பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பது கிராமத்துச் சொலவடை. அந்த சொலவடைக்கு ஏற்றாற்போல் தாங்கள் ஒன்று நினைத்து உச்ச நீதிமன்றத்தினை நாட, நீதிமன்ற உத்தரவால் ஆப்பசைத்த குரங்காய் மாறியுள்ளது நடிகர் விஜயின் நிலைமை. 

Advertisment

"கூட்டணிக்கு விஜய் வந்தால் வலுவாக இருக்கும் என பா.ஜ.க. தலைமை, தமிழ் நாட்டிலுள்ள தங்களது கூட்டணியிலுள்ள கட்சியினருக்கு கூறிவைக்க, அதையே மந்திரமாக எடுத்துக்கொண்டு அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் களமிறங்கியது. கரூரில் விஜய் ரோடு ஷோ நடத்தியதற்கு முந்தைய நாட்களில் உள்ளூர் காவல்துறை டைரிகளின் குறிப்புக்களையும், வருவாய்த்துறையின் டைரி குறிப்புக்களையும் ஆராய்ந்துபார்த்தாலே போதும், இரு கட்சிகளும் காவல்துறைக்கு எந்தளவிற்கு நெருக்கடி கொடுத்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். அரசியல் படுகொலைகள்தான் இது. இந்த படுகொலைகளில் எதிர்பார்த்த பெரிய எண்ணிக்கை வேறு. சிக்கியது என்னவோ 41 உயிர்கள்தான். ஆனால் இதனையும் வைத்து அரசியல் செய்து நடிகர் விஜய்யை தன்பக்கம் வைத்திருக்கவே ஆட்டத்தினை ஆரம்பித்துள்ளது பா.ஜ.க.'' என்கிறார் கரூரிலுள்ள மூத்த அரசியல் செயற் பாட்டாளர் ஒருவர்.

Advertisment

"கரூரில் விஜய் ரோடு ஷோ நடத்த விருக்கின்றார். அதற்கு ஏதுவாக லைட் ஹவுஸ் ரவுண்டானா, வேலுச்சாமிபுரம், வெங்கமேடு, எம்.ஜி.ஆர். சிலை, திருமா நிலையூர் பேருந்து நிறுத்தம் மற்றும் மனோகரா கார்னர் என ஐந்து இடங்களை குறித்தனர் த.வெ.க. நிர்வாகிகள். இதற்கு முன்னதாக எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்திற்காக உழவர் சந்தைப்பகுதி, வேலுச்சாமிபுரம், லைட் ஹவுஸ் ரவுண்டானா மற்றும் மனோகரா கார்னர் பகுதிகளைக் கேட்டிருந்ததும், பா.ம.க.வின் அன்புமணி ரோடு ஷோவிற்காக வேலுச்சாமிபுரத்தை அப்ரூவல் செய்ததும் குறிப்பிடத்தக்கது. 

மற்றைய இரு கட்சிகளும் வேலுச் சாமிபுரத்தையே முக்கிய இடமாகக் காண்பிக்க, த.வெ.க. அந்த இடத்திற்கு தள்ளப்பட்டது என்று ஒருசாரர் கருத்து உண்டு. பா.ஜ.க. கூட் டணியிலுள்ள அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. ஆகிய இரு கட்சிகளும் வேலுச்சாமிபுரத்தை த.வெ.க.விற்கு வழங்கியது என்றே கூறலாம். அதுபோக சனிக்கிழமை நேரம். அந்தப் பகுதியிலுள்ள டெக்ஸ்டைல்ஸ் பணியாளர்கள் அதிகளவில் வருவார்கள், கூட்டம் காண்பிக்கலாம் என ஆதவ் அர்ஜுனா மூலம் ஐடியா கூறப்பட்டது. அதன் பிறகுதான் இந்த கொடூரக் கொலைகள். இது திட்டமிட்ட செயலே'' என்கின்றார் உளவுத்துறை அதிகாரி ஒருவர்.

