மதுரை உசிலம்பட்டி அருகே கரையாம் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர். விவசாயி யான இவர் கடந்த 1988-ல் தன்னுடைய உறவினரான தவமணி என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து, கரையாம்பட்டி தோட்டத்தின் ஒரு பகுதியை வாங்கி இருக்கிறார். தற்போது தோட்டத்திலேயே வீடு அமைத்து குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். நாளடைவில் தவமணி இறந்துவிட, மதுரை நாகமலை புதுக்கோட்டையில் வசித்துவரும் தவமணி மகன் அருள் சிவக்குமார், தன்னுடைய தந்தையை ஏமாற்றி நிலத்தை எழுதி வாங்கியுள்ளார்கள் என்று அவர் மீது உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதோடு, தன்னுடைய உறவினரும் செக்கானூரணி தி.மு.க. பிரமுகரான ‘கொடி சந்திரசேகர்’ மற்றும் 40-க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் ஜே.சி.பி.யை வைத்து, ராமரின் வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டார்.
பாதிக்கப்பட்ட ராமர் நம்மிடம், "என் தாய் மாமா மகன்தான் அருள்சிவக்குமார். அவர் தரப்புக்குச் சொந்தமான சொத்தைக் கிரையம் பேசி ஊர்ப்பிரமுகர்கள் அறிய, 50 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினோம். முறையாக பத்திரப் பதிவு நடக்க இருந்த நிலையில், பதிவுசெய்து கொடுக்க வேண்டிய மாமா தவமணி இறந்துவிட, அவரது மகன் அருள் சிவக்குமார் மைனராக இருந்ததால் நாங்களும் விட்டுவிட்டோம். இந்த நிலையில் அருள் சிவக்குமார் வீட்டை அபகரிக்க முயன்றார். இதற்காக நீதிமன்றத்தில் வழக்கும் போட்டார். அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து மேல் முறையீடாக உயர்நீதிமன்றம் சென்றார். பிறகு, அதை வாபஸும் வாங்கிக்கொண்டார்.
இந்த நிலையில்தான் தற்போது அருள் சிவகுமார், வட்டித் தொழில் செய்யும் கொடி சந்திரசேகர் மூலம் எங்களை மிரட்டத் தொடங்கியதோடு, இப்போது எங்கள் வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டார். எங்களை ஊரைவிட்டே ஓடச் சொல்கிறார்கள். இல்லாவிட் டால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டு கிறர்கள். இது குறித்து காவல்துறை மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. அவமானத்தில் என் மனைவி தூக்குபோட்டுச் சாகப்போனாள். அவளைக் காப்பாற்றினேன். இப்போது நடுத்தெருவில் நிற்கிறோம்''’என்றார் கண்ணீரோடு.
இது குறித்து சம்பந்தப்பட்ட அருள் சிவக்குமாரிடம் கேட்டபோது... "அந்த இடம் என் தந்தை தவமணி பெயரில்தான் இருக்கிறது. வாரிசுப்படி அது என் இடம். அவர்கள்தான் அத்துமீறி குடியிருந்து வருகிறார்கள்'' என்று முடித்துக்கொண்டார்.
இதேபோல் இன்னொரு சம்பவம்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள எல்லீஸ் நகரில், ரூ.30 கோடி மதிப்புள்ள 10 செண்ட் இடத்தில், இரண்டு வீடும், ரோட்டின் மேல் இரண்டு கடைகளும் வைத்திருந்த ராஜு, இறந்துவிட, அவரது மனைவி பத்மாவதி, தங்கள் வீடுகளில் ஒன்றில் குடியிருந்து கொண்டு மற்றொரு வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். இந்த சூழலில் பணத் தேவைக்காக தன் வீட்டில் குடியிருந்தவரின் சிபாரிசில் காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. இராஜேந்திரனிடம் வட்டிக்கு 1 லட்ச ரூபாய் வாங்க, அதற்கு அடமானமாக பல கோடி பெறுமான சொத்தை எழுதி வாங்கிக்கொண்டனர்.
அதோடு, சம்பந்தப்பட்ட பத்மாவதி தங்கியுள்ள வீட்டைக் காலி பண்ணாமல் வாடகையும் கொடுக்காமல் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துவிட்டார்கள். வழக்கு இருக்கும்போதே, பத்மாவதி குடியிருந்த மற்றொரு வீட்டையும் அபகரித்து, அவரையும் வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டனர். இது கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த அராஜகம். இது தொடர்பாக பத்மாவதி தரப்பு, மதுரை கமிஷனரிடம் புகார் கொடுத்தும், சம்பந்தப்பட்ட நபர் அன்றைய ஆளும்கட்சி மேயரான ராஜன் செல்லப்பாவின் சம்பந்தி என்பதால் புகார் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
தற்போது தி.மு.க. ஆட்சிகு வந்ததும், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பத்மாவதி, தங்களுக்கு சொந்தமான இடத்தருகே தர்ணாவில் ஈடுபட, அவரை நாம் சந்தித்தோம். நடந்த அத்தனையையும் கண்ணீரோடு விவரித்த அவர்,” "நான் கடன் வாங்கிய ஒரு லட்சத்திற்கு 30 கோடி ரூபாய் சொத்தை அபகரித்து என்னை நடுத்தெருவில் நிற்கவைத்துவிட்டார்கள். எனக்கு நீதி கிடைக்காவிட்டால், குழந்தைகளோடு தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வேன்''’என்று பகீரூட்டினார்.
இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந் திரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ’"எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. என் மச்சினன் தொடர்ந்த வழக்கில் அந்த அம்மா ஆஜராகாத தால், அந்த இடத்தின் ஒரு பகுதியை கிரையம் செய்து கொள்ளும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் துள்ளார். வழக்கு நிலுவையில் உள்ளதால் எதுவும் சொல்வதற்கு இல்லை''’என்று முடித்துக்கொண்டார்.
தென்மாவட்டங்களில் வட்டி பிஸ்னசில் பலரும் கொடிகட்டிப் பறப்பதாகச் சொல்கிறார்கள். அவர்களின் கொடி, ஏழைகளின் கண்ணீரில் வேரூன்றிப் பறந்துகொண்டிருக்கிறது.
என்னதான் கந்துவட்டி முதலைகளுக்கு எதிரான சட்டங்கள் இருந்தாலும், வி.ஐ.பி.க்கள் மற்றும் ஆளும்கட்சிப் பிரமுகர்களின் மூலம் அவை ஏழைகளைக் கொடூரமாகத் துரத்திக்கொண்டுதான் இருக்கின்றது. கந்துவட்டி தாதாக்களை யார் தட்டிக்கேட்பது?