நிலம் அதிர்ந்த ஒலி, கொடும் நெருப்பு கக்கிய கரும்புகை என, நெய்வேலி என்.எல்.சி. நிலக்கரி சுரங்கம் தொடங்கப்பட்ட 60 ஆண்டுகளில், இப்படியொரு கோர விபத்து நடந்ததில்லை என்று அதிர்ச்சி விலகாமல் கூறுகிறார்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

2019ல், என்.எல்.சி.யின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் இருக்கும் ஆறாவது யூனிட்டில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் பலியானார்கள். கடந்த மே மாதம் அதே யூனிட்டில் நடந்த பாய்லர் வெடிவிபத்து, ஐந்து பேரின் உயிரைக் குடித்தது. தற்போது ஜூலை 01ந்தேதி, ஐந்தாவது யூனிட்டில் மீண்டும் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 11 பேர் கவலைக்கிடமானார்கள். இந்த விபத்தில் உயிரிழந்த கல்லுமேடு கிராமத்தின் வெங்கடேச பெருமாள், காப்பான்குளம் சிலம்பரசன், மேலகுப்பம் பத்மநாபன், கொள்ளிருப்பு அருண்குமார், நெய்வேலி டவுன்ஷிப் நாகராஜ், ஆத்திகுப்பம் ராமநாதன் என ஆறுபேருமே ஒப்பந்தத் தொழிலாளர்கள்.

nlc

இரண்டாவது அனல்மின் நிலையத்தை நினைத்தாலே பதறுமளவுக்கு, அடுத்தடுத்து விபத்தும் உயிர்ப் பலிகளும் நடக்கின்றன. இதற்கான காரணத்தை அறிய, என்.எல்.சி.யில் பணிபுரியும் தொழிலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேசினோம். ""என்.எல்.சி. நிர்வாகம் லாபத்தைக் காட்டுவதற்காக தரமற்ற தளவாடங்களை வாங்குவதும், அதை அனுபவமற்ற கம்பெனிகளைக் கொண்டு பராமரிப்பதுமே விபத்துகளுக்கான முக்கியக் காரணம். மேலும், 27 ஆயிரம் நிரந்தரப் பணியாளர் களும், 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிபுரிந்து வந்த இடத்தில், தற்போது 10 ஆயிரம் நிரந்தரப் பணியாளர்களும், 10 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் மட்டுமே வேலை செய்கிறார்கள். ஆட்குறைப்பின் மூலம் பெரும்பாலான பணிகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அப்படி கொடுக்கப்பட்டதன் விளைவு, விபத்தில் முடிந்திருக்கிறது.

ஆண்டுக்கு ஒருமுறை 40 நாட்கள் நடைபெற்று வந்த பராமரிப்புப் பணிகளை 20 நாட்களாக குறைத்துவிட்டனர். என்.எல்.சி. அனல்மின் நிலையத்தில் உள்ள அனைத்து இயந்திரங்களும் நவீனமுறையில் வாங்கப்பட்டதாக கூறுகிறார்கள். அவற்றை இயக்குவதற்கு நவீன வழிமுறைகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு பாய்லர்கள் அதிகமாக சூடேறினால், அதன் ஆவியை வெளியேற் றுவதற்காக ஒருவித ஒலி எழுப்பும். அப்போது அதிகப்படியாக உருவாகும் கேசை வெளியேற்றுவதற்கு உரிய வழியை திறந்துவிட்டால் பாய்லர் வெடிக்காது. அதை இயக்குவதற்காக பொறியியல் படித்த வட மாநில இளைஞர்களை இறக்குமதி செய்து வைத்திருக்கிறார்கள். அந்த இளைஞர்களோ, ஆண்ட்ராய்டு போன்களை நோண்டிக்கொண்டு, பாய்லரில் கவனம் செலுத்துவதில்லை.

அதேபோல், என்.எல்.சி.யில் ஏற்படும் விபத்துகளுக்கு கீழ்நிலை ஊழியர்களையே பொறுப்பாக்கி, மெமோ கொடுத்து சஸ்பெண்ட் செய்கிறார்கள். அதிகாரிகளைக் கண்டுகொள்வதில்லை. இனி ஒருபோதும் அப்படி நடக்கக்கூடாது. இந்த விபத்துக்குக் காரணமான அதிகாரிகள் மீது கொலைவழக்குப் பதிவு செய்து கைது செய்யவேண்டும்'' என்று வலியுறுத்துகிறார்கள்.

