வாரியமும் இல்லை... ஸ்கீமும் இல்லை... வரைவு அறிக்கையும் இல்லை என அறிந்ததும் மே 3-ந்தேதி உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டம் செய்தார் ஒரு விவசாயி. ஆனால் அதற்கு முந்தைய தினமே, தான் நினைத்தபடி மத்திய அரசு கச்சிதமாகக் காரியம் முடித்ததையோ, அதற்கு தமிழக அரசும் இணங்கிப் போனதையோ அந்த அப்பாவி விவசாயி அறிந்திருக்கவில்லை.

cavery

இரண்டாம் தேதி டெல்லிக்குச் சென்றார் எடப்பாடி. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக பெரும்பாலான எதிர்க்கட்சி மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளாத மாநாட்டிற்கு பா.ஜ.க.வின் துணைக்கட்சி போல செயல்படும் எடப்பாடி வரிந்து கட்டிக் கொண்டு சென்றார். கர்நாடக தேர்தலில் பிரதமர் பிசியாக இருப்பதால் அவர் எந்த மாநில முதல்வரையும் சந்திக்கமாட்டார் என பிரதமர் அலுவலகம் முன்கூட்டியே தெளிவுபடுத்திய நிலையில் முதல்வர் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் என செய்திகளை கசிய விட்டார்.

மே 2-ம் தேதி காலையில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் தனது அறையில் மாலை வரை சும்மாவே உட்கார்ந்திருந்தார் எடப்பாடி. அவருடன் வந்த அவரது வலதுகரமான சேலம் இளங்கோவனை அனுப்பி பலரை சந்திக்க வைத்துக் கொண்டிருந்த எடப்பாடிக்கு இளங்கோவன் தகவல்களை வழங்கியபடி இருந்தார்.

Advertisment

மாலையில் மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சரான நிதின் கட்காரியின் அலுவலக கார் ஒன்று டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய கட்காரியின் உதவியாளர் மற்றும் கட்காரியின் சிறப்பு அலுவலர் ஆகியோர் எடப்பாடியை சந்தித்தனர். ஒரு மணி நேரம் சந்திப்பு நீடித்தது.

அந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பது சுப்ரீம் கோர்ட்டில் 3-ம் தேதி நடந்த விசாரணையின்போது தெளிவானது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தினர்.

eps

Advertisment

காவிரி விவகாரத்தில் 2 முறை மத்திய அரசு இரண்டு வார கால அவகாசம் கேட்டது. இரண்டு முறையும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மத்திய அரசு அட்வகேட் ஜெனரலான கே.கே.வேணுகோபாலிடம் "அதெல்லாம் முடியாது' என கடித்து துப்பினார். 2-ம் தேதி மாலை தனக்கு நெருக்கமானவர்களிடம் நல்ல விஷயம் நடக்கும் என கூறிக் கொண்டிருந்தார் கே.கே.வேணுகோபால். அது எடப்பாடியுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகான அழுத்தமான நம்பிக்கை.

அந்தப் பேச்சுவார்த்தையில் 3-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என கே.கே.வேணுகோபால் சொல்லி அனுப்பியதை எடப்பாடி பழனிச்சாமி தமிழக வழக்கறிஞர்களிடம் எடுத்துச் சொன்னார். வழக்கு விசாரணைக்கு வந்ததும் மத்திய அரசு சார்பாக பேசிய கே.கே.வேணுகோபால், ""கர்நாடகாவில் தேர்தல் நடக்கிறது. அமைச்சர்கள் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார்கள். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான ஸ்கீமை இறுதி செய்ய வேண்டுமென்றால் மத்திய அமைச்சரவை கூடி அதன் ஒப்புதலையும் அது தொடர்பான அமைச்சர்களின் கையெழுத்தையும் பெற வேண்டும்'' என உளறிக் கொட்டினார்.

centralministersஅதைக் கேட்ட தலைமை நீதிபதி "இந்த இண்டர்நெட் யுகத்தில் கையெழுத்து பெற இவ்வளவு கஷ்டமா?' என்பது போல முகம் சுழித்தார். தமிழக வழக்கறிஞர்கள் பெயரளவிற்கு எழுந்து, ""மத்திய அரசின் இந்தச் செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. கர்நாடக மாநில தேர்தலுக்கும் காவிரி நதிநீர் பங்கீட்டு திட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?'' எனக் கேட்டார்கள்.

"அதானே' என கோபத்தின் உச்சிக்குப் போன தலைமை நீதிபதியின் கவனத்தை திசை திருப்பும் வகையில் ஒரு புதிய வாதத்தை டெக்னிக்கலாக எடுத்து வைத்தார்கள். "காவிரி நதிநீர் ஆணையம் அமைப்பதற்கான ஸ்கீமை செயல்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என விளக்குங்கள்' என தலைமை நீதிபதி கேட்டுக் கொண்டிருக்கும்போதே, "தமிழகத்திற்கு ஏப்ரல், மே மாதங்களில் மொத்தம் 5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்க வேண்டும். இதுவரை ஒரு டி.எம்.சி. தண்ணீர்தான் வந்திருக்கிறது. இன்னும் 4 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும்' என புது கோரிக்கையை முன்வைத்தனர் தமிழக வழக்கறிஞர்கள்.

