரிமை ஆணையத்தில் கார்த்திக், கந்தையா உள்ளிட்ட 8 பேரின் குடும்பம் மட்டும் வருகைதந்து தங்களுக்குத் தெரிந்த தகவல்களைக் கூறினர். இந்த விசாரணையில் மனித உரிமை ஆணைய எஸ்.பி. பிரிட்டோ பிரசாத், டி.எஸ்.பி. ராஜ்வீர் சிங் கவனம்செலுத்த, ஏனைய மூன்று இன்ஸ்பெக்டர்களும் அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்களை விசாரிக்கச் சென்றுவிட்டனர். விசாரணை பரம ரகசியமாகவே சென்றது. "தண்ணீர் கொடுக்கக்கூட எங்களை உள்ளே கூப்பிடவில்லை' என்கிறார்கள் அப்போது அங்கிருந்த வருவாய்த் துறையினர்.

tuty-commission

சிறுமிக்கும் சித்ரவதை!

ஆணையத்தின் விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வந்த சிலரின் கருத்தை அறிய முயற்சிசெய்தோம். துப்பாக்கிச் சூட்டில் பலியான மல்லர்புரம் சிலோன் காலனி கந்தையாவின் மனைவி செல்வமணி, “""என்ன நடந்துச்சுன்னு எங்ககிட்ட கவனமா கேட்டாங்க. தாழ்த்தப்பட்ட சமூகம் நாங்க. என் பையன் ஜெகதீசன் மனநிலை சரியில்லாதவன். பச்சைப்புள்ளைய கவனிக்கிறமாதிரிதான் அவனைப் பார்த்துக்கணும். என் வீட்டுக்காரருக்கு கட்டட சென்ட்ரிங் வேலை. அவர் வேலைபார்த்தாதான் எங்க பாடு கழியும். 38 வருஷமா நாங்க இங்க இருக்கோம்.

ஊர்வலம் போன என் வீட்டுக்காரரை நெஞ்சுல சுட்டு சாய்ச்சுடுச்சு போலீஸ். அப்ப நாங்க போய் பார்த்தப்ப தார்ப்பாய் போட்டு மூடியிருந்தாங்க. நெஞ்சுல குண்டுதுளைச்ச ரத்தம் பெருகிக்கிடந்துச்சு. அப்ப அவர அடையாளம் காட்டுன எம் மச்சினன காரணமேயில்லாம போலீசு தடிக்கம்பால அடிச்சாங்க. நடந்ததை சொன்னதும் எழுதிக் கையெழுத்து வாங்கிக்கிட்ட ஆணைய அதிகாரி, அவரோட ஆதார் அட்டை, ரேஷன் கார்டு நகலையும் கொண்டுவரச்சொல்லி வாங்கிக்கிட்டாங்க'' என்றார்.

பாத்திமா நகரைச் சேர்ந்தவர் சிறுமி நிஷா. 9-ஆம் வகுப்பு பயிலும் இவரை போலீஸ் காட்டுமிராண்டித்தனமாக அடித்ததில், கைஎலும்புகள் நொறுங்கி சிகிச்சை பெற்றுவருகிறார். இதனை சீரியசாகப் பார்க்கும் ஆணையம் போலீசின் அத்துமீறலை கவனமாக ரெக்கார்டு செய்திருக்கிறது.

""ஸ்டெர்லைட் போராட்டத்தப்ப போலீஸ் என்னைக் கைதுபண்ணி தென்பாகம் காவல்நிலையம் கொண்டுபோனாங்க. அங்க என்னோட 65 பேரு. போலீஸ்காரங்க சுத்திநின்னு எல்லாரையும் வெளுத்தெடுத்தாங்க. அப்புறம் புதுக்கோட்டை துப்பாக்கி சுடுதளத்துக்கு கொண்டுபோய் அடி, ஜெயிலு!

விளாத்திகுளம் குற்றவியல் நீதிபதி என்னை விடச்சொல்லியும் விடலை. தூத்துக்குடி ஜே.எம். நீதிபதி சாருஹாசினிதாம் தன்னோட சொந்த ஜாமீன்ல வெளியேவிட்டாங்க''’ என நடந்ததை ஆணையத்தில் பதிவுசெய்திருக்கிறார் வழக்கறிஞர் ஸ்டாலின்.

tutyfiringவெலவெலத்த தாசில்தார்கள்

துப்பாக்கிச் சூட்டின்போது ஒவ்வொரு பகுதிக்கும் நிர்வாக நடுவர் பணியினை மேற்கொண்ட தாசில்தார்களில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நெடுஞ்சாலை சந்திப்பு, வேலைவாய்ப்பு அலுவலக சந்திப்பு பகுதியிலிருந்த ராஜ்குமார் தங்கசீலன், ஸ்டெர்லைட் ஆலை பகுதியிலிருந்த அழகர், பழைய பேருந்து நிலையம் பகுதியிலிருந்த சந்திரன், மடத்தூர் பகுதிக்கான கண்ணன், திரேஸ்புரம், பாத்திமா நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கான பொன்னுலட்சுமி, பண்டாரம்பட்டி பகுதிக்கான ராமகிருஷ்ணன், மூன்றாவது மைல் பகுதிக்கான கோபால் உள்ளிட்ட 9 தாசில்தார்கள் திங்கட்கிழமை ஆணையத்தின் முன் ஆஜராகவேண்டுமென சம்மன் அளித்தது ஆணையம்.