மேலும், ""நிர்வாகத்தின் அலட்சியத்தால் மூன்றுமுறை பாய்லர் வெடித்து, ஒப்பற்ற உயிர்களை இழந்துவிட்டோம். இதற்கு தளவாடங்கள் வழங்கிய கம்பெனி, இதை நிர்மாணம் செய்த ஒப்பந்ததாரர்களும் பொறுப்பேற்க வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமலிருக்க, டெக்னிக்கல் சம்மந்தமான இயந்திரங்களை தேர்ந்த வல்லுனர்களைக் கொண்டு என்.எல்.சி. நிர்வாகமே பராமரிக்க வேண்டும். இதுபோன்ற முக்கியமான பணிகளை காண்ட்ராக்ட் முறையில் எந்தக் கம்பெனிக்கும் ஒப்படைக்கக் கூடாது. தமிழகத்தில் படித்த திறமையான பொறியாளர்கள், இயந்திர வல்லுனர்கள் இருந்தும், வடமாநில இளைஞர்களை இறக்குமதி செய்து தமிழக ஒப்பந்தத் தொழிலாளர்களை பலி கொடுக்கிறார்கள்'' என என்.எல்.சி. தொழிலாளர்கள் அதிருப் தியை வெளிப்படுத்துகிறார்கள்.

இனிவரும் காலங்களில் இது போன்ற உயிரிழப்புகள் நேராமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் உக்கிரவேல், ""என்.எல்.சி. நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதிலும், வாரிசுகளுக்கு வேலை கொடுப்பதிலும் நிர்வாகம் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அதேநேரம், செலவுக் குறைப்பு என்ற பெயரில் தரமற்ற தளவாடங்களையும், திறமையற்ற வடமாநிலத் தொழிலாளர்களையும் இறக்குமதி செய்து, என்.எல்.சி. நிர்வாகத்தையே மொத்தமாக சீரழித்து வருகிறார்கள். இதனால், பாதிக்கப்படுவது என்னவோ, நம்முடைய ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான். எனவே, இங்கு பணிபுரியும் வடமாநிலப் பணியாளர்களை வெளியேற்றிவிட்டு, படித்த திறமையான நம்மூர் இளைஞர்களை நியமிக்க வேண்டும். இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். இனியும் நடத்துவோம்'' என்றார் உறுதியுடன்.

""இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு கேட்டும், நிரந்தர வேலை கேட்டும் இறந்துபோன தொழிலாளர்களின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இரண்டாவது நாளும் அனல் மின் நிலையம் முன்பு காலை 6 மணி ஷிப்ட்டுக்கு செல்லும் தொழிலாளர்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு செல்லவில்லை. மேலும் மதியம் 2 மணி ஷிப்டுக்கும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து என்எல்சி நிறுவன தலைவர் ராகேஷ்குமார் தலைமையில் அனைத்து கட்சிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் முடிவில் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு 30 லட்சம் நிவாரணமும், நிரந்தர வேலையும் வழங்குவதாகவும், தீக்காயமடைந் தவர்களுக்கும் 5 லட்சம் நிவாரணம் வழங்குவதாகவும் என்.எல்.சி நிர்வாகம் ஒப்புக்கொண்டதால் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

அனைத்து துறைகளிலும் திறமையற்றவர்கள் நுழைந்து, சொகுசு வாழ்க்கை வாழும் என். எல்.சி. நிர்வாகத்தை புனரமைக்க வேண்டும். தொழிலா ளர்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ளாமல், இயந்திரங்களைப் போல நடத்தும் அலட்சியம் நிறைந்த அதிகாரிகள், என்.எல்.சி. நிர்வாகம் முழுவதும் நிரம்பிக் கிடக்கிறார்கள். அவர்களை களையெடுக்காவிட்டால், இந்த விபத்துகளைத் தடுத்துநிறுத்த முடியாது'' என்று தங்களது கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள், அடுத்தடுத்த விபத்துகளாலும், உயிரிழப்புகளாலும் அதிர்ச்சியிலும், கொதிப்பிலும் இருக்கும் என்.எல்.சி. தொழிலாளர்களும், அவர் களது உறவினர்களும்.

மத்திய அரசின் கணக்கு வேறு விதமாக இருக்கிறது என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள். ""காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலிருந்தே என்.எல்.சி.யை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கலைஞரின் எதிர்ப்பினால் முதலில் அது கைவிடப்பட்டது. அடுத்ததாக, என்.எல்.சி. பங்குகளை மத்திய அரசு விற்குமானால் அதனை தமிழக அரசு வாங்கும் என ஜெயலலிதா முடிவெடுத்தார். இப்படி பல கட்டங்களிலும் காப்பாற்றப்பட்டு வந்த என்.எல்.சி.யை பல வகையிலும் மெல்ல மெல்ல தனியார் மயமாக்கியும், ஒப்பந்த அடிப்படையிலும் நிர்வாகம் செய்யும் நிலையில், பிரதமர் மோடிக்கு நெருக்கமான அதானி நிறுவனம் பல வகைகளிலும் இதற்குள் நுழையத் தொடங்கியிருப்பதையும், அதானியிடம் என்.எல். சி.யை தாரை வார்க்கக்கூடும் என்றும் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

- எஸ்.பி.சேகர்