2019-ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் கன்னியா குமரியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸின் வசந்தகுமார் 6,27,235 வாக்குகள் பெற்று எம்.பி. ஆனார். அவர் இரண்டே ஆண்டுகளில் கொரோ னா தொற்றால் உயிரிழந்தார். இதையடுத்து 2021-ல் நடந்த இடைத்தேர்தலில் வசந்தகுமாரின் மகனான விஜய்வசந்த் அதே கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 1,34,374 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
தற்போது 2024-ல் நடக்கவிருக்கும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதி மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதே தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே தொகுதியை 2009-ல் வென்ற தி.மு.க., 2004-ல் வென்ற மா.கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தத் தொகுதியை காங்கிரஸுக்கே ஒதுக்கிவிடாமல், தாங்கள் போட்டியிட ஒதுக்கவேண்டுமென அதன் தலைமையை வலியுறுத்தி வருகின்றனர்.
மாவட்ட தி.மு.க.வில் இருக்கும் கோஷ்டிகளில் ஒருவரான தி.மு.க. மாநில மகளிரணிச் செயலாளரான ஹெலன்டேவிட்சன், கனிமொழி எம்.பி. ஆசியுடன் சீட் வாங்கி இன்னொரு முறை எம்.பி. ஆகிவிடவேண்டுமென்று கனவில் மிதக்கிறார். தி.மு.க. தலைமையிடமும் நெருக்கமாக இருக்கும் ஹெலன்டேவிட்சன் ஏற்கனவே எம்.பி.யாக இருந்து மக்கள் சேவை செய்த அனுபவங்களும், பல திட்டங்களை இந்த மாவட்டத்துக்கு கொண்டுவந்து மக்களால் பாராட்டப்பட்ட பெருமையும் எனக்கு உள்ளது என்று உரிமைக்குரல் எழுப்பியிருக்கிறார்.
அதேபோல் கி.மா. பொருளாளரான கேட்சன் தி.மு.க.விலுள்ள எல்லா கோஷ்டி அணிகளி லும் சகஜமாக நெருங்கிப் பழகுபவர். இவர் ஒவ்வொரு தேர்தலிலும் பணம் கட்டி சீட் கேட்டு வருகிறார். அரசு ஒப்பந்தக்காரர் மட்டு மல்லாமல் பெரும் செல்வந்தரான இவர், சீட் தந்தால் மட்டும் போதும், தேர்தல் செலவுக்காக எனக்கு கட்சி நிதி தரத் தேவையில்லை நானே எல்லாத்தை யும் பார்த்துக்கொள்கிறேன் என தலைமை நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறார். ஆனால் மாவட்டத்தின் இரு தலைமைகளும் இவரை பரிந்துரை செய்யும் மனநிலையில் இல்லை.
முன்னாள் கி.மா.து.செ. ஜான் கிறிஸ்டோபர், மாஜி சுரேஷ்ராஜனின் தீவிர ஆதரவாளர். இவரும் எம்.பி. சீட்டை வாங்கி விட வேண்டுமென்ற முனைப்பில் இருக்கிறார். தொகுதி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டால் நான் சுட்டிக்காட்டுபவர்தான் வேட்பாளர், என தனது மகனை கணக்கில் வைத்து தனது ஆதரவாளர்களிடம் பேசிவருகிறார் மந்திரி மனோதங்கராஜ். மேயர் மகேஷோ, தலைமை விரும்புகிறபடி கட்சிக்கு உழைத்த, மக்களோடு மக்களாகப் பழகும் ஒருவரை தேர்வுசெய்து அவரை வெற்றிபெற வைப்பது நமது கடமை என்கிறார் தனது ஆதரவாளர்களிடம்.
காங்கிரசை பொறுத்தவரை சிட்டிங் எம்.பி.யாக இருக்கும் விஜய்வசந்துக்குதான் மீண்டும் சீட். இவரை கட்சிப் பாகுபாடின்றி யாரும், எந்த நேரத்திலும் அணுகலாம். மாற்றுக் கட்சியினர் அரசியலுக்காக அதைச் செய்ய வில்லை, இதைச் செய்யவில்லை என்று கூறுவார்களே தவிர அனைத்துத் தரப்பினரும் தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே அவரைக் கருதுகிறார்கள்.
இந்த மூன்றாண்டுக் காலத்தில் ஆண்டு தோறும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாமை நடத்தி பலருக்கு வேலை கிடைக்கச் செய்திருக்கிறார். தன்னு டைய பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தில் ஒரு பைசாகூட எடுத்துக்கொள்ளாமல் ஏழைப் பெண்களின் திருமணத்துக்கும் கல்விக்கும் அதனைச் செலவு செய்துவருகிறார்.
தொடர்ந்து 3 முறை குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் பிரின்ஸுக்கு அடுத்த முறை வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் தலைமை இப்போதே உறுதியாகக் கூறி விட்டதால் எம்.பி. சீட் கேட்டு நெருக்கடி கொடுத்துவருகிறார். அவருடைய ஆதரவாளர் களோ அண்ணனுக்கு எம்.பி. சீட் கொடுக்க வில்லை என்றால் எம்.பி. கனவோடு பா.ஜ.க.வில் சேர்ந்து விளவங்கோடு விஜயதரணிபோல் இவரும் போய்விடுவார் என மிரட்டுகிறார்கள்.
அகில இந்திய அளவில் இளைஞரணிக்கு ஒதுக்கப்படும் சீட்டில் கன்னியாகுமரியை எனக்குத் தாருங்கள் என்று டெல்லி தலைமையை வலியுறுத்திவருகிறார் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப் பாளர் லாரன்ஸ். கி.மா. தலைவர் உதயம், மே.மா. தலைவர் டாக்டர் பினுலால், மாநில காமராஜர் நற்பணி மன்றத் தலைவரும் முன்னாள் காங்கிரஸ் மா.தலைவருமான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் எம்.பி. கனவில் இருக்கிறார்கள்.
2004-ல் இதே கூட்டணியில் பேச்சுவார்த்தையின் கடைசி நேரத்தில் கலைஞரால் மா.கம்யூ னிஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்ட இந்தத் தொகுதியை தற்போது மீண்டும் கேட்டு கம்யூனிஸ்ட் நெருக்கடி கொடுத்துவருகிறது. சென்னையில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் தி.மு.க.வினர் தொகுதியை காங்கிரசுக்கு கொடுக்கக் கூறியிருக்கும் நிலை யில் எப்படியாவது முதல்வர் ஸ்டாலினிடம் பேசி தங்களுக்கு வாங்கிவிட வேண்டுமென்று தோழர்கள் முன்னாள் எம்.பி. பெல்லார்மின், மா.செ. செல்ல சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. லீமா ரோஸ் போன்றோர் முயற்சியிலிருக்கிறார்கள். தொகுதி கிடைத்தால் போட்டியிடும் ஆசையும் இவர்களுக்கு இருக்கிறது.
பா.ஜ.க.வைப் பொறுத்த வரை 11ஆவது முறையாக சீட் கேட்டு தலைமையைச் சுற்றி வரும் பொன்.ராதாகிருஷ் ணன், எனக்கு சிக்னல் கிடைத்துவிட்டது அதனால் களப்பணியில் இறங்கியிருக் கிறேன் என கூறி வருகிறார். பா.ஜ.க. கொள்கைப்படி 70 வயது கடந்த யாருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்பதால், பொன்னாருக்கு சீட் இல்லை. அண்ணாமலை என்னை டிக் செய்து எனக்கு நம்பிக்கை தந்திருக்கிறார் என கூறும் முன்னாள் ராணுவ வீரரும் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலருமான ஜவான் ஐயப்பனும் களத்திலிருக்கிறார்.
முன்னாள் நகர்மன்ற தலைவியும் மாவட்ட மக்களுக்கு நன்கு அறிமுகமானவரும் எளிமையானவருமான மீனாதேவ், மாவட்ட தலைவர் தர்மராஜ், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனின் மருமகள் திவ்யா, நான்தான் அடுத்த எம்.பி. என்று பா.ஜ.க.வில் திடீரென முளைத்து போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தும் தங்கசோபனா என பலரும் கனவிலிருக்கிறார்கள். இதில் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட் டால் மேலிட செல்வாக்கை வைத்து தன்னுடைய உறவுக்கார பெண்ணான மீனாதேவுக்கு சீட்டை வாங்கித் தருவதாக, அவருக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார் பொன்னார்.
அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் பா.ஜ.க.வுக்காக அடைத்த கதவை மற்ற கட்சிகளுக்கு திறந்து வைத்தும் இன்னும் கூட்டணியில் யார் வரவும் உறுதியாகாத கடுப்பில் இருக்கிறார்கள் ர.ர.க்கள்.
இந்த நிலையில் தளவாய் சுந்தரம் தன்னிச்சையாகவே கன்னியாகுமரி தொகுதிக்கு தி.மு.க.விலிருந்து வந்த பசிலியான் நசரேத்தை வேட்பாளராக அறிவித்திருக்கிறார். இதற்கு எம்.பி. கனவோடு இருந்த முன்னாள் மா.செ. அசோகன் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததோடு "கன்னியாகுமரியில் நாடாரைத் தவிர வேறு யாரும் ஜெயிக்கமுடியாது. அப்படி இருக்கையில் தளவாய்சுந்தரம் மீனவரை வேட்பாளராக அறிவித்திருக்கிறார். மீனவர்கள் ஓட்டைப் பிரித்து பா.ஜ.க.வை ஜெயிக்க வைக்கதான் தளவாய்சுந்தரம் பா.ஜ.க.வுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு இந்த வேலையை மேற்கொண்டிருக்கிறார்'' என குற்றம்சாட்டியுள்ளார்.
2014-ல் ஜெயலலிதா நிறுத்தி தோல்வியடைந்த மே.மா.செ. ஜான்தங்கம், எக்ஸ் மா.செ. சிவசெல்வராஜன் இருவரும் பலமான கூட்டணி அமைந் தால் எப்படியாவது சீட் வாங்கிவிடவேண்டுமென்று கங்கணம் கட்டியிருக் கிறார்கள்.
இப்படி கட்சிவாரியாக எம்.பி. சீட்டுக்கு அடிபிடி நடப்பதால், கன்னியாகுமரி தொகுதியே எலெக்சன் வார்ம்அப் மூடில் இருக் கிறது.