மிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் இணை இயக்குநர் முருகன் ஐ.ஜி. மீது, அதே துறையின் பணம் கொழிக்கும் தெய்வத்தின் பெயர் கொண்ட பெண் எஸ்.பி. கொடுத்துள்ள செக்ஸ் புகார், தமிழக காவல்துறையை ரணகளப்படுத்திக்கொண்டிருக்கிறது. புகாரை விசாரிக்க, ஏ.டி.ஜி.பி. சீமாஅகர்வால் தலைமையில் விசாகா கமிட்டியை அமைத்திருக்கிறார் டி.ஜி.பி.ராஜேந்திரன்.

கடந்த 4-ந்தேதி தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்த பெண் எஸ்.பி., தனக்கு ஐ.ஜி. தரும் டார்ச்சர்கள் குறித்து விவரிக்க, கிரிஜா வைத்தியநாதன் அறிவுறுத்தல்படி, உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டியை சந்தித்துப் புகார் தந்தார் பெண் எஸ்.பி. அதிர்ச்சியடைந்த உள்துறை செயலாளர், பாலியல் தொடர்பான விசாரணைக்கான விசாகா கமிட்டியை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, ""தமிழக முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்பான வழக்குகள் நீண்டகாலமாக முடங்கியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. நிலுவையிலுள்ள அதிகாரிகள் மீதான வழக்குகளை முடிவுக்கு கொண்டுவாருங்கள் என துறையின் கமிஷனரான ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன்பியாரே, துறையின் இயக்குநர் ஜெயந்த்முரளிக்கு உத்தரவிட்டிருக்கிறார். அந்த வழக்குகளில் வேகம்காட்டுகிறார் முருகன்.

இதில், "முன்னாள் அமைச்சர்களது வழக்கை கண்டுகொள்ளாதீர்கள். ஸ்லோ டவுன் செய்யுங்கள்' என காவல்துறை உயரதிகாரி ஒருவர் சிபாரிசுக்கு வருகிறார். ஆனால், இதனை ஏற்க மறுக்கிறார் முருகன். அதேபோல மிக மிக முக்கியமான பெண் அதிகாரி ஒருவரின் வழக்கில் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கிறார் முருகன். ஒரு வருடத்துக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத் துறையில் இவர் நியமிக்கப்பட்ட புதிதில் இதே பெண் அதிகாரியை விசாரிக்க முடிவு செய்தபோது, அந்த பெண் அதிகாரிக்கு வேண்டப்பட்ட சென்னை மாநகர காவல்துறையின் உயரதிகாரி ஒருவரும், எடப்பாடி அரசின் சீனியர் அமைச்சர் ஒருவரும் பெண் அதிகாரிக்காக களத்தில் குதித்தனர். இப்போதும், அந்த பெண் அதிகாரிக்காக, அந்த உயரதிகாரி, முருகனை தொடர்புகொண்டு காச் மூச்சென சத்தம் போடுகிறார். காவல்துறையில் உயர் பொறுப்பில் உள்ள அந்த பெண் அதிகாரியின் நண்பர்கள் பலரும் தற்போது முருகனுக்கு எதிராக களத்தில் குதித்துள்ளார்கள். அமைச்சர்கள் தரப்பு-உயரதிகாரிகள் தரப்பு என இருபுறத்திலிருந்தும் முருகன் குறி வைக்கப்பட்டுள்ளார்.

Advertisment

ig-murugan

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மதிப்பெண் மறுமதிப்பீட்டு ஊழலில் சிக்கிய உமா மீது ஆக்ஷன் எடுத்துள்ளது உயர்கல்வித்துறை. இந்த ஊழல் வழக்கை பதிவு செய்து விசாரிக்கும் முருகன், ஊழல்களுக்கான பல்வேறு ஆதாரங்களை திரட்டியிருக்கிறார். இதில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், அப்போதைய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட தற்போதைய உயரதிகாரிகள்வரை பலரும் சிக்குகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக உமாவை அழைத்து விசாரிக்கக்கூடாது என முருகனுக்கு அரசு தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டிருக்கிறது. சி.பி.ஐ.யில் இருந்தபோதும், இப்போதும் முருகன் எடுக்கும் நடவடிக்கையில் சிக்கும் அதிகாரிகளில் பலர் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால், அந்த சமூகத்தைச் சேர்ந்த உயரதிகாரிகளின் கோபமும் முருகனுக்கு எதிராக இருக்கிறது.

இப்படிப்பட்ட பின்னணியில்தான், லஞ்ச ஒழிப்புத்துறையின் பணியில் சரிவர செயல்படாததால் பெண் எஸ்.பி.க்கும் முருகனுக்குமிடையே லடாய் உருவாகிறது. "வேலையில் இன்-எஃபிசியன்சியாக இருந்தால் உன்னுடைய சர்வீஸ் ரெக்கார்டுகளில் மதிப்பெண்ணை குறைத்துவிடுவேன்' என எச்சரிக்கை செய்கிறார் முருகன். இதெல்லாம் முருகனுக்கு எதிராக உயரதிகாரிகளுக்குத் தெரியவருகிறது. அவர்கள் கொடுத்த யோசனையில்தான் முருகனுக்கு எதிரான புகார் கொடுக்கிறார் பெண் எஸ்.பி.''‘என பின்னணிகளை விவரிக்கின்றனர்.

