(சென்ற இதழ் தொடர்ச்சி...)

குறிஞ்சிப்பாட்டுக்கு ஒத்த உரைநடையில் அந்தக் காட்சியைத் தோழி மொழியில் தொட்டுக் காட்டுவோம். "தாயே! நீ ஏவிய வண்ணம் யானும் தலைவியும் தினைப்புனம் புக்குப் புலியஞ்சும் பரணடைந்து தட்டையும் கவணும் கொண்டு கிளியோப்பினோம், பின்னர் வெம்பகலின் வெம்மை தீரத் தினையாடுங்காட்டில் சுனையாடினோம். ஈரக் கூந்தல் உலர்த்தி மலர் கொய்து பாறையிற் குவித்தோம். தழையாடை உடுத்தோம்; தலையிற் பூமுடித்தோம். அதுபோது வில்லாளனும் வீரக்கழல் அணிந்தவனும் சென்னியில் கண்ணி சூடியவனுமாகிய தோன்றல் ஒருவன் தோன்றினன். தப்பிய யானையொன்று இவ்வழி கண்டீரோவென்று கடாவினன். ஆங்கு தினைப்புனம் தின்னும் களிறு கண்டு கல்லென்னும் ஓசையோடு வில்லெழுப்பிப் பகழி வலித்து அக்களிற்றின் முகம் புண்ணுற முடுகியெய்ய அது புறங்காட்டில் போந்தொழிந்தது. அதன் பின்னர் யாம் யாற்று நீராட, ஆங்கே வந்துற்றவன் "நின் நலம் நுகர்வேன்; நீங்கேன்'’என்று நெற்றி துடைத்து நெருங்கி அணைத்து மார்போடு மார்பு செலுத்தி, “இது களவோடு முடியாது காண்; கற்புநெறி காண்போம்'’என்று பலபடக் கிளத்தி ஊர்வாசல் வரை உடன்வந்து உயிர்கொண்டு மீண்டு போயினன்''’என்று குறிஞ்சிப்பாட்டை விரிக்கிறார் கபிலர் பெருமான்.

vairamuthu

பழந்தமிழர் வாழ்வில் நிகழ்ந்த இந்தக் களவொழுக்கத்தில் சாதியில்லை; குலமும் குடியும் பார்த்ததில்லை. குழந்தை மணமில்லை; கட்டாயக் கலவியில்லை. அன்புத் தளை உண்டு; ஆணவக்கொலை இல்லை. கரையோர மரத்திலிருந்து ஆற்றில் விழுந்த இலை ஆற்றின் போக்கில் ஏகுதல்போல ஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமான களவியல் வாழ்வு இயற்கையின் அசைவுகள் வழியாகவே அரங்கேறுவதைச் சுடர்கொண்ட சொற்களால் பாட்டோலை வழியே நீட்டோலை வாசிக்கிறார் கபிலர் பெருமான்.

மலையில் கிடந்து மலைவெளியைத் தன் கால்களால் கடந்து, மழையிலும் பனியிலும் நனைந்து, காடு ஆடைமாற்றிக் கொள்வதையும் அருகிருந்து பார்த்து, பறவைகளின் பாடல்களையும், விலங்குகளின் ஒலிகளையும், காலங்களின் நகர்வுகளையும், தளிர்களின் நிறமாற்றங்களையும், பூக்களில் தேனிருக்கும் அறைகளையும், அருவியின் கரையாடிய நுரைகளையும், மலைபடு பொருள்களையும், முகில்விடு சுடர்களையும், பனியில் சுடும் சுனைகளையும், வெயிலில் குளிரும் நதிகளையும் தன் ஐம்புலன்களின் வழியே ஏற்றி இறக்கியவன் ஒருவனுக்கு மட்டுமே, கபிலரைப்போல மொழி இப்படி வினைப்பட்டிருக்க முடியும்.

