நாமக்கல் அருகே கூலித்தொழிலாளர்களைக் குறிவைத்து சட்டவிரோதமாக சிறுநீரகங்களை திருடும் கும்பல் குறித்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கிப் போட்டுள்ளது. நாமக்கல் அருகிலுள்ள பள்ளிபாளையம், விசைத்தறிக்கூடங்கள், சாயப் பட்டறைகள் நிறைந்த நகரம். தொழில் நசிவு காரணமாக கடன் வலையில் சிக்கித் தவிக்கும் கூலித்தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து, ஒரு கும்பல் சட்ட விரோதமாக சிறுநீரகங்களை தானம் செய்ய வைப்பதாக ஒரு தகவல் சில நாள்களுக்கு முன்பு கசிந்தது. இதையறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி, இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டதில் பகீர் தகவல்கள் வெளிவந்தன. இவ்விவகாரம் குறித்து நக்கீரன் விசாரணையில் இறங்கியது.
பள்ளிபாளையம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த தி.மு.க. பேச்சாளர் ஆனந்தன் என்பவர், அப்பகுதியில் சட்டவிரோத கிட்னி விற்பனைக்கான புரோக்கராக செயல்பட்டு வருவது தெரியவந்தது. கந்துவட்டி, மீட்டர் வட்டியெனக் கடன் வாங்கி, மீள முடியாத குடும்பங்கள்தான் ஆனந்தனின் இலக்கு. கடனில் தத்தளிக்கும் கூலித் தொழிலாளர் களை அணுகும் ஆனந்தன், தனக்குத் தெரிந்தவ ருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உடனடியாக கிட்னி தேவைப்படுகிறது. கிட்னியை தானம் கொடுக்க சம்மதித்தால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும். கடனையெல்லாம் அடைத்துவிட்டு, குழந்தைகளின் படிப்பு, திருமணச் செலவுக்கு வைத் துக்கொள்ளலாம். அரிய வகை ரத்தப்பிரிவென்றால் 50 லட்சம் வரை கிடைக்கும் என்றெல்லாம் கூறி வலைவிரித்துள்ளார். சட்ட விரோத உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள வசதியாக திருச்சி, பெரம்பலூர், ஈரோடு, கோவை, கேரளாவில் சில தனியார் மருத்துவமனைகளை ஆனந்தன் பயன்படுத்தி வந்திருக்கிறார்.
கிட்னி கொடுப்பவரின் பெயர், முகவரி, செல்போன் எண்கள் உள்பட அனைத்தும் போலி யானவை என்பதும், கிட்னி தானம் கொடுத்தவ ருக்கு முழுமையான தொகையைத் தராமல் வெறும் இரண்டு லட்சம், மூன்று லட்சம் ரூபாயை மட்டுமே கொடுத்து கம்பி நீட்டியிருப்பதும் தெரியவந்தது.
இதற்கிடையே, தமிழக சுகாதாரத்துறை சட்டப்பிரிவு இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரம், நாமக்கல் மாவட்ட சுகாதாரப்பணிகள் துறை இணை இயக்குநர் ராஜ்மோகன், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர் வீரமணி ஆகியோர் அடங்கிய குழுவினரின் முதற்கட்ட விசாரணையில், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கவுசல்யா, விஜயா உள்பட 6 பெண்களிடம் ஆனந்தனும், இன்னும் சில புரோக்கர்களும் சேர்ந்து சட்டவிரோதமாகக் கிட்னியை விற்பனை செய்ய வைத்தது தெரிய வந்துள்ளது. இப்போதைக்கு கவுசல்யாவின் வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பள்ளி பாளையம் விசைத்தறித் தொழிலாளர்களிடம் விசாரித்தோம். "கடந்த 2010, 2011 காலக்கட்டத் திலேயே பள்ளிப்பாளை யத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு விசைத்தறித் தொழில் ரொம்பவே நசிந்து விட்டது.
வேலைவாய்ப் பில்லாததால் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தும் நிலை. பத்து ரூபாய் வட்டிக்கு கடன் வாங்குகின்றனர். அதைச் செலுத்த முடியாதபோது வட்டிக்கு வட்டி வசூலிக்கின்றனர். 100க்கு 30 ரூபாய் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. வெறும் 50 ஆயிரம் ரூபாய் கடனுக்கு 7 லட்சம் வரை திருப்பிக் கொடுத் தவர்கள் இருக்கிறார்கள். கடன்காரர்களிடம் வீட்டையும், நிலத்தையும் இழந்தவர்கள் இந்தப் பகுதியில் ஏராளம்.
இந்த சூழலில் தான் கிட்னியை சட்ட விரோதமாக விற்பனை செய்யலாமென ஆசைகாட்ட, பாதிக்கப்பட்டவர்கள் உடன்படுகின்றனர்.
கிட்னி விற்பனைக்கு ஆள் பிடித்துக் கொடுத் தாலே 50 ஆயிரம் ரூபாய் கமிஷன் கிடைக்கிறது. அதனால் சிலர் புரோக்கராகவும் மாறிவிட்ட னர். கடந்த 15 ஆண்டுகளில் ஒரு கிட்னியை மட்டும் இழந்தவர்கள் 100க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். சிலர் உடல்நலமில்லாமல் இறந்தும் விட்டனர். காவல்துறையில் பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை'' என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.
நாமக்கல் சுகாதாரப்பணிகள் துறை வட்டாரங்களில் விசாரித்தோம். "முதல்கட்ட மாக கவுசல்யா என்பவரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கவுசல்யாவின் கணவர் உணவகத்தில் சர்வர். கடனை அடைப்பதற்கு பணம் தேவைப்பட்டதால் கவுசல்யாதான் ஆனந்தனை அணுகியிருக்கிறார். ஈரோட்டி லிருந்தபோதே அவர் தனது இடப்பக்க கிட்னியை ஆனந்தன் மூலமாக விற்பனை செய்துள்ளார்.
பெரம்பலூரிலுள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் வைத்து கவுசல்யாவுக்கு கிட்னி அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகவும், இதற்காக 6 லட்சம் ரூபாய் தரப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது சுகாதாரத்துறை தரப்பு. களத்தில் ஓரிரு சம்பவம் மட்டுமே நடந்துள்ளதாகவும், ஊடகங்கள் மிகைப்படுத்தியதாகவும் புலம்புகிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள். தலைமறைவான புரோக்கர் ஆனந்தன் சிக்கும்போதுதான் முழு நெட்வொர்க்கும் தெரியவரும்'' என்கிறார்கள்.
பள்ளிபாளையம் காவல்துறையில் கேட்ட போது, "நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் கிட்னி விற்பனை தொடர்பாக புகாரளித்துள்ளார். இதுவரை எஃப்.ஐ.ஆர். கூட போடப்படவில்லை. விசாரணை அறிக்கை கிடைத்தபிறகே எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும். ஆனந்தன் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு என டிவி சேனல்கள்தான் தவறான தகவல்களைச் சொல்லிவருகின்றன'' என்றனர். இவ்விவகாரத்தில் பிரபல தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தின் பெயரும் அடிபடுவதால், விரைவில் அம்மருத்துவ மனையில் விசாரணை நடத்தவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை தேவையென்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.