"போன் அடிச்சா எடுக்கமாட்டேங்குற, பேச மாட்டியோடி? நீ வரலைன்னா நாம நெருக்கமா இருக்குற அத்தனை போட்டோக்களையும், வீடியோக்களையும் அத்தனை பேருக்கும் அனுப்பி வைச்சுருவேன்'' என பெண் ஒருவரை மிரட்டி,அடித்து உதைத்த கராத்தே மாஸ்டர் விவகாரம் காவல்துறையில் புகாராக பதிவானது. போலீஸாரின் விசாரணையின்போது, "இந்த பெண் மட்டுமல்ல, இதுபோல் பல இளம்பெண்களை சிதைத்த விவகாரம் வெளியாகி நெல்லை மாவட்டத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த நரசிங்கநல்லூர் பொன்விழா நகரைச் சேர்ந்தவன் அப்துல் வகாப். கராத்தேவில் டிப்ளமோ பட்டம் பெற்ற இவன், நெல்லை டவுண் கோடீஸ்வரன் நகர் பகுதியில் கராத்தே வகுப்பும், பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி வகுப்பும் நடத்தி வந்திருக்கிறான். இவனின் பயிற்சி மையங்களில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ -மாணவிகள் படித்துவருகின்றனர். இதில் சுத்தமல்லி பகுதியில் டீக்கடையில் கூலி வேலை பார்ப்பவரின் 13 வயது சிறுமி யும் ஒருவர்.
சுத்தமல்லி போலீஸா ரிடம் நேரில் ஆஜராகி புகாரளித்த அந்த சிறுமியின் தாய், "என்னுடைய கணவர் இதே பகுதியிலுள்ள டீக்கடை யில் கூலி வேலை பார்க் கின்றார். கடந்த 4 வருடங் களுக்கு முன்பு என்னுடைய மகளை சுத்தமல்லி விலக்குப் பகுதியில் கராத்தே வகுப்பு நடத்தும் அப்துல் வகாப் பயிற்சி மையத்தில் சேர்த்துவிட்டேன். நான்தான் என்னுடைய மகளை பயிற்சி மையத்திற்கு கொண்டு போய் விட்டுவிட்டு திரும்ப கூட்டிவருவது வழக்கம். 4 வருடங்களுக்கு முன்பு என்னு டைய மொபைல் எண்ணை வாங்கிய அப்துல் வகாப், எனக்கு அடிக்கடி வாட்ஸ்ஆப்பில் செய்திகளை அனுப்பி, அவனுடைய வலையில் என்னை விழ வைத்தான். எங்களுக்குள் நெருக்கம் அதிகமானது, எனது கணவருக்கு தெரிந்தநிலையில், என்னை கண்டித்தார். சமீபகாலமாக அவனுடைய அழைப்பை நான் எடுக்கவில்லை. இந்த நிலையில் என்னுடைய வீட்டிற்கே வந்து, "போன் அடிச்சா எடுக்கமாட்டேங்குற, பேசமாட்டியோடி. நீயும், நானும் இருக்கிற வீடியோ, போட் டோக்களை வாட்ஸ்ஆப்பில் இறக்கிவிடுவேன்' என்றவன், என்னுடைய வயிற்றில் ஓங்கி மிதித்தான். அக்கம் பக்கத்தி லுள்ளவர்கள் வந்ததால் உயிர்பிழைத்தேன்'' என்றார் அவர்.
புகாரைப் பெற்ற சுத்தமல்லி போலீஸார் உடனடியாக அப்துல் வகாப்பை பிடித்துவந்து பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். தொடர் விசாரணையில், டீக்கடைக்காரரின் மனைவிபோல் இவனது வலையில் விழுந்தவர்கள் ஏராளம் என்பது உறுதியாகியுள்ளது.
"அவனை விசாரிச்சவரையில்... அவனால் இதுபோல் ஆசைவார்த்தை பேசி வீழ்த்தப்பட்ட பெண்கள் மட்டும் மொத்தம் 8 நபர்கள். இதில் நன்கு படித்த மருத்துவர், வழக்கறிஞர், ஆசிரியை, வங்கி ஊழியரும் அடக்கம். அவனோட டார்கெட், தனியாக மாணாக்கர்களை பயிற்சி மையத்திற்கு அழைத்துவரும் இளம்பெண்கள் மட்டுமே. முதலில் அவர்களிடம் கனிவாக நடப்பதுபோல் காண்பித்து, இளம்பெண்களின் மொபைல் எண்களை வாங்கி, தான் இன்னன்ன சாதனை செய்துவிட்டேன் எனப் புகைப்படங்களை அனுப்பி அவர்களிடம் அக்கறையாக இருப்பதுபோல் நடந்துகொள்வான். அதேபோல் தன்னை கராத்தேயில் பலசாலி என்பதாகவும் கெத்தாகக் காட்டிக்கொள்வான். இதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு, அவனது வலைக்குள் விழும் பெண்களே அவனது முதல் டார்கெட்.
அதன்பின் அவர்களுடைய வீட்டிற்கே சென்று இவனுடைய லீலையை அரங்கேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றான். இதற்கு பல புகைப்படங்கள் சாட்சியாக இருக்கின்றது. ஒருகட்டத்தில் அவர்களுடன் நெருக்கமாக இருந்ததை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்துக்கொண்டவன், அதைக்காட்டி மிரட்டியே அவர்களிடமிருந்து நகை, பணத்தையும் பறித்திருக்கிறான். இவனது சுயரூபம் தெரிந்த பின்... விலக முற்படும் பெண்களை, வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டத் தொடங்கியிருக்கிறான். அப்துல் வகாபின் "மன்மத லீலை' வலையில் சுமார் 8 பெண்கள் வரை ஏமாந்திருப்பதும், சில பெண்கள் இவனால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்க்கையை இழந்திருப்பதும் தெரியவந்தது. மேலும், இதனை வெளியே தெரிவித்தால் சமுதாயத்தில் அவமானம், வெளியில் நடமாட முடியாது என்று கருதி, பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் அமைதி காத்ததும் தெரியவந்துள்ளது'' என்கிறார் சுத்தமல்லி காவல் நிலைய போலீஸார் ஒருவர்.
காவல்துறை, இந்த வழக்கை சீரியஸாக கையாண்டு வருகின்றது. தங்கள் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை அவசியம் என்பதனை உணர்ந்து பயிற்சி வகுப்பில் சேர்த்துவிடும் இளம்பெண்கள், தங்களையும் இதுபோல் கயவர்களிடமிருந்து தற்காத்துக்கொள்ள முற்படுவார்களா?
-வேகா