""ரவி காணாததைக் கவி காண்பான்''’என்று தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு. கதிரவன் ஒளி தொடமுடியாத ஆழங்கள் கடல்களில் உண்டு. கதிரவன் ஒளி விழமுடியாத கண்டங்களும் உண்டு. ஆனால் ஒரு கவிஞனின் கண்ணுக்குத் தப்ப முடிந்த காட்சிகள் இல்லை. "மிளகின் தழை தின்னும் குரங்கு'’என்கிறார். ‘"புற்றுக்குள் கை செலுத்தி ஈசல் உண்ணும் கரடி'’என்கிறார். ‘"உயரத்து மூங்கில் நெல்லை எட்டி எட்டி முயன்று தின்று, துதிக்கையைத் தன் கொம்பிலே தொங்கவிட்டுக் களைப்பாறும் களிறு'’என்கிறார். ‘"புணர்ந்த பசுவைத் தொடர்ந்து செல்லும் எருதுபோல தலைவி பின்னால் தலைவன் விரைந்தான்'’என்கிறார். "பாறையில் மயிலீன்ற முட்டையை உருட்டி விளையாடும் குரங்கின் குட்டி'யைக் காட்டுகிறார். "மூங்கில் முளைபோலும் நாயின் பற்கள்'’என்கிறார். "பெருந்துளி எறிந்து மழை சிந்தப்பட்ட மலர்போல் அழகிழந்த தலைவி'’என்கிறார். கபிலருக்கன்றி யாருக்கு வரும் இந்த நீள்பார்வையும் ஆழ்பார்வையும்?

Advertisment

vairamuthu

பொய்யும் வழுவும் தோன்றுமுன்னர் அய்யர் கரணம் யாத்தற்கு முன்னர் களவு வழிப்பட்ட தலைவன் எவனும் அறம் வழுவதியதில்லை; கற்புநெறி புகாமல் நழுவியதில்லை. இதற்குக் கபிலர் காட்டும் உவமைகள் உலக இலக்கியங்களுக்கு நிகரானவை. தலைமகன் வாய்மையில் பொய் தோன்றினால் அது திங்களுள் தீத்தோன்றியதுபோல. ""குன்றகல் நன்னாடன் வாய்மையில் பொய்தோன்றின் திங்களுள் தீத்தோன்றி யற்று''’(குறிஞ்சிக்கலி:41). அவன் அருள்நெறி மாறுமாயின் அது நிழற்குளத்து நீரில் நின்ற குவளை வெந்தழியுமாறுபோல. ""மலைநாடன் ஈரத்துள் இன்னவை தோன்றின் நிழற்கயத்துள் நீருள் குவளைவெந் தற்று''’(குறிஞ்சிக்கலி: 41). அவன் தொடர்பில் திரிபு தோன்றுமாயின் அது ஞாயிற்றில் இருள் தோன்றியதுபோல. “""தொடர்புள் இனையவை தோன்றின் விசும்பின் சுடருள் இருள்தோன்றி யற்று''’(குறிஞ்சிக்கலி: 41) இப்படி உவமைகளில் உச்சம் தொட்ட கபிலர் பெருமான், உள்ளுறை உவமங்களில் உச்சி வானத்தையே தொடுகிறார்.

Advertisment

உள்ளுறை உவமம் என்பது இலக்கியத்தின் தனிப்பெருங்கூறு. அது ஒரு செய்யுள் நாகரிகம். சொற்களால் நேரடியாக மொழிய முடியாதவற்றைக் கலைப்படுத்தி உணர்த்தும் கவிதைப் பண்பாடு. முகிலுக்குள் ஒளிந்திருக்கும் மழைபோலச் சொல்லுக்குள் ஒளிந்திருக்கும் உட்பொருளே உள்ளுறை உவமம்.

""உள்ளுறுத் திதனொடு ஒத்துப்பொருள் முடிகென

உள்ளுறுத் திறுவதை உள்ளுறை உவமம்''’-என்பது தொல்காப்பியம்.

அது கருப்பொருளோடு இயைத்துப் பொருள்கூட்டத்தக்கது என்பது கருத்து. தலைவியை மணந்துகொள்ளக் கருதாமல் தள்ளிப்போகும் தலைவனை "அட மூடா! எம் தலைவியை வரைந்துகொண்டு போடா'’என்று வெடித்து வெளிப்படுத்தவியலாது. அது எதிர் விளைவுகளையும் ஏற்படுத்திவிடக்கூடும். அதனாற்றான் உள்ளுறை வைத்து நல்லுரை செய்கிறாள் தோழி.

""மூங்கில் மரத்தை நெல்லோடு வளைத்துண்ணும் பெண் யானை, பிறகு வாழைவனம் புகுந்து பழம்தின்று, வருடைமான்கள் உலவுமிடங்களில் அதிகாலை துயில்கொள்ளும் மலைகளின் தலைவனே!''’என்பது ஒரு பாட்டின் விளி.

