"தமிழ்நாட்டில் உள்ள மாநகர நுண்ணறிவு பிரிவு காவலர்கள், மாவட்ட தனிப்பிரிவு காவலர் களின் பணியிடங்களை ரத்து செய்தால் மட்டுமே, காவல்துறையை நேர்மையான துறையாக மாற்றமுடியும்' என்கிறார்கள் நேர்மைக்கு பெயர்போன அதிகாரிகள்.

"எப்படி?' என நாம் கேட்பதற்குள், அவர்களே நம்மிடம்... "ஐ.எஸ். என்பது காவல்துறையின் வலது கை போன்றது. அதாவது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, மாவட்டங்களில் அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் நடக்கும் சட்டவிரோத செயல்கள், முன்பகை, கோஷ்டிப் பூசல் காரணமாக கொலை நடக்க வாய்ப்புள்ளதையும், சூதாட்டம், போதைப்பொருள் விற்பதை தடுப்பதும், ரவுடி களை கண்காணிப்பதும் நுண்ணறிவுப் பிரிவின் தலையாய பணிகள். அது மட்டுமில்லாமல் குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறையைவிட்டு வெளியே வந்தவர்களை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தனித்தனியாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அத்தகைய காவலர்கள், மாநகர அளவில் ஐ.எஸ். போலீஸ் ஏட்டு எனவும், மாவட்ட அளவில் எஸ்.பி. ஏட்டு எனவும் அழைக்கப்படுகின்றனர்.

police

இவர்கள் யாருக்கும் சீருடை கிடையாது. குறிப்பிட்ட பகுதியைச் சுற்றி சட்டவிரோத செயல்களைத் தெரிந்துகொண்டு, உயர் அதிகாரி களுக்கு தகவல் அளிக்கவேண்டும். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, கோவை வெரைட்டி ஹால் ஸ்டேஷன் பகுதிக்கு உட்பட்ட, ஒரு குடோனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள குட்கா, பான்பராக் இருப்பதைக் கண்டறிந்த பிரேம் என்கிற ஐ.எஸ். ஏட்டு, அப்போதைய உயரதிகாரியாய் இருந்த டி.சி. சுகுமாரின் காதுக்கு கொண்டு சென்றார்.

Advertisment

உடனே ஒரு நள்ளிரவில் அந்த குடோன் சில மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதை வெளியே சொல்லமுடியாமல் தவித்தார் குடோன் உரிமையாளர் சேட். பிரேம் தலையிட்டு, "சேட்டு… உன் குடோன்ல இருந்ததெல்லாம் ஹார்லிக்ஸ், போன்விட்டா, போன்ற உணவுப் பொருட்கள்னு எப்.ஐ.ஆர். போட்டுத் தர்றோம். நீ க்ளைம் பண்ணிக்கலாம். அதுக்கு எங்க டி.சி.யை பெரியஅளவுல கவனிக்கணும்... சரியா'ன்னு டீலிங் பேசியபின், டி.சி.யே ஸ்பாட்டுக்கு வந்து 75 லட்சம் கேட்டாரு. அதுவும் ஒரு நாளைக்குள்ள தரணும்னு சொன்னதையும், சேட்டுனால பாதி பணமே புரட்ட முடிந்ததை தாங்கிக்கொள்ளாத டி.சி. அதிகாலை யில ரோட்ல வச்சி சேட்டை அடிச்சதையும் நக்கீரன்தான் சொல்லுச்சே.

அதோடு குடோனை உடைத்த மர்ம நபர்கள் சுகுமார் செட்டப் செய்த ஆட்கள் என்பதும் வெளிவந்த பிறகு, அப்போதைய கமிஷனராய் இருந்த விஸ்வநாதன் இதைப்பற்றி விசாரணை செய்த போது "ஏட்டு பிரேம், மாசா மாசம் தன்னிடமிருந்து பத்தாயிரம் வாங்கிக் கொள்வார்' என சொன்னார். உடனே விஸ்வநாதன் பிரேமை வேறு ஸ்டேசனுக்கு தூக்கி அடித்தார்.

அது முதலே ஐ.எஸ். என்கிற பிரிவையே கலைத்துவிடச் சொல்லி போலீசாரில் ஒரு பிரிவினர் கோரிக்கை வைக்க ஆரம் பித்தனர். அது முடிவதற்குள், பீளமேடு ஸ்டேசனில் ஐ.எஸ். ஏட் டாய் இருந்த ஸ்டீபன், பணம் கொழிக்கும் ஏரியா என்பதால் உயர் அதிகாரிகள் தயவுடன், பல லட்சங்களுக்கு அதிபதியாகிவிட்டார்.

Advertisment

பி.4 பந்தயச் சாலை பி.சி.யாக இருக்கும் ராஜேஸும் அதேபோல அதிகாரிகளுடன் கை கோர்த்து தலைமுறைக்கே சொத்து சேர்த்துவிட்டார். இதையெல்லாம் நாங்கள் மேலிடத்திற்கு எழுதி அனுப்பினோம். ஐ.எஸ்.ஸில் இருப்பவர் கள்... ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டு, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் ரைட்டர்களை தொடர்புகொண்டு, தகவல்வாங்கி உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, வீடுகளுக்குள் ஜாலியாக ஓய்வெடுத்துக்கொள்கின்றனர். அதேபோல உண்மை தகவல்களை மறைத்து, சட்டவிரோத கும்பல்களிடம் பணவசூல் செய்துகொள்கிறார்கள்.

இதனால் அப்பணியிடங்களை ரத்துசெய்து, காலியாக இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் பணிகளுக்கு அனுப்ப வேண்டும். தமிழக காவல் துறையில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. அதனால் மாநகர், மாவட்டங்களில் உள்ள நுண்ணறிவு, தனிப்பிரிவில் உள்ள போலீஸ், ஏட்டு பதவிகள் தேவையில்லை.

ஒரே ஸ்டேசனில் பல ஆண்டுகளாக பணிபுரியும் இவ்வகை ஏட்டுகள், உயரதிகாரிகளே தமது கட்டுக்குள் இருக்கவேண்டும் என நினைப்பதோடு மட்டுமன்றி, இவர்களை எதிர்க்கும் உயர் அதிகாரிகளை, அவர்களுக்கும் மேலதிகாரிகளிடம் சொல்லி ட்ரான்ஸ்பர் செய்தும் விடுகின்றனர். இதுகுறித்து தீவிர விசாரணை செய்வதோடு, தமிழ்நாடு முழுக்க நுண்ணறிவுப் பிரிவை கலைக்க வேண்டும் என அதில் எங்களால் எழுதப்பட்டிருக்கிறது. இப்போது கோவையில் நீக்கப்பட்டிருக்கிறது ஐ.எஸ். பிரிவு.

தமிழ்நாடு முழுக்க இருக்கும் இப்பிரிவுக்குட்பட்ட பதவிகளை நீக்க வேண்டும் என எதிர்பார்த்தபடி இருக்கிறார்கள் நேர்மையான காக்கிகள்.