""யாரைக் கேட்டு துப்பாக்கிச் சூட்டிற்கான உத்தரவைப் பிறப்பித்தீர்கள்? யாருடைய வற்புறுத்தலும் இருந்ததா? துப்பாக்கிச் சூடு உத்தரவு பிறப்பிக்கவேண்டிய அவசியம் என்ன? இந்தப் பகுதிக்கான தாசில்தாராக இருந்துகொண்டு அதேபகுதிக்கு எப்படி சுட உத்தரவளித்தீர்கள்?''“ என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பின ஆணையம். சந்திரன், கண்ணன், சேகர் உள்ளிட்ட மூன்று தாசில்தார்களும் இதில் வெலவெலத்துப் போனார்கள். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபால், “""நான் காவல்துறையிடம் எந்தப் புகாரும் கொடுக்கலை'' என கைப்பட எழுதிக்கொடுக்க, அதையும் மறக்காமல் குறித்துக்கொண்டிருக்கின்றனர்.

சத்தியம் செய்த எஸ்.பி.

வருவாய்த்துறையினர் மீதான விசாரணை முடிந்ததும், அன்று மாலையே தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு தூத்துக்குடி மாவட்ட முன்னாள் எஸ்.பி. மகேந்திரனை அழைத்து விசாரித்தனர். “உயரதிகாரிகளான தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவும், நெல்லை சரக டி.ஜி.யும் இருக்கும்போது நான் என்ன முடிவெடுக்கமுடியும்? அன்றைய தினம் நான் தவிர்க்கப்பட்டேன்கிறதுதான் உண்மை''’என சத்திய வாக்குமூலமளித்து அதற்கான ஆவணத்தையும் சமர்ப்பித்திருக்கிறாராம்.

கலெக்டரின் ஜமாபந்தியில் சந்தேகம்

செவ்வாய்க்கிழமை மதுரை விமான நிலையத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேசனை விசாரித்தது ஆணையம். “""சம்பவ நாளில் கோவில்பட்டி ஜமாபந்தியை திட்டமிட்டது எதேச்சையானதா? காரியமாகவா? உள்ளிட்ட கேள்விகளைப் பட்டியலிட்டது ஆணையம். தடுமாறிச் சமாளித்திருக்கிறார் வெங்கடேசன். தவிரவும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை எஸ்.பி., டி.எஸ்.பி. இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், காவலர்கள் என மொத்தம் 42 பேரிடமும் கிடுக்கிப்பிடி போட்டு கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளனர்.

tutyfiring

புதன்கிழமையன்று தூத்துக்குடி வடக்கு, தெற்கு குற்றப்பிரிவு மற்றும் ஒட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர்களையும் மாவட்டத்தின் பல்வேறு டி.எஸ்.பி.களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஸ்டெர்லைட் வளாகத்துக்கு எஸ்.பி. அருண்சக்திகுமாரை அழைத்துச்சென்றதாகக் கூறப்படும், நெல்லை மாவட்ட எஸ்.பி.யின் கன்மேனான மாதுஜானையும் விசாரித்திருக்கிறது மனித உரிமை ஆணையம். ஐ.ஜி., டி.ஜி.பி. வரை ஆப்பு நீள்கிறது.

ஒட்டுமொத்தமாய் 187 நபர்களை விசாரித்துவிட்டு கிளம்பியிருக்கிறது.

போலீஸ் கொலையாளிகள்!

அண்ணாநகர் காளியப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து அன்று அங்கு பணியிலிருந்த டி.ஜி.பி. பிரதீப்குமாரிடம் ஆணையம் விளக்கம் கேட்டபோது பதிலில்லை. ஆனால், ""பேண்ட் ஜிப்பை அவிழ்த்து கேலி செய்ததால் அதனாலே சுட்டோம்'' என கான்ஸ்டபிள் ரேஞ்சில் உள்ள மற்றொரு போலீசாரின் பதிலும் பதிவானதாக தகவல். 8 இன்ஸ்பெக்டர்கள், 13 சப்-இன்ஸ்பெக்டர்கள், 22 குறி பார்த்து சுடும் சிறப்பு படையினரை முன்கூட்டியே ஏற்பாடு செய்து கொலை செய்துள்ளது தமிழக அரசு. இவர்களுக்கு பயிற்சி தந்தவர்கள் என போலீஸ் கொலையாளிகள் எண்ணிக்கை மட்டும் 57. இது அத்தனையும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் பதிவாகியுள்ளது. இனி யாரும் தப்பிக்க முடியாது'' என்றார் குட்கா மற்றும் டி.என்.பி.எஸ்.சி. ஊழல் வழக்கினை வெளிக்கொணர்ந்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வழக்கறிஞரான கண்ணன்.

வரும் ஜூன் 18 அல்லது 20-ஆம் தேதி தேசிய மனித உரிமை ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தன் அறிக்கையைச் சமர்ப்பிக்குமெனச் சொல்லப்படுகிறது. சிந்தப்பட்ட ரத்தத்துக்கும் கண்ணீருக்கும் அந்த அறிக்கையில் பதிலிருக்குமா? சூழ்ச்சிகள் அம்பலமாகுமா?

பரமசிவன், நாகேந்திரன்
படங்கள்: ப.ராம்குமார்

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்