டந்த பத்து ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் அக்கறைப் பார்வை விவசாயம் மீது விழுந்தது. நாயகன் விவசாயியாக அல்லது விவசாயிகளுக்காகப் போராடுபவராக அல்லது விவசாயம் குறித்து ஒரு வசனமேதும் பேசுபவராக பல படங்களில் வந்தனர். இப்படி பல படங்கள் வந்தாலும் அதிலெல்லாம் ஹீரோ ஒரு விவசாயி, கார்ப்பரேட் வில்லன் என்ற வகையிலேயே இருந்தன. வேற்று மொழி கலப்புடன் தமிழ் பேசிக்கொண்டு கோட் சூட் அணிந்த வில்லன் ஹீரோவுடன் மல்லுக்கட்ட... க்ளைமேக்ஸில் ஹீரோ வெற்றி பெறுவதாக விவசாய படங்கள் வந்தன.

இதை உடைத்து, உண்மைக்கு அருகில் என்று சொல்லும், தேவையில்லாமல் உண்மையான கிராமத்தையும் மக்களையும் விவசாயத்தையும் எந்தவித திரைக்கதை அவசரமும் இல்லாமல் ஆழமாகக் காட்டியிருக்கிறது இயக்குனர் மணிகண்டனின் "கடைசி விவசாயி'. "காக்கா முட்டை', "குற்றமே தண்டனை', "ஆண்டவன் கட்டளை' என இவரது படங்களின் வரிசை தனித்தன்மை கொண்டது.

ff

Advertisment

"உசிலம்பட்டிக்கு கிழக்கே உள்ள சிறிய கிராமம். மழை பொய்க்கிறது, கிணற்றில் நீரில்லை, நஷ்டம் போன்ற பல தடைகளால் விவசாயிகள் நிலத்தையெல்லாம் விற்றுக்கொண்டே வருகின்றனர். "மாயாண்டி' என்னும் கதையின் நாயகனிடம் சொற்பமாக நிலமிருக்கிறது, அதையும் காசுக்கு விலை பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இயற்கையுடன் ஒன்றி வாழும் அந்த நாயகன் நிலத்தை விற்க மறுத்து விவசாயம் செய்து கொண்டேயிருக்கிறார். நாயகன் என்றால் நாம் பார்த்துப் பழகிய வகை நாயகன் இல்லை. எழுபது வயதுக்கு மேல் இருக்கும், வயது மூப்பின் காரணமாக காது சரியாகக் கேட்காத நாயகன். இவரை போன்றே வயதில் மூத்த ஒரு அரசமரம் இடி தாக்கி கருகிப் போகிறது. குல தெய்வ வழிபாட்டை மறந்ததே காரணம் என ஊர் மக்கள் நம்புகிறார்கள். அதற்காக முதல் நெல் கொடுக்கும் பொறுப்பு விவசாயத்தை விட்டுத் தராமல் செய்யும் நாயகனிடம் வருகிறது. அதற்கான வேலையில் இருக்கும்போது மயிலைக் கொன்றதாகக் கைது செய்யப்படுகிறார் பெரியவர் மாயாண்டி. குலசாமியை கும்பிட ஏற்பட்ட இந்தத் தடை விலகியதா என்பதுதான் படத்தில் நாம் காணும் வாழ்க்கை. விவசாயம் என்பது ஒரு தனி டிபார்ட்மெண்ட் இல்லை, அது வாழ்வியல் என்பதை பிரச்சாரமாக இல்லாமல் மிக இயல்பாகக் கூறியிருக்கிறார் மணிகண்டன்.