“வாங்குகோல் நெல்லொடு வாங்கி வரு வைகல்

மூங்கில் மிசைந்த முழந்தாளி ரும்பிடி

தூங்கிலை வாழை நளிபுக்கு ஞாங்கர்

வருடை மடமறி யூர்விடைத் துஞ்சும்

இருள் நீங்கு சோலை இலங்குநீர் வெற்ப’’

என்ற குறிஞ்சிக்கலியின் 50ஆம் பாட்டில் கபிலர் உணர்ச்சி மிகுந்த உள்ளுறை உவமம் தீட்டுகிறார்.

""தலைவனே! மூங்கில் நெல்லை முயன்று கொள்ளும் யானையைப் போல நீ முள்ளிடைத் துயர்ப்படத் தேவையில்லை. வாழைக் கனியுண்ணும் யானையைப் போல நீ மனைக்கண்ணிருந்து இன்பம் துய்க்கலாம். வேங்கையும் புலியும் துயிலும் இடத்திலன்றி மான்குட்டிகள் விளையாடுமிடத்தில் துயிலும் யானைபோல் நீ ஊரார் அலர் தூற்றலின்றி இல்லறத்தில் இன்பம் நுகரலாம். ஆதலால் இன்னும் காலம் தாழ்த்தாதே. களவு கட; கற்பை அடை; எம் தலைவியை மணஞ்செய்துபோ''’என்பது உள்ளார்ந்த உள்ளுறை. கருப்பொருள் கொண்டே உரிப்பொருள் உணர்த்தும் சங்கப் புலவர்களின் தங்கத் தலைவர் கபிலர் என்று விதந்தோதலாம்.

ஒரு நாட்டின் பரப்பில் 33 விழுக்காடு காடு என்பது உலக நாடுகளின் சுற்றுச்சூழற் கொள்கை. காடுகளும் மலைகளும் காக்கப்படாவிடில் ஒரு நாடு தன் தலைக்குமேல் இருக்கும் வானை இழந்துவிடும். மலைவளம் இழந்தால் மழைவளம் குன்றும்; மழைவளம் இழந்தால் விளைவளம் குன்றும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மலைபடு செல்வங்களைப் பட்டியலிட்ட கபிலர் உலகத்தின் முதல் சுற்றுச்சூழல் பெரும்புலவராகிறார்.

""உழவர் உழாதன நான்கு பயனுடைத்தே

ஒன்றே சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே

இரண்டே தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே

மூன்றே கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே

நான்கே அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து

திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே

வான்கண ற்றதவன் மலையே வானத்து

மீன்கணற்றதன் சுனையே'' (புறம் : 109)

என்று நெல்லும் பழமும் கிழங்கும் தேனும் கொட்டிக் கொடுக்கும் இயற்கையின் தாய்மையை உவந்து பாடுகிறார்.

செழுங்கற்பனைகளும், பொருள் கருவுறு சொற்களும், தீரா உழைப்பும், மாறா இயற்கை அன்பும், மழைபோல் தமிழ் பொழிந்த கருணையும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தை ஆவணமாக்கிய அழகும் மட்டுமல்ல கபிலர் என்ற மகாகவிக்குத் தமிழர் கைகூப்பும் காரணம்.

பாரியோடு கொண்ட நட்பின் சான்றாண்மையும் சொற்றிறம்பாமையும் பாரியின் அரசு பறம்பின் சிகரத்தில் திகழ்ந்த போதும், பள்ளத்தாக்கில் அது உருட்டப்பட்ட போதும், செய்ந்நன்றி மறவாச் செந்தண்மையுமே கபிலரைத் தமிழின் ஆதிப்பெருங்கவிஞன் என்று அடையாளங் காட்டுகின்றன.

மலையமான் திருமுடிக்காரியும், வையாவிக் கோப்பெரும்பேகனும், இருங்கோவேளும், விச்சிக்கோனும், செல்வக்கடுங்கோ ஆழியாதனும் கபிலர் அறிந்த மன்னர்களாயினும், வேள்பாரியோடு மட்டும்தான் கபிலரின் வாழ்வும் வீழ்வும் அறியப்படுகின்றன. வென்றெறி முரசின் வேந்தர் பாரியைக் கொன்ற பிறகு, பறம்பைக் கொண்ட பிறகு பாரிமகளிரைக் கரையேற்ற ஊரூராய் அலைந்த புலவர் நீர்கட்டும் கண்களில் நிறைந்து நிற்கிறார்.

""அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் பாரியும் இருந்தான்; பறம்பும் இருந்தது. இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் பாரியும் இல்லை; பறம்பும் இல்லை''’அதனால் "அன்று வந்தது வெள்ளை நிலா; இன்று வந்தது வேறு நிலா'’என்று இன்ப துன்பத்தை நிறம்பிரிக்கிறார்.

பாரி மகளின் அவலம் சொல்லவந்த புலவர் முகக்கண்களோடு நகக்கண்களும் அழுது வழியுமாறு எழுதிப் போகிறார்.

மலர்க்காடுகளில் மயிலாடுகின்ற, குன்றுகளேறிக் குரங்குகள் தாவி உகளுகின்ற, காலமற்ற காலத்தினும் மரங்கள் பழம் பழுத்துத் திகழுகின்ற மலையுச்சியில் ஏறிநின்று, தம் தந்தையின் வலியறியாது படைகொண்டு பறம்பேறும் பகைவர்களின் குதிரைகளை எண்ணிக்கிடந்த பாரியின் பேதை மகளிர் இன்று- "முள்வேலியும் பஞ்சுபரந்த முற்றமும் சுரையும் பீர்க்கும் படர்ந்த வெளியில், ஈத்திலையுடைய குப்பைமேடேறி, உமணர் செலுத்தும் உப்பு வண்டிகளை எண்ணிக் கிடப்பதோ! நொந்தழிகிறேன் கெடுகவென் வாணாள்'’ என்று நெஞ்சில் குருதி கட்டிக்கொண்ட துன்பத்தோடு பாடுகின்ற புலவர் பறம்பு மலையைத் தூக்கி நம் நெஞ்சிலேற்றி அழுத்துகின்றார்.

பாரி மகளிரை எந்த மன்னரும் ஏற்காத நிலையில் அவர்களைப் பார்ப்பனச் சேரியில் விடுத்து அவர் வடக்கிருந்து உயிர் நீத்ததாய் வரலாறு சார்ந்து பேசப்படுகிறது.

இயற்கைதான் இன்பம் என்று எழுதியெழுதிக் களித்த புலவன், துன்பம்தான் இயற்கை என்ற துயரத்தோடு வாழ்ந்து கழிகிறான். ஆனால், உலகச் சுற்றுச்சூழல் குறித்து நெற்றியில் எழுதி ஒட்டிக்கொள்ள வேண்டிய வரியை எழுதிவிட்டுப் போயிருக்கிறார்.

"இயற்கைக்கு மனிதன் ஊறு செய்தால் இயற்கை மனிதனுக்கு எதிராகத் திரும்பி விடும். அதனால் பூமி கழியும்; வாழ்வு அழியும். ஏ மாந்தர் இனமே! இயற்கையோடு இயைந்திரு'’ என்று புலவன் எச்சரிக்கை வரிகளை உச்சரிக்கிறான்.

""சிறுகுடி யீரே சிறுகுடி யீரே

வள்ளி கீழ்விழா; வரைமிசைத் தேன்தொடா

கொல்லை குரல்வாங்கி யீனா; மலைவாழ்நர்

அல்ல புரிந்தொழுக லான்''’(குறிஞ்சிக்கலி:39)

என்பது உலகச் சுற்றுச் சூழலுக்கு ஒரு தமிழ்ப்புலவன் கொடுத்த பழங்கொடையாகும்.

காலங்கள் மாறும்; கடல்கள் இடம்மாறும்; நிலவியல் மாறும்; பருவங்கள் தடுமாறும். ஆனால், கபிலர் இருப்பார். தமிழ்நாட்டு மலைமரங்களில் கடைசி இலை துடிக்கும்வரை, விலங்குகளும் பறவைகளும் விரையும் வரை, இயற்கைக்கும் மனிதனுக்குமுள்ள தொப்பூழ்க்கொடி முடிச்சு தொடரும்வரை, கடைசி மனிதனின் திசுக்களில் ஆதிமனிதனின் மரபணுக்கள் அதிரும்வரை கபிலர் இருப்பார்.

படங்கள் : குமரேஷ்