விவேக் அக்னி ஹோத்ரி இயக்கத்தில் அண்மையில் வெளியான "தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ள நிலையில், பிரதமர் முதல் பல்வேறு பா.ஜ.க. தலைவர்களும் இப்படத்தைப் பாராட்டி வருவது தற்போது சர்ச்சையாகியுள்ளது. 90களின் தொடக்கத்தில் காஷ்மீரிலிருந்து பண்டிட்கள் வெளியேறியது தொடர்பான இந்த படத்திற்கு பா.ஜ.க. ஆளும் பல மாநிலங்களில் வரிச்சலுகையும் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இப்படம் குறித்து பா.ஜ.க.வின் கரு.நாகராஜன், பேராசிரியை சுந்தரவல்லி மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சசிகாந்த் செந்தில் ஆகியோரிடம் நாம் பேசினோம். இப்படம் குறித்த அவர்களது கருத்துக்களை பார்ப்போம்.

ff

கரு.நாகராஜன்

உலகம் முழுவதும் பல இடங்களில் இனப்படுகொலைகளை நாம் பார்த்திருக்கிறோம். ஈழத்தமிழர்கள், யூதர்கள் போன்றோர் இனப்படு கொலையில் அழிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, காஷ்மீரிலும் இனப்படு கொலை நடந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் வரலாற்றுப் பதிவு தான் இந்த படம். காஷ்மீரில் வாழ்ந்த பண்டிட்கள் எப்படியெல்லாம் விரட்டி அடிக்கப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள், அங்கிருந்த பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள், இந்திய தேசியக் கொடி எடுத் தெறியப்பட்டு அங்கு வேறு தேசியக் கொடி எப்படி ஊன்றப்படுகிறது. இப்படி பல அதிர்ச்சி தகவல்களை கண்முன்னே கொண்டுவந்த பதிவுதான் இந்த படம்.

ஜம்மு காஷ்மீரின் முதல்வராக இருந்த ஃபரூக் அப்துல்லா, 1990-ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்கிறார். அதிகாரத்தில் யாருமேயில்லாத இந்த சூழலில் அங்கு அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது. "இஸ்லாத்துக்கு மாறுங்கள்; அல்லது இங்கிருந்து வெளியேறுங்கள்; அல்லது செத்துப்போங்கள்' என்ற கோஷத்தை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முன்வைத்தனர்.

இப்படத்தில் அனுபம் கெர் நடித்துள்ள புஷ்கர் என்ற கதாபாத்திரம் 370-ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்வதைக் குறித்து படம் முழுக்க பேசியிருக்கும். இந்த சிறப்புச் சலுகைதான் அங்கு பண்டிட்கள் கொல்லப்பட்டதற்கும், இளைஞர்கள் திசை மாறிப் போவதற்கும், தீவிரவாதத்திற்கும் காரணமாக இருந்தது என்பதைப் படிக்கிறோம். இன்று அதனை நாம் நீக்கியிருக்கிறோம். லடாக் மக்களின் 35 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இளைஞர்கள் எப்படி தவறான பாதையில் வழிநடத்தப்படுகிறார்கள் என்பதை திரையில் மிக அற்புதமாகக் காட்டியிருக்கிறார்கள். இதனை ஒரு குறிப்பிட்ட மதத்தின் பிரச்சனையாகப் பார்க்கக் கூடாது. ஒரு தேசத்தின் பிரச்சனையாகப் பார்க்க வேண்டும்.

இந்த படத்தின் மூலம் ஒரு உண்மையான சம்பவத்தின் வரலாற்றுப் பதிவை மக்கள் தெரிந்துகொண்டால், இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்கா மல் இருப்பதற்கான பாடமாக இது இருக்கும் என்றுதான் நான் பார்க்கிறேன்.

Advertisment

ddd

பேராசிரியை சுந்தரவல்லி

பண்டிட்களுக்கு இந்த படம் என்ன செய்தது. பண்டிட்களின் மறுவாழ்வு பற்றிப் பேசியதா? பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பண்டிட்களின் முன்னேற்றத்திற்கு என்ன உதவி செய்தது. இந்த சம்பவம் நடந்த 90களில் வி.பி.சிங் ஆட்சி இருந்தது. அவருக்கு ஆதரவு கொடுத்தது பா.ஜ.க.தான். நீங்கள் அப்போதே ஆதரவை வாபஸ் வாங்கியிருக்கலாம். ஆனால், நீங்க எதற்காக ஆதரவை வாபஸ் வாங்கினீர்கள்..? பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உங்கள் ஆதரவை வாபஸ் வாங்கினீர்கள்.

இந்த படத்தில் காட்டப்படும் சம்பவம் நடந்தபோது அங்கு உங்களைச் சேர்ந்த ஒருவர்தான் ஆளுநராக இருக்கிறார். ஏன் அதனைப் பற்றிப் பேசவில்லை. ஒரு சின்ன உண்மையைக் கொண்டுவந்து வைத்துவிட்டு, அதன்மீது பொய்களை அடுக்கி ஒரு கோட்டை கட்டியிருக்கிறீர்கள். ஒரு சமூகத்தை முன்னேற்றுவதற்காகப் பொய் சொல்கிறேன் என்றால்கூட பரவாயில்லை. ஆனால், ஒரு சமூகத்தைத் தனிமைப்படுத்து வதற்கு, ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்கு இதனைச் செய்தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஒரு படைப்பு மக்களுக்கானதாக இல்லையெனில் அது படைப்பே இல்லை. இப்படம் படைப்பே இல்லை. ஒரு படம் நேர்மையாக இருக்க வேண்டும். மற்றவர்களை நேசிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

ஃபரூக் அப்துல்லா திட்டமிட்டு பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆட்சியைக் கலைத்துவிட்டாரா..? இல்லையென்றால், எல்லோர் கைகளிலும் கத்தியைக் கொடுத்து 'போய் வெட்டுங்கள்' என்று ஃபரூக் அப்துல்லா கூறிவிட்டு குஜராத் கலவரத்தை மோடி வேடிக்கை பார்த்தது போலச் செய்தாரா..? உண்மையிலேயே அங்கே சுரண்டப் பட்டவர்கள் அங்கேயுள்ள இஸ்லாமியர்களும், காஷ்மீரிகளும் தான். இவர்கள் சொல்வதுபோல நடந்துகொண்டதாக ஃபரூக் அப்துல்லா மீது ஏதேனும் சிறு வழக்காவது உள்ளதா..? ஆனால், குஜராத் கலவரம் குறித்து மோடி மீது வழக்கு இருந்தது. மோடி, அமித்ஷா ஆகியோர் விசாரணை செய்யப்பட்டனர். இதனை மறுக்க முடியுமா..?

எல்லா இந்துக்களும் நல்லவர்கள். எல்லா இஸ்லாமியர்களும் கெட்டவர்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தும் நயவஞ்சகத்தனம் தான் இப்படத்தில் இருக்கிறது. இப்படியான படத்திற்கு எல்லா சலுகைகளும் கொடுக்கிறீர்கள் என்றால் அதன் பின்னால் உள்ள அரசியல் என்ன..? காஷ்மீரின் சிறப்புச் சலுகைகளை என் திரும்பப்பெற்றோம் என்பதைக் காட் டும்விதமாக எடுக்கப்பட்ட பிரச்சாரப் படம் தான் இது. அங்குள்ள மக்கள் திறந்தவெளி சிறைச்சாலையில் இருக் கிறார்கள். யாரும் அங்கு சுதந்திரமாக நடமாட முடியாது. உபா சட்டத்தில் எத்தனை பேரைக் கைது செய்துள்ளீர் கள். உலகளவில் பல விருதுகளை வாங்கிய பல பத்திரிகையாளர்கள் உபா சட்டத்தால் சிறைகளில் இருக் கிறார்கள். போன வருடம் கூட எத்தனை தலைவர்களை அங்கு வீட்டுச் சிறையில் வைத்தீர்கள். எந்த அரசியல் தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும் உள்ளே நுழையவிடவில்லை. ஏன் நுழைய விடவில்லை..? நூற்றுக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்களே, அதைப் பற்றிக் கேள்விகேளுங்கள்; குழந்தைகளைப் பறிகொடுத்த எத்தனை பேர் அங்கு இருக்கிறார் கள்..? பெல்லட் குண்டு போட்டு எத்தனை பேரின் முகங்களைச் சிதைத்தீர்கள்.?

இஸ்லாமிய அடிப்படைவாதி களையும் பயங்கரவாதிகளையும் நாங்கள் ஆதரிப்பதில்லை. ஆனால், சக மனிதர்களோடு வாழ நினைத்து வாழ்க்கையை இழந்து நிற்கின்ற சாமானியர்களை ஆதரிக்கலாம். இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு லட்சம் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். திப்பு சுல்தான், ஹைதர் அலி போன்றோரின் நிலைமை என்ன ஆனது..? வரலாறு மன்னிக்காது. ஒட்டுமொத்தமாக ஓர் மக்கள் எழுச்சி வந்தால் நீங்களெல்லாம் காணாமல் போவீர்கள்.

Advertisment

ff

சசிகாந்த் செந்தில்

காஷ்மீரில் நடந்தது இனப்படுகொலை என நிறுவ முயன்றிருக்கிறார்கள். உலகம் முழுவதும் தீவிரவாதத்தின் தாக்கத்தை உணர்ந்துகொண்டு தான் இருக்கிறது. தீவிர வாதத்திற்கு மதம் கிடையாது. காஷ்மீரிலும் அப்படித்தான். அரசாங்கப் பதிவுகளின்படி, 500க்கும் குறைவான பண்டிட்கள் தான் இறந்த தாகக் கூறப்பட்டிருக் கிறது. ஆனால், 1989க்கு பிறகு 20,000க்கும் மேற் பட்ட காஷ்மீர் இஸ்லாமி யர்கள் தீவிரவாதத்தால் இறந்துள்ளனர்.

