ஒரு கைத்தடியோடு கோவை சுந்தராபுரத்தில் பெரியார் நின்று கொண்டு இருந்தார் சிலையாக.
அவரின் தலையின்மீது காவி நிறச்சாயத்தை விடிகாலையில் ஊற்றி விட்டு ஓடி விட்டார்கள் அடையாளம் தெரியாத சிலர். விசய மறிந்த திராவிடர் கழகத்தினரும், தி.மு.க.வினரும் திரண்டு வந்து... பெரியாரின் மீது காவி சாயம் ஊற்றிய காலிப் பையன்களை கைது செய்ய வேண்டும்... என ஆர்ப்பாட் டம் செய்ய, கோவையில் பரபரப்பு தீ பற்ற ஆரம்பித்து விட்டது.
இந்த சம்பவத்தைப் பற்றி சொல்லும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் கு. ராமகிருஷ்ணன்... ""பெரியார்மீது காவி சாயம் பூசி சில காவிக்காரர்கள் பெரியாரை அவ மதிப்பு செய்வது தொடர் கதையாகி விட்டது. இந்த சமூகத்தில் ஒரு மனிதனுக்கு சுயமரியாதை தேவை... என சொல்லிக் கொடுத்த பெரியார்மீது சுயம் இல்லாதவர்கள் அவர் சுயத்தை அழிக்க நினைக்கி றார்கள். அது ஒருபோதும் நடக்காது. இப்படி ஒரு செயலை செய்த காவிக்காரர்கள் கைது செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் எங்களது போராட் டம் கடுமையாக நடக்கும்...'' என்கிறார் கோபமாய்.
தி.மு.க.வின் சார்பாக போராட்டம் செய்த நவநீத கிருஷ்ணன்... பெரியார் எல்லாக் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்வார். எல்லோரின் கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுத்து பதிலளிப்பார். அவர் இந்த காவி சாயத்தை ஒரு விஷயமாக பொருட்படுத்த மாட்டார். அதனால்தான் இயற்கையே மழையாய் பெய்து அவரின் உடலை கழுவிவிட்டு போய் விட்டது. இதை காலி பசங்கள்... மன்னிக்க காவி பசங்களுக்கு சொல்லிக் கொள்கிறோம்...'' என கொதிக்கிறார்.
தி.க. தலைவர் கி.வீரமணி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அ.ம.மு.க. தினகரன் என கண்டனக் குரல்கள் பலமாக ஒலித்தன.
போத்தனூர் போலீசோ... இந்த செயலை செய்தவர்களை நாங்கள் கண்டுபிடித்து விடுவோம். அதற்காகத்தான் சிலையை சுற்றி உள்ள நிறுவனங்களின் சி.சி.டி.வி கேமரா புட்டேஜ் காட்சிகள் கிடைக்குமா? எனத் தேடிக் கொண்டு இருக்கிறோம் என்றார்கள். அன்று மதியமே 21 வயது அருண்கிருஷ்ணன் என்ற பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்தவர், தனது நண்பர்களுடன் போத்தனூர் ஸ்டேஷனுக்கு வந்து, கந்த சஷ்டி விமர்சன விவகாரத்தால் ஆத்திர மடைந்து பெரியார் சிலையை அவமானப் படுத்தியதாகக் கூறி சரணடைந்தார்.
அதே நாளில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கீழையூரில் உள்ள பெரியார் சிலைக்கு சிலர் செருப்புமாலை போட்டு அவமரியாதை செய்ய அங்கும் ஆர்ப்பாட்டம் நடந்து, அதன்பிறகு நிலைமை சீரடைந்தது.
சிலைகளில் பெரியார் இல்லை. அவர் மானுடத் தத்துவமாக நிலைத்திருக்கிறார் என்பது காலிகளுக்குத் தெரிவதில்லை.
-அ. அருள்குமார்