சேலம் மணியனூரில் இயங்கிவரும் அம்மா உணவகத்தில், மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த 12 பெண்கள், இரண்டு ஷிப்டுகளில் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் பெண்களில் 6 பேரை மட்டும் டிஸ்மிஸ் செய்து விடுவதாக சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலக்குழுத் தலைவரான தி.மு.க.வைச் சேர்ந்த அசோகன், மிரட்டுகிறார் எனப் புகார் கூறியதோடு, தங்களுக்கு பணி உத்தரவாதம் வழங்கக் கோரி கடந்த ஜனவரி 11ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடமும் புகாரளித்தனர். இதற்கு பதிலடியாக, மணியனூர் அம்மா உணவகத்தில் கடந்த 2022ஆம் ஆண்டில் 19 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனிடம் மண்டலக்குழுத் தலைவர் அசோகனும் ஒரு புகாரைத் தட்டிவிட்டார்.

Advertisment

ss

இது தொடர்பாக மணியனூர் அம்மா உணவகப் பணியாளர்கள் உமா, லதா, ஆனந்தி, விமலா ஆகியோரிடம் விசாரித்தோம். "மணியனூர் அம்மா உணவகத்தில் போதிய வருவாய் கிடைக்கவில்லை என்று கூறி, மண்டலக்குழுத் தலைவர் அசோகன் இங்கு பணியாற்றி வருவோரில் 6 பேரை மட்டும் டிஸ்மிஸ் செய்வதாகக் கூறினார். நாங்கள் இந்த வேலையை நம்பித்தான் பிழைத்து வருகிறோம். எங்களை வேலையை விட்டுத் துரத்தினால் எங்கள் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடும் என்று மண்டலக்குழுத் தலைவர் அசோகனிடம் அழுது கெஞ்சினோம். ஆனால் அவரோ, "சம்பளமே கொடுக்கவில்லை என்றால் ஏன் வேலை செய்கிறீர்கள்?' என்று கேலி செய்கிறார். அம்மா உணவகத்துக்கு மளிகைப் பொருட்கள், 12 பேருக்கான சம்பளம், பால், காஸ் சிலிண்டர் செலவுகளைக் கணக்கிட்டால் ஆண்டுக்கு 22 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இதில் நாங்கள் எப்படி 19 லட்சம் ரூபாய் முறைகேடு செய்திருக்க முடியும்?'' என்கிறார்கள் அம்மா உணவகப் பணியாளர்கள்.

இது ஒருபுறம் இருக்க, அம்மா உணவகப் பணியாளர்களுக்கு கழிப்பறை வசதி கூட செய்து தரப்படாதது நமது விசாரணையில் தெரிய வந்தது. ஏற்கெனவே பயன்பாட்டிலிருந்த கழிப்பறை மூடப்பட்டிருப்பதால், இயற்கை உபாதைகளைக் கழிக்க, அரை கி.மீ. தூரத்தில் உள்ள பொதுக்கழிப்பறைக் குச் செல்ல வேண்டிய அவலம் ஏற்பட் டுள்ளது.

கொண்டலாம் பட்டி மண்டலக்குழுத் தலைவர் அசோகனிடம் விசாரிக்கையில், ''மணியனூர் அம்மா உணவகத்தில் 19 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக மேயரிடம் புகார் அளித்து இருந்தேன். அதற்குப் போட்டியாக எனக்கு எதிராக சிலர் அவர்களைத் தூண்டிவிட்டுள்ளனர். மணியனூர் மட்டுமின்றி, சேலம் மாநகராட்சியில் இயங்கும் அனைத்து அம்மா உணவகங்களிலும் ஊழியர்கள், மளிகைப்பொருள், சமையல் எண்ணெய் எனப் பொருளாக எடுத்துச்சென்று விடுகின்றனர். அந்த வகையில் கடந்த ஓராண்டில் மட்டும் 35 லட்சம் ரூபாய்க்கு மேலாக முறைகேடு நடந்துள்ளது. வருமானமே இல்லாத அம்மா உணவகத்தில் 6 பேர் பணியாற்றினாலே போதும் என்றும், வேலையை விட்டு நீக்கப்படும் பணியாளர்களுக்கு மாநக ராட்சியில் இதர பிரிவுகளில் வேலை வழங்கப்படும் என்றும் சொன்னது உண்மைதான். அம்மா உணவகங்களை லாப நோக்கத்துடன் இயக்கும் திட்டமும் உள்ளது.'' என்றார்.

salem

Advertisment

கொண்டலாம்பட்டி மண்டல உதவி ஆணையர் ரமேஷ்பாபுவிடம் கேட்டபோது, "மணியனூர் அம்மா உணவகம் நல்லா போய்க்கிட்டு இருக்குது. அங்கெல்லாம் முறைகேடு நடக்கல.'' எனக் கூறினார். மணியனூர் அம்மா உணவகப் பணியாளர்கள் பிரச்சனைக்குப் பின்னணி யில், கந்து வட்டி தொழிலில் ஈடுபட்டு வரும் அப்பகுதியைச் சேர்ந்த முருகக் கடவுள் பெயர் கொண்ட தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கும், அம்மா உணவகத்தில் பணியாற்றும் பெண் ஒருவருக்குமான நெருக்கமான தொடர்பையும் ஒரு காரணமாகக் காதைக் கடிக் கிறார்கள். அந்த பெண் மூலமாக, மணியனூர், நெத்திமேடு பகுதிகளில் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் கந்துவட்டிக்குக் கடன் கொடுத்துள்ளார்.

ss

கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால், பண வசூல் தடைப்பட, தி.மு.க. பிரமுகரின் அண்ணன்களுக்கும், அப்பெண்ணுக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட, அவரை வேலையைவிட்டுத் தூக்க, ஆளுங்கட்சிப் புள்ளி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். இதைத் தெரிந்துகொண்ட தி.மு.க. பிரமுகர், அனைத்துப் பணியாளர்களையும் தூண்டிவிட்டு போராட்டம் நடத்தவைத்ததாகக் கூறுகிறார்கள் அம்மா உணவக ஊழியர்கள். சர்ச்சைக்குள்ளான அப்பெண் ஊழியரிடம் கேட்ட போது, "சார்... எனக்கும், அந்த தி.மு.க. பிரமுகருக்கு மான தொடர்பு ஊரறிந்த விஷயம். அதை வைத்துக்கொண்டு என்னையும், மற்றவர்களையும் வேலையை விட்டு நிறுத்த சிலர் முயற்சிப்பது ஏற்க முடியாது'' என்றார் கூலாக.

மணியனூர் கந்துவட்டி தி.மு.க. பிரமுகரின் சபலத்தால், தனது பெயரை தெருவுக்கு இழுத்து விட்டார்களே என நொந்துபோன மண்டலக் குழுத் தலைவர் அசோகன், இதுகுறித்து சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ.விடம் புகார் கூறியுள்ளார். இவ்விவகாரம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அறிவாலயத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். தனி நபரின் சபலம் மற்றும் கந்துவட்டிப் பிரச்சனையால் மணியனூர் அம்மா உணவகத்தில் அன்றாடம் பசியாறும் ஏழை களின் வயிற்றில் அடிக்காமல் இருந்தால் சரி!