Advertisment

""பெண் எஸ்.பி.யின் புகாரில் ஆகஸ்ட் 1-ந் தேதி மதியம் 1:30 மணிக்கு முருகன் டார்ச்சர் தந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. முருகனின் அறைக்கு வெளியே உள்ள காரிடாரில் சி.சி.டி.வி. கேமரா இருக்கிறது. முருகனின் டார்ச்சரிலிருந்து தப்பி, அவரைத் தள்ளிவிட்டு ஓடி வந்திருந்தால் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான ஃபுட்டேஜை ஆராய்ந்தால் உண்மை தெரியவரும். அதே 1-ந்தேதி மாலையில் நடந்த மீட்டிங்கில் பெண் எஸ்.பி. ரொம்பவும் இயல்பாக கலந்துகொள்கிறார். தவிர, மறுநாள் 2-ந்தேதி அலுவலகத்துக்கு வந்தபோதும் பெண் எஸ்.பி. இயல்பாகத்தான் இருந்தார். ஒரு அதிகாரி மதிய உணவு விருந்தளித்தபோது அதில் முருகனும் பெண் எஸ்.பி.யும் கலந்துகொண்டனர். கலகலப்பாக காணப்பட்ட பெண் எஸ்.பி., திடீரென முருகனுக்கு எதிராக புகார் தெரிவித்திருப்பதில், உயரதிகாரிகளின் நோக்கத்திற்கு அவர் பகடைக்காயாக ஆக்கப்பட்டிருப்பது தெரிகிறது'' என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலர்.

பெண் எஸ்.பி.யின் கருத்தறிய பலமுறை தொடர்புகொண்டும் நமது அழைப்பை அவர் அட்டெண்ட் பண்ணவே இல்லை. அவரது புகார் குறித்து சென்னை மாநகர காவல்துறையினரும் மாநில உளவுத்துறையினரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

உளவுத்துறையினரிடம் நாம் விசாரித்தபோது, ‘’""பெண் எஸ்.பி. ஒரு திறமையான அதிகாரி என பெயரெடுத்திருப்பவர். கடந்த வருட சர்வீஸ் ரெக்கார்டில், 10 மதிப்பெண்ணுக்கு 9 மதிப்பெண் கொடுத்திருப்பவர் இதே ஐ.ஜி. முருகன்தான். டி.எஸ்.பி.யாக கடலூர் மாவட்டத்தில் புயல் வெள்ள பாதிப்புகளை பெண் எஸ்.பி. கையாண்ட திறமையைப் பாராட்டி அப்போதைய கடலூர் மாவட்ட கலெக்டர் ககந்தீப்சிங் பேடி அரசுக்கு கடிதம் எழுதினார். சி.பி.சி.ஐ.டி. உளவுத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை என சென்சிட்டிவ்வான துறைகளில் பணியாற்றிய அனுபவமுள்ள பெண் எஸ்.பி., தனது பதட்டத்தை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்.

ig-murugan

அதேசமயம், சம்பவம் நடந்த ஆகஸ்ட் 1-ந் தேதி இயக்குநர் ஜெயந்த் முரளியிடம் தனக்கு மன உளைச்சல் இருப்பதைக் கூறி, 4 மணிக்கு புறப்பட்டுவிட்டார். குழப்பமான மனநிலையுடன், நீண்ட தயக்கத்திற்குப் பிறகு, வெளியூரிலிருந்த தனது கணவரிடம் தெரிவித்திருக்கிறார். அவரது ஆலோசனைப்படி, மறுநாள் 2-ந்தேதி எப்போதும்போல அலுவலகத்துக்கு சென்றார். மாலையில் கணவர் வந்ததும் அனைத்தையும் விவரித்து, எஸ்.எம்.எஸ்.களையும் காட்டியிருக்கிறார். அவரது கணவர் சொன்னபடி, அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு, மறுநாள் புகார் கொடுக்கிறார் பெண் எஸ்.பி. இதுதான் நடந்துள்ளது'' என விவரிக்கின்றனர் பின்னணிகளைச் சேகரித்துள்ள உளவுத்துறையினர்.

இந்த குற்றச்சாட்டு குறித்து ஐ.ஜி. முருகனை தொடர்புகொண்டு கேட்டபோது, ""கமிட்டி அமைக்கப்பட்டிருப்பதால் விசாரணை முடியும் வரை நான் பேசுவது சரியாகாது''‘என்றார்.

இந்த நிலையில், புகார் கொடுத்துள்ள பெண் எஸ்.பி., "இதே துறையில் தொடர்ந்து பணிபுரிய விரும்பவில்லை. என்னை வேறு இடத்துக்கு மாற்றிவிடுங்கள்' என கேட்டுக்கொண்டதன் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்து அவரை வணிகக் குற்றங்கள் சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றியுள்ளது தமிழக அரசு. பெண் எஸ்.பி.யின் செக்ஸ் புகாருக்காக அமைக்கப்பட்டிருக்கும் விசாகா கமிட்டியின் விசாரணை எந்த கோணத்தில் செல்கிறது என்பதை வைத்தே உண்மை வெளிச்சத்துக்கு வரும். ஐ.ஜி.க்கு எதிரான புகாரில் அதீத ஆர்வம் காட்டும் காக்கி அதிகாரிகளின் லாபி நகர்த்தும் காய்களைப் பொறுத்தே, லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையின் கீழ் உள்ள அண்ணா பல்கலைக்கழக முறைகேடு, அமைச்சர்கள்-அதிகாரிகள் சம்பந்தப்பட்ட புகார்களின் கதி தெரியவரும்.

-இரா.இளையசெல்வன்