தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களையும் தி.மு.க. கூட்டணி எப்படி வாரிச் சுருட்டிக் கொண்டு தாமரையையும் இலையையும் கிளம்ப முடியாத படி செய்ததோ அதேபோன்று, கேரளாவின் மொத்தமுள்ள 20 பார்லிமெண்ட் தொகுதிகளில் 19-ல் காங்கிரஸ் கூட்டணி வசமும், ஒரு தொகுதி சி.பி.எம். வசமும் சென்று விட்டது.
பா.ஜ.க.வை அனுமதிக்காத விஷயத்தில் கேரளாவும், தமிழகமும் ஒரே நேர்கோட்டில் பயணித்தாலும், சபரிமலை விவகாரத்தில், காங்கிரசும், பா.ஜ.க.வும் ஒரே நோக்கத்திலேயே சி.பி.எம். அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தின. தேர்தல் நேரத்தில் சபரிமலை விஷயத்தில் அரசுக்கெதிரான அலையே மக்கள் மத்தியிலிருந்தது. இதைத் துல்லியமாக அறிந்துகொண்ட கேரள அரசு, "அரசாங்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இருப்பதால், உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய நிலையிலிருக்கிறோம்' என்று மக்களிடம் விளக்கம் சொன்னது.
ஆளுங்கட்சி எதிர்ப்பு அலை, பா.ஜ.க.வுக்கு எதிரான அலை. மூன்றாவதாக வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் அலை. இது போன்ற மக்களின் மன நிலையே காங்கிரசுக்குச் சாதகமாகத் திரும்பியதால் வயநாடு உட்பட அந்த அணி போட்டியிலிருந்த 14 இடங்கள் மற்றும் அதன் கூட்டணிக்கு ஒதுக்கிய ஐந்து இடங்கள் என்று 19 தொகுதியைக் கைப்பற்றிய காங்கிரஸ் கூட்டணி, ஆலப்புழை பார்லிமெண்ட் தொகுதியில் மட்டும் கரை ஏற முடியாமல் போக... அந்த ஒரு தொகுதியை மட்டுமே ஆளும் சி.பி.எம்.மின் கூட்டணியால் கைப்பற்ற முடிந்தது.
கேரளாவின் மொத்த நிலவரமும் இப்படி இருக்க, முக்கிய திருப்பம் தலைநகரான திருவனந்தபுரத்தில். இத்தொகுதியின் வாக்கு வங்கியின் முதன்மையிலிருக்கும் நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர்களான காங்கிரசின் பாப்புலர் ஃபிகர் சசிதரூர், கேரள பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும் மாஜி மிசோரம் கவர்னருமான கும்மணம் ராஜசேகர், தொகுதியின் சிட்டிங் சி.பி.ஐ. எம்.எல்.ஏவான எல்.டி.எப் அணியின் திவாகரன் ஆகியோரிடையே மும்முனைப் போட்டி.
மாநிலத்தில் இந்தத் தொகுதியிலாவது மீண்டு விடவேண்டும் என்று மூச்சுவிடக் கூட நேரமில்லாமல் வேலை செய்தது தாமரைத் தரப்பு. காரணம், சசிதரூரின் மனைவி மரணத்தில் கிளம்பிய சர்ச்சையை லட்டு போல பயன்படுத்திக் கொள்ள முற்பட்டது. அதே சமயம், சிட்டிங் எம்.எல்.ஏ.வான திவாகரன் தொகுதிக்கு நிறையச் செய்தவர், குற்றச்சாட்டில்லாதவர் என்ற பெயர் இருந்தாலும் மூவரும் தாங்கள் சார்ந்த நாயர் சமூக வாக்குகளையே குறி வைத்துக் களத்தைச் சூடாக்கினர். சமூகம் சார்ந்த அந்த பெல்ட்டில் பா.ஜ.க.வின் கும்மணம் ராஜசேகருக்கு வாய்ப்பிருந்தது. ஆனால் வாக்கு வங்கியில் இரண்டாவது கட்டத்திலிருக்கும் தொகுதியின் ஈழவா சமூகத்தின் பாதிக்கும் மேற்பட்டோரின் ஆதரவு சி.பி.ஐ.யின் பக்கமிருந்தது.
வாக்குப் பதிவின் போது பரபரப்பான சூழல். சி.பி.ஐ. கூட்டணிக்கோ பா.ஜ.க. கேரளாவில் வந்து விடக்கூடாது என்கிற டென்ஷன். வாய்ப்புகள், வாக்குப் பதிவு நிலவரங்கள், கும்மணம் ராஜசேகருக்குச் சாதகமாகச் சென்று கொண்டிருந்த நேரத்தில் மதியம் திடீர் டுவிஸ்ட்டாக பா.ஜ.க.வை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற வியூகத்தில், மாநிலத்தில் கம்யூனிஸ்ட்டும் காங்கிரசும் எதிரெதிர் துருவங்கள் என்றாலும் அதை ஒதுக்கிவிட்டு, சி.பி.ஐ. ஆதரவு ஈழவா சமூகத்தவர்கள் காங்கிரசுக்கு வாக்களிக்கத் தொடங்கினர். தொகுதியின் கம்யூனிஸ்ட்களும் காங்கிரசுக்கே வாக்களித்துள்ளனர்.
இப்படி தோழர்களே கடைசிக்கட்டத்தில் தங்களது வாக்குகளை காங்கிரஸ் பக்கம் திருப்பியதன் விளைவு அதன் வேட்பாளர் சசிதரூர் ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 98 வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியைக் கைப்பற்ற நேர்ந்தது. கம்யூனிஸ்ட்களின் கடைசி நேர செயல்பாடுகள் "கை'கொடுக்க, தாமரையின் வெற்றி தடுக்கப்பட்டது என்கிறார்கள் கேரள அரசியல் பார்வையாளர்கள்.
கடவுள்களின் தேசத்தில்தான் இந்த டுவிஸ்ட்.
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்