நட்சத்திரத் தொகுதியாய் இருக்கும் கோவை தெற்கு தொகுதியில் திரும்பிய பக்கம் எல்லாம் சினிமா நடிகைகளின் பிரச்சாரம் பரபரக்கிறது.
நடிகரும், வேட்பாளருமான ம.நீ.ம. தலைவர் கமலஹாசனின் அண்ணன் மகளான சுஹாசினி... ""ஊழல்வாதிகளை எதிர்த்து மட்டுமே கமல் போராடுகிறார்'' என தீவிரமாய் நடந்து சென்று ஓட்டுக் கேட்கிறார். கமலோ, பேரூர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளாரை சந்தித்துவிட்டு, ""நான் வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற அவரது ஆதரவை கோரினேன். அப்போது அவர், "கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட முடிவெடுத்த தற்கு மகிழ்ச்சி' என்றார். என் செயல்பாடுகளை கவனிப்பு செய்தும், மத நல்லிணக்கத்திற்கான குரலை ஓங்கி ஒலிப்பதாகவும் பாராட்டினார். "சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள மக்கள் உன்னுடன் தொடர்பில் இருக்கும் நிலை தொடர்ந்தால் மறுமலர்ச்சியை எதிர்பார்க்க முடியும்' எனச் சொன்னவர், கிராம சபை, தீண்டாமை ஒழிப்பு மற்றும் பெண்கள் முன்னேற்றம் போன்றவைகளுக்காக நாங்கள் கொடுக்கும் குரலில், எனது குரலும் ஒலிப்பதாக சிலாகித்துப் பேசினார்'' என்றார் கமல்.
""கமல் எங்கே பெண்ணுரிமைக்கு குரல் கொடுக்கிறார்? இதே தெற்கு தொகுதியில் போட்டியிடும் பி.ஜே.பி. வானதி சீனிவாசனோடு ம.நீ.மய்யம் கமலஹாசன் மக்கள் பிரச்சினைகள் குறித்து நேரடியாக விவாதிக்கட்டும்'' என மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி சவால்விட்டார்.
இதற்கு ம.நீ.மய்யம் பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில்... "கமலஹாசன் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் மட்டுமே விவாதிக்க விரும்புவதாகவும், வானதி சீனிவாசன் போன்ற துக்கடா அரசியல்வாதியுடன் விவாதிக்க ம.நீ.ம.வின் மாணவரணியே போதுமானது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைக்கண்டு மனம் துடித்த வானதி வெளியிட்ட வீடியோவில்... ""ஒரு குக்கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, பொதுவாழ்வில் பல தடைகளைக் கடந்து , மிகப்பெரிய இடத்திற்கு வந்த என்னைப் பார்த்து துக்கடா அரசியல்வாதி என சொல்லியிருக்கின்றனர். இந்த விமர்சனத்தின் மூலம் பெண்களுக்கு ம.நீ.ம. கொடுக்கும் மரியாதை இதுதானா?'' என்று கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில்... கமலஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பி.ஜே.பி.யின் மகளிர் அமைப்பினர், கோவை தாமஸ் வீதியில் திரண்டு, கமலஹாசன் திரைப்படங்களில் நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கும் படங்களைப் பிடித்தவாறு , "துப்பட்டா கமலஹாசன்' என கோஷங்களை எழுப்பினர்.
இந்த வார்த்தைச் சண்டைகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளராய் நிற்கும் மயூரா ஜெயகுமார், ""தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லி யிருக்கும் அனைத்தும் நிறைவேற்றப்படக்கூடியது, நிறைவேற்றியே ஆவோம். அரசியல் நிலத்தில் சில காளான்கள் முளைக்கும் காரணமேயில்லாமல்... இந்தத் தொகுதியில் சிலர் முளைத்திருப்பதைப் போல'' என்கிறார் காங்கிரசின் மயூரா ஜெயகுமார்.