Advertisment

karur-vijay1

முன்னதாக, செம்படை, வெங்கமேடு சாலை, சர்ச் கார்னர், சின்னப்பா தியேட்டர், கரூர் பேருந்து நிலையம், உழவர் சந்தை, லைட் ஹவுஸ் ரவுண்டானா ஆகிய பகுதிகளில் ஐந்து நிமிடம் மட்டும் நடிகர் விஜய் மக்களிடையே உரையாடவுள்ளார் என த.வெ.க. தரப்பில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, இதில் பல இடங்கள் குறுகிய சாலைகள், இதனால் பல நெருக்கடிகள் நிகழ வாய்ப்புண்டு என  அந்த கோரிக்கையை நிராகரித்தது கரூர் மாவட்ட காவல்துறை என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட உளவு அதிகாரி ஒருவரோ, " லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் விஜய் பேசுவார் எனவும், இங்கு 68,965 நபர்கள் கூடலாம் என கே. பரமத்தியைச் சேர்ந்த வி.ஆர். பில்டர்ஸ் கொடுத்த சர்வே அறிக்கையையும், அதற்கு இணைப்பாக அந்தப் பகுதியின் டோப்போ பிளான் உள்ளிட்ட ஸ்கெட்சுகளையும் கொடுத்தது த.வெ.க.  தரப்பு. அந்த பகுதியில் கூட்டம் கூடினால் அசம்பாவிதம் கண்டிப்பாக நடக்கும் என்பதால் அதனைத் தவிர்த்துவிட்டோம். எதற்கு அவர்களுக்கு குறுகலான சாலைப் பகுதி தேவை..? என்பதுதான் பல கேள்விகளை உருவாக்கியுள்ளது. இன்னொன்று முக்கியமாக குறிப்பிடவேண்டும். அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தின் வேலுச்சாமிபுரத்தில் இடதுபக்க சாலையைப் பயன்படுத்தினார். கூட்டம் முன்பு வண்டியை நிறுத்தி பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதனால் எந்த அசம்பாவிதமும் இல்லை. 

ஆனால் விஜய்யோ, வலதுபக்க சாலை வழியாக கூட்டத்தினை கிழித்துக்கொண்டு பிரச்சார வாகனத்தை நிறுத்தினார். கூட்டத்தினை கிழித்துக்கொண்டு செல்கையில் சிதறியது கூட்டம். கூட்டம் ஓடும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விஜய்யுடன் வந்த பவுன்சர்கள் அதனைச் சரிசெய்யவில்லை" என்றார் அவர்.

"சார்... இங்க கூட்டம் அதிகமா இருக்கு.. சீக்கிரம் வந்து உங்க தலைவரை பேசக் கூறுங்கள் என த.வெ.க. நிர்மல்குமாருக்கு 12 முறை வாட்ஸ் அப்பிலும், நேரடியாகவும் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கியுள்ளார் கரூர் மாவட்ட எஸ்.பி. ஆனால், "அவங்க மூடின கதவிற்குள் இருக்கிறார்கள். என்னால் கூறமுடியாது. வேண்டுமானால் ஆதவ் அர்ஜுனாவிடம் கூறுங்கள்'' என நிர்மல்குமார் பதிலுரைத்ததும் சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் சிக்கியுள்ளது.

karur-vijay2

இது இப்படியிருக்க, விஜய்யின் பிரச்சார பேருந்தின் சக்கரத்தின் அடியில் உட்கார்ந்து கொண்டு, "என் மகள் அஸ்மிதாவை மீட்டுத் தாருங்கள்'' என அரற்றியிருக்கின்றார் அஸ்மிதாவின் அம்மா. யாரும் அவரின் கதறல் குரலுக்கு செவிசாய்க்கவில்லை. பேருந்தின் சக்கரத்தின் அடியில் நிலையாக உட்கார்ந்த பின்னரே ஆதவ் அர்ஜுனா மூலம் கேட்டறிந்து அஸ்மிதாவைக் காணவில்லை என்று மைக்கில் கத்தினார் விஜய். இதற்குள் நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே சிதறி ஓடினர் மக்கள். அந்த நேரத்தில் காவல்துறை வாகனத்தின் இருபக்கமும் தடுப்புபோல் ஏற்படுத்தி      மக்களை காப்பாற்ற, எண்ணிடலங்கா உயிர்ச்         சேதம் தடுக்கப்பட்டது. 

குறிப்பாக கரூர் எஸ்.பி. ஜோஸ்தங்கையா தலைமையிலான போலீசார் மதியத்திலிருந்தே ஸ்பாட்டில் ரசிகர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கூட்ட நெரிசல் அசம்பாவிதம் ஏற்பட்டபோது, இவர்கள் துரிதமாக செயல்பட்டதால்தான் 145க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது. 

அறிவித்திருந்த நேர அளவுக்குள் கரூருக்கு வராமல் தன்னைக் காண்பதற்காக திரண்டிருந் தவர்களை 7 மணிநேரத்திற்கும் மேலாக காக்கவைத்ததும், அங்கு குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படைத்தேவைகள் போதுமான தாக இல்லாதிருந்ததும், கூட்டத்திற்கு வந்தபிறகும் முகம்காட்டாமல் மக்களை தன் வண்டிக்குப் பின்னேயே அலையவிட்டதும்தான் உயிரிழப்புக்குக் காரணம் என்பதை காணொலிச்சான்றுகள் காட்டுகின்றன. இது திட்டமிட்டே நடந்திருக்கும் படுகொலை. கூடுதலாக படுகொலைகள் நடத்தப்படவேண்டும் என்பதுதான் விஜயின் எண்ணம் என்பதற்கு களச் சான்றாவணங்கள் இருப்பதால் ஆப்பசைத்த குரங்கின் நிலை விஜய்க்கு.

_________________
டிசம்பர் டூ செப்டம்பர்!

பிரச்சார தினத்தை மாற்றிய த.வெ.க.!

ரூரில் பிரச்சாரம் செய்வதற்காக த.வெ.க. காவல் துறையிடம் முதலில் அனுமதி கேட்டிருந்த தேதி 13-12-25. இதற்கிடையில்தான் கரூரில் முப்பெரும் விழாவை செப்டம்பர் 17-ஆம் தேதி பிரமாண்டமாக நடத்திக்காட்டியது தி.மு.க. இதையடுத்து திரும்பவும் காவல் துறையை அணுக, தேதிகளை  மாற்றி கரூரில் பிரச்சாரம் மேற் கொள்வதற்கு அனுமதிகேட்டனர் த.வெ.க.வினர். 

அதற்குமுன்பு அதே வேலுச் சாமிபுரத்தில் கூட்டம் நடத்த அனுமதிகேட்டு காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில், எடப்பாடி நீதிமன்றம்வரை சென்று காவல் துறை அனுமதிபெற்று வேலுச்சாமி புரத்தில் கூட்டம் நடத்திச் சென்றி ருந்தார். 

த.வெ.க. பிரச்சாரத்துக்காக குறுகலான சாலைகள் அமைந்த இடங்களாகத் தேர்வுசெய்து அனுமதி கேட்டனர். 5 இடங்களைக் குறிப்பிட்டு 5 இடங்களிலும் விஜய் 10 நிமிடங்கள் பேசுவார் எனக் கேட்க, காவல்துறை அதைமறுத்து ஒரேயொரு இடத்தில் மட்டும் பேச அனுமதியளித்தது. அதில் அவர்கள் தேர்வுசெய்த இடம்தான் வேலுச்சாமிபுரம்.

அப்போதும் பெரிய கும்பலை அந்த இடம் தாங்காது என காவல்துறை எச்சரித்தபோது, தவெ.க. நிர்வாகிகள் "எல்லா ஊர்களிலிருந்தும் தொண்டர்கள் வரமாட்டார்கள். கரூரிலுள்ளவர்கள் மட்டுமே வருவார்கள்' என்றனர். ஆனால் சமூக வலைத்தளத்தில் கரூர் யார் கோட்டை எனக் காட்டுவோம் என விளம்பரம் செய்து ஆட்களைத் திரட்டினர். இதற்கான ஆதாரங் களை எல்லாம் காவல்துறை திரட்டி வைத்திருக்கிறது. அதுபோக விஜய் வரும்போது, நாமக்கல்லில் அவரைப் பார்க்கவந்த கூட்டத்தினரில் கிட்டத்தட்ட 3,000 பேர் வேறு இருசக்கர வாகனங்களிலும், இதர வாகனங்களிலும் வந்தவர்கள் வேறு சேர்ந்துகொண்டனர். அனைத்தும் ஒன்றுதிரண்டு நடந்ததுதான் அந்த 41 பேர் மரணம்.