கேரளாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராகி 6 மாதங்கள் கடந்த நிலையில், பினராய் விஜயனுக் கும் அம்மாநில கவர்னர் ஆரிப் முகம்மதுகானுக்கும் இடையே கடந்த ஓராண்டாக நிழலாடிக் கொண்டிருக்கும் அதிகார யுத்தம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

keralacm

பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஆரிப் முகம்மதுகான், காங்கிரஸ் ஆட்சியில் ஒன்றிய அமைச்சராக இருந்தார். பின்னர் பா.ஜ.க.வில் சேர்ந்ததையடுத்து இரண்டாண்டுகளுக்கு முன் கேரள கவர்னராக நியமிக்கப்பட்டார். 6 மாதங்கள் கேரள அரசுடன் நல்ல நட்புடனிருந்தவர், கேரள பா.ஜ.க. தலைவர்களுடன் தொடர்பைத் தீவிரப்படுத்தவும், பொது நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கவும் தொடங்கினார். குறிப்பாக கோயில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இந்துத்துவா சார்ந்து பேசத் தொடங்கியது, கம்யூனிஸ்ட் அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

மாநில அரசுத் துறைப் பணியிடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினரை நியமிப்பதாக பா.ஜ.க. எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து தலைமைச் செயலாளரிடம் விவாதித்திருக்கிறார். மேலும், வரதட்சணைக் கொடுமையால் ஏற்படும் தற்கொலைகளுக்கு எதிராக நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கவர்னர் கலந்துகொண்டதும் ஆளும் கட்சியைக் கடுப்பேற்றியது.

இந்நிலையில், பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிப்பது தொடர்பாக கவர்னருக்கும் அரசுக்குமிடையே ஏற்பட்ட அதிகார யுத்தம் வலுத்திருக்கிறது. கொதிப்பான கவர்னர், "பல்கலைக் கழகங்களின் வேந்தர் பதவியை கவர்னரிடமிருந்து மாற்றி முதல்வரிடம் கொடுப்பதற்கு மந்திரிசபை ஒப்புதலைப் பெற்று என்னிடம் வாருங்கள், நான் கையெழுத்திடுகிறேன். வேந்தர் பதவியிலிருந்து என்னை விட்டுவிடுங்கள்'' என்று, கடந்த 10-ம் தேதி முதல்வருக்குக் கடிதமெழுதியது கேரள அரசியலைப் பரபரப்பாக்கி யுள்ளது.

இதுகுறித்து கேரளா பா.ஜ.க. பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ், "கண்ணூர் பல்கலைக்கழகத் தில் துணைவேந்தராக இருக்கும் கோவிந்த் ரவீந்திரனின் பதவிக் காலத்தை நீட்டிக்கணும்னு பினராய் விஜயன் கவர்னருக்கு கடிதம் எழுத, அது முடியாதென்றும் யு.ஜி.சி. சட்டத்தில் அதற்கு இடமில்லை யென்றும் கவர்னர் சொல்லி விட்டார். அதேபோல், பினராய் விஜயன் தன்னுடைய தனிச் செய லாளரின் மனைவியை துணை வேந்தர் பதவிக்கு பரிந்துரைத்தார். அவருக்கு துணைவேந்தருக்கான தகுதி இல்லையென்று கவர்னர் மறுத்துவிட்டார்.

அதேபோல் சமஸ்கிருதப் பல்கலைகழகத்திற் கான துணைவேந்தர் பதவிக்கும் தகுதியில்லாத தனது கட்சிக்காரர்களை முதல்வர் பரிந்துரைத்த தால் கவர்னர் மறுத்துவிட்டார். மேலும், துணை வேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்கான 3 நபர் கமிட்டியை ஒரு நபர் கமிட்டியாக அரசு மாற்றியதையும் கவர்னர் ஒப்புக்கொள்ளவில்லை. உயர்நிலைக் கல்வியில் தகுதியில்லாதவர்களை நியமித்து கல்வியின் தரத்தைக் குறைப்பதைத் தடுப்பதற்காகத்தான் கவர்னர் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறார். இந்நிலையில், பாலக்காடு கலா மண்டல பல்கலைக்கழகத் துணைவேந்தர், கவர்னர் மீதே வழக்குத் தொடர்ந்தார். இதில் நீதிமன்றம் தலையிட்டதால், வழக்கை வாபஸ் வாங்கச் செய்வதாகக் கூறிய பினராய் விஜயன், இதுவரை வாபஸ் வாங்கச் செய்யவில்லை. இப்படியான நெருக்கடிகளால்தான் கவர்னர் கடிதம் எழுதவேண்டிய நிலை!" என்றார்.

