கூவத்தூர் என்ற மிகச்சிறிய ஊருக்கு தமிழக அரசியலில், மிகப்பெரிய வரலாறு உண்டு. ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரான சசிகலா, முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தே தீருவது என்ற முனைப்புடன் இருந்தார். இதைத் தடுத்தே தீருவது என்ற முடிவுடன் ‘தர்மயுத்த ஹீரோ’ ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை அணி திரட்டினார்.

ssஎடப்பாடி பழனிச்சாமி உட்பட சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 100 பேர், சென்னையிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்கு 2020 பிப். 08-ஆம் தேதி கொண்டு செல்லப்பட்டனர். சகலவிதமான சவரட்னைகளுடன் பாதுகாக்கப்பட்டனர். ‘காலையிலேயே மட்டன் போடுகின்றனர், மட்டை ஆக்குகின்றனர்’ என சென்னை தி.நகர் எம்.எல்.ஏ. சத்யா பெர்முடாசுடன் பேட்டி கொடுத்து தமிழக வாக்காளர்களை பரவசப்படுத்தினார். சில எம்.எல்.ஏ.க்கள் அர்த்தராத்திரியில் சுவரேறிக் குதித்தும் ரிசார்ட்டின் பின்பக்கமுள்ள முகத்துவார தண்ணீரில் குதித்தும் தப்பி ஓடிய சாகசக் காட்சிகளும் நடந்தன.

முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் தலைவரும் நடிகருமான கருணாஸ், திருவாடானை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றிபெற்றதால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் கூவத்தூரில் தங்கியிருந்தார்.

2020 பிப். 14-ல் சசிகலா கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹார ஜெயிலுக்குப் போனதும் கூவத்தூர் டிராமா முடிவுக்கு வந்தது, எடப்பாடி முதல்வர் ஆனார்.

Advertisment

ஃப்ளாஷ்பேக் ஓவர்.

அந்த கருணாஸ் கட்சியினர் முக்குலத்தோர் புலிப்படையின் மாஜி பொதுச்செயலாளர் பாண்டித்துரையின் வீட்டின் மீது கடந்த 08-ஆம் தேதி அதிகாலை சிலர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். சம்பவம் நடந்தபோது மதுரையில் இருந்த பாண்டித்துரை, பரமக்குடிக்கு ஓடோடி வந்து, டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், ""நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படையை 2013-ல் ஆரம்பித்தபோது, அதில் பொதுச்செயலாளராக இருந்தேன். திருவாடானை எம்.எல்.ஏ.வாக கூவத்தூரில் அவர் தங்கியிருந்தபோது, எனக்கும் அவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு…அன்றிலிருந்து எனக்கும் அவருக்கும், அவர் ஆட்களுக்குமிடையே பிரச்சினைதான். எடப்பாடியை மிரட்டுறதுக்காக கூவத்தூர் ரகசியம்னு சொல்லிட்டு கப்சிப்பாகிட்டாரு. இப்பக்கூட அபிராமம் பக்கத்துல இருக்கிற மணலூர் செந்தில் என்கிற ரௌடியை, என்னைக் கொலை செய்ய ஏற்பாடு பண்ணிருக்கார்.

Advertisment

திண்டுக்கல், சிவகங்கை, மலேசியான்னு ஏகப்பட்ட கோடிகளில் சொத்து சேர்த்துட்டாரு. அவரோட ஆட்களும் வசூல் வேட்டைல புகுந்து விளையாடுறாங்க. வர்ற தேர்தலில்கூட, இதே கூட்டணியில இருக்கலாமா? அ.தி.மு.க. ரெண்டா உடைஞ்சா எங்க போகலாம்னு பிளான் பண்ணிக் கிட்டிருக்கார்'' என பொளந்து கட்டினார் பாண்டித்துரை.

பாண்டித்துரையின் குற்றச்சாட்டு குறித்து நடிகர் கருணாஸிடம் நாம் கேட்டபோது, ""என்னோட தகுதிக்கு அவரின் புகாருக்கு பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை. இது சம்பந்தமா எங்க கட்சியின் செயலாளர் கமுதி முத்துராமலிங்கம் உங்களைத் தொடர்புகொண்டு விரிவாய் பேசுவார்'' என்றார்.

s

நம்மிடம் பேசிய முத்துராமலிங்கமோ, ""எங்க கட்சியில் இருந்தபோது பல சமூகவிரோத செயல்களில் பாண்டித்துரை ஈடுபட்டதால்தான் நீக்கப்பட்டார். இப்போது நடந்தது எல்லாமே செட்டப். சேதமானதாகச் சொல்லப்படும் கார், ஆட்டோ, டூவீலர் எல்லாமே எதிர்வீட்டில் நின்றவை. உண்மைக் குற்றவாளிகளைப் பிடித்தால் உண்மை வெளிவரும். இவர்தான் ஓ.பி.எஸ். பக்கம் கருணாஸை கொண்டுவருவதாகச் சொல்லி பெரிய அமவுண்ட் வாங்கினார்'' என்கிறார்.

என்ன நடந்தது? எதற்காக நடந்தது எனத் தெரிந்துகொள்ள நாம் பாண்டித்துரையை தொடர்புகொண்டோம்.

""திருவாடானை தொகுதியில் கருணாஸ் போட்டியிட்டப்ப ஏ.டி.எம்.கே.வுலயிருந்து கொடுத்த பெரிய தொகைபோக, எங்க சமுதாய பெரிய மனிதர்களிடம் லட்சக்கணக்குல வசூல் பண்ணினார். என்னோட மாமனார் வீட்டுப் பத்திரத்த அடமானம் வச்சு 40 லட்சம் கொடுத்தேன். அதுல 15 லட்சம் இன்னும் கொடுக்க வேண்டியிருக்கு.

இந்த நிலையில்தான் கூவத்தூர்ல தங்குறதுக்காக கருணாஸ் 5 கோடி ரூபாய் வாங்கிட்டார்னும் வேறு அசிங்கமாகவும் தொகுதிமக்கள் பேச ஆரம்பிச்சாங்க. இதப்பத்தி நான் கருணாஸ் கிட்ட, இது நம்ம சமுதாயத்துகே கேவலம். கூவத்தூரை விட்டு வெளில வாங்கன்னு சொன்னதும், கோபமாகிட்டாரு. எனக்கும் அவருக்குமிடையே வாக்குவாதமாகி கொஞ்சநாள் அமைதியாயிருந்தேன். 2017-ல் முக்குலத் தேவர் அமைப்பைத் தொடங்கினேன்'' என்றார்.

ss

எப்பிரிவையும் சாராத மறவர் சமுதாய இளைஞர்கள் சிலரோ, ""எலெக்ஷன் நெருங்குதுல்ல, இனிமே இதைவிட தடாலடி வேலைகளெல்லாம் நடக்கும். சீமானை சைலண்டாக்க நடிகை விஜயலட்சுமிங்கிற துருப்புச் சீட்டு எப்படி கிடைச்சிருச்சோ, அதுபோலத்தான் கருணாஸுக்கு பிரேக் போட பாண்டித்துரை கிடைச்சிருக்கார். இதன் பின்னணியில் ஒரு அமைச்சரும், எம்.எல்.ஏ.வும் உள்ளனர்'' என்கின்றனர்.

-பரமு

படங்கள் உதவி: பாலாஜி