அதைக் கேட்ட தலைமை நீதிபதி, ""ஸ்கீம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி வருகிற 8-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், அத்துடன் தமிழகத்திற்கு 4 டி.எம்.சி. தண்ணீர், கர்நாடகம் வழங்க வேண்டும். இல்லையென்றால் உச்சநீதிமன்றமே சுயமாக கர்நாடகத்தின் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரும்'' என விசாரணையை 8-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். டெல்லியில் இ.பி.எஸ்.ஸை சரிக்கட்டியதன் விளைவாக தமிழகத்தின் உரிமை மீண்டும் நசுக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை முடிந்ததும் மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சரான நிதின் கட்காரியின் துணை அமைச்சராக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசினார். ""இதெல்லாம் பா.ஜ.க.வின் திருவிளையாடல்கள். நாங்கள் தேவைப்பட்டால் தமிழக அரசையும் சேர்த்துக்கொண்டு விளையாடுவோம். அப்படித்தான் இந்த முறை சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் விளையாடினோம். அடுத்த வாய்தாவான 8-ம் தேதியும் இதேபோல ஒரு விளையாட்டை எடப்பாடி துணையுடன் ஆடுவோம்.

கர்நாடகாவில் பா.ஜ.க. வெற்றி பெறும் வரை எங்கள் ஆட்டம் தொடரும். ஒருவேளை பா.ஜ.க. வெற்றி பெற்றால் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி தமிழகத்திற்கு தண்ணீர் தரவே மாட்டோம். அங்கே காங்கிரஸ் வெற்றிபெற்றால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம்'' என சொல்லி அர்த்தத்துடன் சிரித்துவிட்டு, ""இதுதான் அரசியல்'' என்றிருக்கிறார்.

""இந்த வழக்கில் 4 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு தர வேண்டும் என உச்சநீதிமன்றம் சொன்ன உடனே "அதெல்லாம் முடியாது. கர்நாடகத்தில் தண்ணீர் இல்லை' என கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியுள்ளார். தமிழக அரசின் கருத்தாக அமைச்சர் ஜெயக்குமார் ஏதோ பேசினாரேயொழிய டெல்லியில் காவிரி பிரச்சினை பற்றி முழங்கிய எடப்பாடி இந்த உத்தரவு வந்த அன்று வாயே திறக்கவில்லை. சுப்ரீம் கோர்ட் உறுதியாக இருந்தால் மட்டுமே காவிரியில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கும்'' என்கிறார்கள் டெல்லிவாழ் தமிழ் அரசியல்வாதிகள்.

-தாமோதரன் பிரகாஷ்

--------------------------------------------------------------------------------------

மத்திய அமைச்சரை டென்ஷனாக்கிய தி.மு.க.!

dmkprotest

மதுரை வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ""காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தனியாக எந்த முடிவும் எடுக்க முடியாது. மேலாண்மை வாரியம் தொடர்பாக அனைத்து மாநிலங்களையும் கலந்து ஆலோசித்துதான் முடிவு எடுக்க முடியும்'' என பா.ஜ.க.வின் நிலைப்பாட்டைக் கூறியதையடுத்து, பரமக்குடியில், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து மத்திய அமைச்சருக்குக் கருப்புக்கொடி காட்டுவதாக ராமநாதபுரம் தி.மு.க. மா.செ. சுப.திவாகரன் தலைமையிலான தி.மு.க.வினர் தீர்மானித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வுக்கு வந்த நிர்மலா சீதாராமனுக்கு மாவட்ட எல்லையான பார்த்திபனூரில் கருப்புக்கொடியினைக் காட்டினர். அப்போது மத்திய அமைச்சரின் காரை நோக்கி பறந்து வந்தது ஒரு செருப்பு. கருப்புக்கொடிகள் கட்டப்பட்டிருந்த தடிகளும் வீசப்பட்டன. பதட்டம் அதிகமானதால்... "திரும்பும்போதும் இந்தநிலை வேண்டாம்' என காவல்துறையும் தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தையைத் துவக்கியது.

டென்ஷனுடனே சாலையைக் கடந்து கள்ளிக்குடிக்குச் சென்று, விழாவில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன், அங்கிருந்து பரமக்குடி சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தவர், மாவட்ட ஆட்சியர் நடராஜன், மாவட்ட காவல்துறை எஸ்.பி. மற்றும் தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனுடன் இணைந்து ராமேஸ்வரம் தொடர்பான சுற்றுலா வெப்-சைட்டையும் துவக்கி வைத்துவிட்டு ஓய்வெடுக்க ஆரம்பித்தார். மதியம் 1 மணிக்கே கலையூர் கிராமத்திற்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்க... இருட்டும்வரை வராததால் அங்கிருந்த மக்கள் கலையத் தொடங்கினர். ஒருவழியாக 7 மணிக்கு வந்த மத்திய அமைச்சர், அங்கும் நலத்திட்டங்களை செயல்படுத்திவிட்டு மறுபடியும் டென்ஷனுடன் அதே பாதையில் பயணித்தார். ""கருப்புக்கொடி காட்டுவது எதிர்க்கட்சிகளின் உரிமை'' என மத்திய அமைச்சர் சொன்னபோதும், தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்து கடமையை நிறைவேற்றியது அ.தி.மு.க. அரசு.

-நாகேந்திரன்