இரண்டிலிருந்து மூன்று லட்சம் பண்டிட் கள் அங்கிருந்து வெளி யேறியதாகக் கூறப்படு கிறது. ஆனால், அவர்களெல்லாம் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தால் வெளியேறினார்கள். ஆனால், அவர்கள் வெளி யேற அரசாங்கமே உதவி செய்ததாக அப்போது ஒரு பேச்சு உண்டு. அப்போதைய காஷ்மீர் ஆளுநர் ஜக்மோகனே இதற்கான உதவிகளைச் செய்ததாகப் பேச்சுக்கள் உண்டு. வெளியேற்றத் திற்கும் இனப்படுகொலைக்கு வித்தியாசம் உண்டு. "அங்கு இனப்படுகொலைதான் நடந்தது, அதனை இஸ்லாமியர்கள்தான் செய்தார்கள்' என நிறுவ முயன்றிருக்கிறது இப்படம்.

காஷ்மீர் ஒரு மிகப்பெரிய பள்ளத்தாக்கு. இங்கு ரொம்ப நாட்களாகவே பலதரப்பட்ட மக்கள் குடியேறியுள்ளனர். பல மதங்களைச் சேர்ந்த மக்கள் அங்கு ஒன்றாக வசித்துவந்தனர். காஷ்மீரைப் பற்றிய முதல் குறிப்பே நமக்கு பௌத்த மத குறிப்பேட்டில் இருந்துதான் கிடைக்கிறது. ஒரே மாதிரியான உணவு வகைகள், உடைகள் உள்ளிட்டவற்றை அவர்கள் பின்பற்றினர். பிறகு பல தரப்பு மக்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள். நமக்கு எப்படி தமிழன் என்ற ஒரு உணர்வு உள்ளதோ, அதேபோல அங்கேயும் அனைத்து மதங்களுக்கு இடையேயும் மிகப்பெரிய ஒருமைப்பாடும், நாம் காஷ்மீரிகள் என்ற உணர்வும் இருந்தது. இதனை "காஷ்மீரியத்' என்று சொல்வார்கள்.

சுதந்திரத்தின்போதுதான் இங்கு முதன் முறையாகப் பிரச்சனை ஏற்பட்டது. காஷ்மீர் இந்தியாவுடன் சேருமா..? பாகிஸ்தானுடன் சேருமா..? எனக் கேள்வி வந்தபோது, காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்துவிடும் என நினைத்த பாகிஸ்தான், பஷ்தூன் பழங்குடி மக்களைக் காஷ்மீருக்குள் அனுப்புகிறது. இதனால் அச்சப்பட்ட காஷ்மீர் இந்தியாவுடன் இணைய ஒப்புக்கொள்கிறது. காஷ்மீரின் ஒரு குறிப்பிட்ட பகுதிவரை பாகிஸ்தானியப் பழங்குடி மக்கள் வசம் செல்கிறது. இந்த பிரச்சனை ஐ.நா. வரை செல்கிறது. இது மதத்தையோ சாதியையோ சார்ந்த தகராறு அல்ல. இது ஒரு நிலப்பிரச்சனை.

இந்த நிலப்பிரச்சனையின் போது, 1989-ஆம் ஆண்டு இந்தியா அங்கு நடத்திய ஒரு தேர்தலைச் சரியாக நடத்தவில்லை என்ற பாகிஸ்தான், அப்பகுதியில் தீவிரவாதக் குழுக்களை உருவாக்குகிறது. இந்திய அரசுக்கு ஆதரவானவர்களை அக்குழுக்கள் தாக்கின. இதில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் என அனைத்துத் தரப்பினரும் கொல்லப்பட்டனர்.

அப்போதுதான் அத்வானி ரதயாத்திரை யைக் காஷ்மீருக்குக் கொண்டுசென்றார். ஏற்கனவே மத்திய இந்தியாவில் இந்த யாத்திரையால் இந்துக் களுக்கும் இஸ்லாமி யர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டிருந்த சூழலில், காஷ்மீரிலும் முதன்முறையாக அதே நிலை ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த தீவிரவாதக் குழுக்கள் இந்துக்களை அங்கிருந்து வெளியேறச் சொல்லி மிரட்டல் விடுகின்றனர். இதனால் அங்கிருந்து வெளியேறும் சூழலுக்குத் தள்ளப்பட்ட இந்துக்கள் மத்திய அரசிடம் உதவி கேட்கின்றனர். ஆனால், பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி செய்துவந்த வி.பி. சிங்கின் அரசிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்காததால், அங்கிருந்த ஜம்முவுக்கும் டெல்லி போன்ற இடங்களுக்கும் வெளியேறினர்.

இஸ்லாத்தைத் தீவிரவாத மதமாகக் கட்டவேண்டும் என்பதுதான் இப்படத்தின் நோக்கம். இதை ஒரு அரசியல் கட்சி ப்ரொமோட் செய்வதுதான் இன்னும் மோசமான விஷயம்.

-கிருபா