former

Advertisment

மாயாண்டி, நம் வாழ்வு முறைப்படி பார்த்தால் பிற்போக்கானவர். ரேசன் கார்டில்லை, ஆதார் கார்டில்லை, இவ்வளவு ஏன் அவரது வீட்டில் மின்சாரமே இல்லை. “"சீயான் எவன் தயவும் இல்லாம வாழ்றார்யா'’என்று அவரது பேரன் இதை குறிப்பிடுகிறார். இது பலவகையில் நம்மை யோசிக்க வைக்கிறது. மின்சக்தி என்பது இன்று முக்கிய தேவைகளில் ஒன்று. உண்ண உணவு, உடுத்த உடை என்ற வரிசையில் மின்சக்தியைப் பயன்படுத்தாத மனிதனை இந்த உலகம் அதிசய மனிதனாகவே வியப்புடன் பார்க்கும். அதேபோல தக்காளி விதை வாங்கும்போது ஹைபிரிட் வகை குறித்து, "இதை உருவாக்குனவனுக்கு ஆண் குழந்தை பிறந்து அதுக்கு விதையில்லைன்னா என்ன பண்ணுவான்?'' என்று வெள்ளந்தியாக அவர் கேட்டாலும் அது வீரியமாக நம்மைத் தாக்குகிறது. இந்த சிந்தனை ஓட்டம் கொண்ட, அறிவியல் வளர்ச்சியைக் காணாத "கடைசி விவசாயி' என்பதுதான் மணிகண்டன் தலைப்பில் சொல்ல வரும் விஷயம் என்று தோன்றுகிறது.

விஜய்சேதுபதியும், யோகிபாபுவும் வரும் காட்சிகள் சொற்பமே என்றாலும் வலுவான இரண்டு கதாபாத்திரங்கள். விஜய்சேதுபதி ஒரு காட்சியில் மலையின் உச்சியில் ஏறி நின்று எண்ணிக்கொண்டிருப்பார். “"என்னத்த எண்ணுற?''’என அருகிலிருப்பவர் கேட்க, “"மலையத்தான்... நானும் பாக்குறேன்... அடிக்கடி மலையெல்லாம் காணாமல் போகுது''ன்னு சொல்வார். இதுபோல பல அர்த்தம் பொதிந்த வசனங்கள் அசால்ட்டாக வருகின்றன.

former

15 ஏக்கர் விவசாய நிலத்தை விற்ற காசில் 18 வயது கல்யாணி எனும் யானையையும் பாகனையும் வாங்கி ஆசீர்வாதம் கொடுக்கும் தொழிலில் ஈடுபடுகிறார் முன்னாள் விவசாயி யோகிபாபு. விவசாயத்தை விட்டு வெளியேறிய பலரின் நகைச்சுவை பிரதியாக நடமாடுகிறார். ரியல் எஸ்டேட்காரர்கள், ஃபைனான்ஸ்காரர்கள், திடீர் ஆர்கானிக் விவசாயிகள் என அனைவரையும் கிண்டலடிக்கிறார். மணிகண்டனின் தனி பாணி நகைச்சுவை நம்மை நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிறது. தலையில் முடி வளர ஏதேதோ முயற்சி செய்யும் கிராமத்து இளவட்டம் பயிர் வளர்வது குறித்து எந்த அறிவும் இல்லாமல் இருப்பதைச் சொன்ன விதம் சிரிப்பு, தந்த பாடம் சீரியஸ்.

கிராமத்தில் உள்ள வழிபாட்டு முறையும் படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு சாமி கும்பிடுவதில் ஒவ்வொரு சமூகத்துக்கும் உள்ள முக்கியத்துவம் குறித்து பேசப்படுவது அனேகமாக இதுவே முதல் முறை. ஒரு பக்கம் விவசாயத்தின் நிலைமையைச் சொல்லும் படம், அதோடு ஒரு எளிய முதியவர் அதிகாரத்தினால் படும் அவதிகளையும் சட்டத்தில் உள்ள சிக்கல்களையும் நம்மை வியக்கவைக்கும் வகையில் பேசுகிறது. இது எதையுமே ஆவேசமாக, பிரச்சாரமாக பேசாதது தான் படத்தின் மிகப்பெரிய சிறப்பு. "எவனும் தேவையில்லை... போடா...ன்னு வாழ்ந்துக்கிட்டு இருக்கார் பெரியாம்பள'' என்று ஒரு வசனம் வருகிறது. அது தமிழ் சினிமாவில், இயக்குனர் மணிகண்டனும் நடிகர் விஜய்சேதுபதியும் இயங்கும் முறையைக் குறிப்பிடுகிறது என்று தோன்றுகிறது. வணிகத்தின் எந்த அவசரத்துக்கும் பரபரப்புக்கும் அடிபணியாமல் இப்படி ஒரு படத்தைக் கொடுத் திருக்கிறார்கள். "கடைசி விவசாயி' தந்த இவர் களுக்கு 'முதல் மரியாதை' செய்வது நமது கடமை.

-சந்தோஷ் கார்த்திகேயன்