பூவை ஜெகன்மூர்த்தி, ஏ.டி.ஜி.பி. ஜெயராம் ஆகியோர் சம்மந்தப்பட்ட சிறுவன் கடத்தல் வழக்கு சுப்ரீம் கோர்ட்டை எட்டியுள்ளது. திருவாலங்காடு காவல் நிலையத்தில் இந்த கடத்தல் தொடர்பாக மகேஸ்வரி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விசாரணை செய்யும்போது, அவர்களுக்கு ஜெகன்மூர்த்தி உதவியதாகவும் அவர்தான் சிறுவனை கடத்தச் சொன்னதாகவும் வாக்குமூலம் அளித்தார்கள். ஏ.டி.ஜி.பி. ஜெயராம் அவருடைய அரசு வாகனத்தை போலீஸ் டிரைவருடன் கொடுத்து கடத்தலுக்கு உதவியாக இருந்தார் என்று போலீசார் தரப்பில் சொல்லப்பட்டது. அதனால் உயர்நீதிமன்றம் ஜெயராமை கைது செய்ய உத்தரவிட்டு, ஜெகன்மூர்த்தியை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு ஆணையிட்டது.

உயர் நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயராமை கோர்ட்டிலிருந்து திருவாலங்காடு காவல் நிலையத்துக்கு காவல் துறை கொண்டு சென்றது. அங்கு அதிகாலை இரண்டு மணிவரை வைத்திருந்தார்கள். அதைத் தொடர்ந்து திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகம் கொண்டு செல்லப் பட்டார். மறுநாள் காலை ஜெகன்மூர்த்தி வழக்கை விசாரிக்கும் ஆய்வாளர் முன்னிலையில் ஆஜரானார். அன்று மாலையே ஜெயராமும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜரானார். ஜெயராமுக்கும் கடத்தலுக்கும் உள்ள தொடர்பு பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. குற்றவாளிகளுக்கும் ஜெயராமுக்கும் உள்ள அறிமுகம் பற்றி விசாரிக்கப்பட்டது. அவரது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. போலீஸ் விசாரணைக்கு அழைக்கும் நேரத்தில் வருவேன் என்ற ஒப்புதலை அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அவரை அனுப்பிவிட்டார்கள்.

ss

அதைத் தொடரந்து சுப்ரீம் கோர்ட்டில் ஓய்வுக்கால நீதிபதி உஜால்புயான் தலைமையிலான பெஞ்சில் ஜெயராம் வழக்கு தொடர்ந்தார். ஜெயராமுக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் ராஜேஷ்சிங் சௌகான் மற்றும் ராம்சங்கர் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றம் ஜெயராமை கைது செய்யப் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்குமாறு கோரிக்கை வைத்தனர். அதில் "அவர் ஒரு சீனியர் போலீஸ் அதிகாரி. அவரை உயர்நீதிமன்ற வளாகத்தில் கஸ்டடியில் எடுத்திருக்கிறார்கள். அவர் திருவாலங்காடு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கடத்தல் வழக்கில் ஏற்கெனவே ஜாமீன் கேட்டிருக் கிறார். இந்தக் கைது, இயற்கை நீதிக்கு எதிரானது. அவர் கடத்தலில் சம் பந்தப்படவில்லை. அதே நேரத்தில், அவருக்கு நான் குற்றமற்றவன் என வாதிடும் வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை. உயர்நீதிமன்றம் அவரை உடனடியாக கைது செய்து போலீஸ் காவலில் விசாரிக்கும் அளவிற்கு எந்தவிதமான சூழலும் எழவில்லை. இந்தக் கைது, கடத்தல் வழக்கின் நோக்கத்தையே சிதைக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் இதை சொல்லவில்லை. உயர்நீதி மன்றம் தனக்குள்ள உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி காவல் துறையின் தலைமைப் பதவியில் ஒன்றான ஏ.டி.ஜி.பி. பதவியில் உள்ள ஒரு அரசு அலுவலரை கைது செய்தது இந்தியாவிலேயே முதல் முறை. ஆகவே இது ஒரு விசித்திரமான உற்று நோக்க வேண்டிய வழக்கு. இது அதிகாரிகளுக்கு இடையேயான மோதலில் நடைபெற்றுள்ளது''’என வாதிட்டார்கள். வழக்கை விசாரித்த நீதிபதிகள், "நாங்கள் பல ஆண்டுகளாக நீதிபதிகளாக இருக்கிறோம். எங்களுக்கு உயர் நீதிமன்றத்திற்கு கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தும் அதிகாரம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆகவே, இது தொடர்பாக மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்.

இது பற்றி நம்மிடம் பேசிய தமிழக காவல்துறை அதிகாரிகள், "அதிகாரிகளுக்கு இடையிலான போட்டியினால் ஜெயராம் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார் என்பது பொய். அவரது அரசு வாகனம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டது. அந்த வாகனத்தை ஓட்டிய போலீஸ்காரர், அதிகாரிதான் காரை கொடுத்து அனுப்பினார் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அந்தக் காரில் கடத்தல் குற்றம் நடைபெற்றது. குற்றவாளிகளை ஜெயராமுக்கு நன்றாகத் தெரியும். கடத்தலுக்கு முன்பும் பின்பும் அவர்களுடன் ஜெயராம் பேசியிருக்கிறார். ஆனால் இதை எதையும் தமிழக காவல் துறை ஹைகோர்ட் டில் அறிக்கையாக தரவில்லை. கடத்தலில் நடைபெற்ற விவரங்களை மட்டும்தான் நாங்கள் சொன்னோம். அதில் தொடர்புடைய ஜெயராமை கைதுசெய்ய உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். அவரை உடனடியாக கைது நடவடிக்கைக்கு உட்படுத்தி, புழல் சிறையில் நாங்கள் அடைத்திருக்க முடியும். அவ்வாறு செய்யாமல் நாங்கள் அவரிடம் விசாரணை நடத்தி, அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டோம். அதிகாரிகளுக்கு இடையே யான போட்டியை எப்படி ஒரு கடத்தல் குற்றத்துடன் தொடர்புபடுத்த முடியும். அவர்களுக்கு இடையேயான போட்டியால் கடத்தல் நடைபெற்றதா என்பதற்கு என்ன ஆதாரம்'' என எதிர் கேள்வி கேட்கிறார்கள்,’ தமிழக காவல்துறை அதிகாரிகள்.

Advertisment