Advertisment

ff

இது குறித்து சி.பி.ஐ.எம். திருவனந்தபுரம் மா.செ. ஆனாவூர்நாகப்பன் கூறுகையில், "கவர்னர் தன்னுடய பதவிக்கான வரம்பை மீறிச் செயல்படுகிறார். குற்றச் சம்பவங்கள் நடந்தால் அரசிடம் அதுகுறித்து விளக்கம் கேட்கலாம். ஆனால் கவர்னரே நேரில் சென்று ஆறுதல் சொல்வது நியாயமா? துணைவேந்தர் நியமனத்தில் பா.ஜ.க.வின் நெருக்கடி இருப்பதால்தான் அரசின் பரிந்துரைகளை ஏதேதோ சொல்லித் தட்டிக் கழிக்கிறார். ஒன்றிய அமைச்சர் முரளிதரன் பா.ஜ.க.வைச் சேர்ந்த இருவரைப் பரிந்துரை செய்ததைத் தான் பினராய் விஜயன் மீது பழியைப் போடுகிறார் கவர்னர். கேரளாவில் கவர்னரை வைத்து பா.ஜ.க.வை வளர்க்க நினைப்பது முட்டாள்தனம்'' என்றார்.

இந்நிலையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய பினராய் விஜயன், "அரசுக்கும் கவர்னருக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்தால் பேசித் தீர்த்திருக்கலாம். இப்படி கவர்னர் கடிதம் எழுதி, அதை வெளியிட்டிருக் கையில், நானும் வெளிப்படையாகப் பேசியாக வேண்டி உள்ளது. கண்ணூர் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் பதவிக்காலத்தை நீட்டிக்க ஒப்புக்கொண்டு ஏன் தற்போது மாற்றிப் பேசுகிறார்? கேரள கல்வித்துறை வளர்ச்சியைத் தடுக்க முயலும் சக்திகளுக்கு கவர்னரின் செயல்பாடுகள் ஊக்கமளிக்கின்றன. கவர்னருக்கு வெளியிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தமே காரணம். கவர்னரே வேந்தராகச் சட்டப்படி தொடரவேண்டும்'' என்றார்.

இந்த நிலையில் பினராய் விஜயனுக்கு கடிதம் அனுப்பிவிட்டு டெல்லி சென்ற கவர்னர், அங்கு அமித்ஷாவைச் சந்தித்துப் பேசியிருக் கிறார். அப்போது அமித்ஷா, "இந்த விசயத்தி லிருந்து நீங்கள் பின்வாங்க வேண்டாம். கேரள அரசின் மற்ற துறைகளையும் தீவிரமாகக் கண்காணியுங்கள்'' என கேட்டுக்கொண்டாராம். இதையடுத்துதான், பினராய் விஜயனின் பேச்சுக் குப் பதில் கொடுத்த கவர்னர், "சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நியமனத் துக்கு கருத்து வேறுபாடு இல்லாமல் இருந்தால், எதற்கு அந்த பைலை நான் திருப்பி அனுப்ப ணும்? எனக்கு வேந்தர் பதவி வேண்டாம், அதை முதல்வரே வைத்திருக்கட்டும். பல்கலைக் கழகத் தில் ஒவ்வொரு பதவி நியமனமும் அரசியல் நெருக்கடியில்தான் நடக்கிறது. அந்தத் துறையில் அரசியல் பிரமுகர்களை நியமிக்க நான் காரண மாக இருக்கமாட்டேன்'' என்றார். கேரளாவில் கவர்னர் -முதல்வர் யுத்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment