தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின்னர், தமிழக அரசியலில் அதிக கவனம் ஈர்க்கப்பட்ட நிகழ்வு என்றால் அது முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது தான். தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியபோதும், கொங்கு மண்டலம் மட்டும் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருந்தது. அதோடு, அங்கே பா.ஜ.க.வும் தனது ஆதிக்கத்தை செலுத்தியது. பா.ஜ.க. முன்னாள் தலைவர் அப்பகுதியில் தனது தனிக்கவனத்தை செலுத்தி பா.ஜ.க.வை வளர்த்தெடுக்க முற்பட்டார். ஆனால் அப்படியான சூழலை அடுத்தடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் முறியடித்துக்காட்டி, தி.மு.க.வின் கோட்டையாக மாற்றிய பெருமை செந்தில்பாலாஜியின் ஆளுமைக்கு சான்று. இதன்காரணமாக செந்தில்பாலாஜிக்கும், முன்னாள் பா.ஜ.க. தலைவருக்குமிடையே நேருக்கு நேர் வார்த்தைமோதல்கள் ஏற்பட்டதை தமிழகமே பரபரப்பாகப் பார்த்தது.
இதையடுத்து, ஒன்றிய அரசின் முழுக்கவனமும் செந்தில்பாலாஜியின் மீது திரும்பியது. அவர் இருக்கும்வரை கொங்கு மண்டலத்தில் நம்மால் அதிகாரம் செலுத்துவது கடினம் என்பதைப் புரிந்துகொண்டது. எனவே அமைச்சராக பொறுப்பேற்ற செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறையை ஏவியது. அமலாக்கத்துறையின் ரெய்டை தொடர்ந்து கைது செய்து சிறைக்குள் தள்ளப்பட்டார். அதன்பின் அவரது அமைச்சர் பதவியும் பறிபோனது. உச்ச நீதிமன்றத்தில் தொடர்ச்சியான சட்டப் போராட்டத்துக்குப்பின், அமலாக்கத்துறையின் அரசியல் சூழ்ச்சியை நீதிமன்றத்தில் நிரூபித்து, 400 நாட்களைக் கடந்து ஜாமீனில் வெளிவந்த செந்தில்பாலாஜி, மீண்டும் அமைச்சராகப் பொறுப் பேற்றார். இதை எதிர்பார்க்காத பா.ஜ.க. அவர்மீது தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் புகாரளித்து, அமைச்சர் பதவியி லிருந்து விலகும்படி செய்தது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போதே செந்தில் பாலாஜியை கைது செய்யத் திட்டமிட்ட ஒன்றிய அரசு, அவர் அமைச்சராகப் பொறுப் பேற்ற பின்னரே அவரை கைது செய்ய முடிந்தது. இப்படி பல போராட்டங்களை கரூர் மாவட்டம் சந்தித்தது. இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரை, கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை என மொத்தம் 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த மாவட்டத்தை பொறுத்தவரை பட்டிய-னத்தவர்கள், நாயக்கர்கள், சோழிய வெள்ளாளர்கள், ஊராளி கவுண்டர்கள் ஆகியோர் பெரும்பான்மையாக இருந்தாலும், பட்டிய-னத்தோர், கம்பளத்து நாயக்கர்கள், ஊராளி கவுண்டர்களின் வாக்குகள்தான் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கின்றன.
இந்தத் தொகுதியில் அ.தி.மு.க. பலம் வாய்ந்த கட்சியாக இருந்தது. அ.தி.மு.க., தி.மு.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவினாலும், கடந்த முறை கரூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் செந்தில்பாலாஜியும், அ.தி.மு.க. சார்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் போட்டியிட்டனர். அதேபோல் அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. சார்பில் இளங்கோ, அ.தி.மு.க. கூட்டணி பா.ஜ.க. வேட்பாளர் மு.பா.ஜ.க.தலைவர், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் சிவகாமசுந்தரி, அ.தி.மு.க. சார்பில் தானேஷ் முத்துக்குமார் போட்டியிட்டனர். குளித்தலை தொகுதியில் தி.மு.க. சார்பில் மாணிக்கம், அ.தி.மு.க. சார்பில் சந்திரசேகர் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்களில் செந்தில்பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவிர மற்றவர்களுக்கு இந்த முறை சீட் கேள்விக்குறிதான்.
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிட செந்தில்பாலாஜிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதே சமயம் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அவர் தேர்தலில் போட்டி யிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்பட்சத்தில், அவர் போட்டியிடக் கூடும். அ.தி.மு.க. கோட்டையாக இருந்த கரூர் மாவட்ட தொகுதிகள், செந்தில்பாலாஜி தி.மு.க.விற்கு வந்த பிறகு அவை தி.மு.க.வின் கோட்டையாக மாறிவிட்டன. அரவக்குறிச்சியில் கடந்தமுறை அ.தி.மு.க. கூட்டணியிலிருந்த பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் போட்டியிட்டார். இந்தமுறை அந்த தொகுதியில் மீண்டும் பா.ஜ.க. போட்டியிடுவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் என்றும், அதற்கு பதிலாக அ.தி.மு.க.வே நேரடியாக இந்த தொகுதியில் போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது. தனித்தொகுதியான கிருஷ்ணராயபுரத்தில் தி.மு.க. சார்பில் புதுமுகத்திற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அ.தி.மு.க. சார்பில் புதிய வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குளித்தலை தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், அ.தி.மு.க. சார்பில் சந்திரசேகர் போட்டியிட்ட நிலையில், இந்த முறை கரூர் மாவட்டத்திலுள்ள கரூர் தொகுதியை தவிர்த்து மற்ற 3 தொகுதிகளி லும் புதிய முகங்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் தி.மு.க., அ.தி.மு.க.விற்குள் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் செந்தில்பாலாஜி கை காட்டும் புதிய முகங்கள் இடம்பெற உள்ளனர். அதே சமயம், சீனியர்கள் ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வழங்கலாம் என்றும், தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ள நிலையில், அ.தி.மு.க. தரப்பில் தி.மு.க.வின் வேட்பாளர்களைப் பொறுத்தே வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். இருப்பினும் இந்த முறை தி.மு.க. மீண்டும் கரூர் மாவட்டத்தை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.