கொஞ்சநாள் அடங்கியிருந்த கன்னட மொழி வெறியரான வாட்டாள் நாகராஜ், மீண்டும் தமிழர்களுக்கு எதிரான வன்மத்தை, தமிழக எல்லைக்குள்ளேயே வந்து காட்டத் தொடங்கியிருக்கிறார். இதன்மூலம் கர்நாடகாவில் கன்னடர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் மோதலை உருவாக்க முயன்றிருக்கிறார் அவர். இது இங்குள்ள தமிழ் உணர்வாளர் களையும் தமிழக மக்களையும் கொதிப்படைய வைத்திருக்கிறது.

walternagaraj

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தையடுத்த தாளவாடி மலைப்பகுதி, தமிழக- கர்நாடக எல்லையில் அமைந்திருக்கிறது. இந்த இரு மாநிலங்களையும் இணைக்கும் ராமபுரம் பகுதியில், ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றியம் வரவேற்பு’ என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. அங்கே கடந்த 10-ந் தேதி மாலை, கர்நாடகாவைச் சேர்ந்த சாம்ராஜ்நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், "கன்னட சலுவாலியா' கட்சித் தலைவருமான வாட்டாள் நாகராஜ் தலைமையில் , 40க்கும் மேற்பட்ட அவரது கட்சியினர் ஆவேசமாக வந்தனர்.

தமிழ் எழுத்துக்களைக் கொண்ட ஸ்டிக்கர்களை கிழித்தும், தமிழில் எழுதப்பட்டிருந்த மற்றொரு பெயர்ப் பலகையை அடித்து நொறுக்கியும் அராஜக ஆட்டம் போட்டனர். மேலும் மீதமிருந்த தமிழ் எழுத்துக்களை கீழே உடைத்துப்போட்டு, காலால் மிதித்து வெறியாட்டம் ஆடினர். அதோடு நிறுத்தாமல், கன்னட மொழியில் தமிழர்களுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியதோடு, தமிழக எல்லைக்குள் இருக்கும் தாளவாடியை, கர்நாடகாவுக்குச் சொந்தமானது என்றும், அது .தமிழ்நாட்டுக்குச் சொந்தமில்லை.. என்றும் கூச்சல் போட்டனர். இதை அந்தப் பகுதியில் இருந்த தமிழகக் காவல்துறையினர் கண்டுகொள்ள வில்லையாம்.

Advertisment

walternagaraj

இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்திய கன்னட வாட்டாள் நாகராஜ், மைசூரிலிருந்து கன்னட மீடியாக்களையும் தன்னுடன் அழைத்து வந்து, தமிழ்ப் பெயர் பலகைகளை சேதப்படுத்தும் காட்சியை படம் பிடிக்கச் செய்தார். பின்னர் அவற்றைக் கன்னட சேனல்களில் ஒளிபரப்ப வைத்துள்ளார். இதன்மூலம் அங்கே தமிழர் விரோதப் போக்கைத் தூண்டிவிடுவதோடு, தமிழர்களையும் கொதிநிலைக்கு ஆளாக்கி வருகிறார்.

அதிரடிப்படை, வனத்துறை, வருவாய்த் துறை, காடு வளர்ப்பு, தோட்டக்கலைத் துறை, காவல்துறை என இரு மாநிலத்தையும் சேர்ந்த அரசுத்துறையும், அதன் அதிகாரிகளும் இப்போது நல்லிணக்கத்தோடு இருக்கிறார்கள். அதேபோல் கர்நாடகாவில் வாழும் கன்னட மக்களும் தமிழர்களும் ஒன்றுக்குள் ஒன்றாக நட்புறவோடு வாழ்ந்துவருகின்றனர். இவர்களுக்கிடையில் இன பேதமோ, எல்லைப் பிரச்சினையோ எதுவும் இல்லாமல் அமைதி நிலவிவரும் நிலையில்... கன்னட வாட்டாள் நாகராஜ் குரூப் திட்டமிட்டே இப்படியொரு தாக்குதலை நடத்தி, அதன்மூலமாக இனவெறிக் கலவரத்தை அரங்கேற்ற முயற்சித்து வருகிறது.

Advertisment

இது குறித்து விசாரணை செய்த தாளவாடி போலீசார், வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பை சேர்ந்த 20 பேர் மீது தமிழக அரசின் பொதுச்சொத்தை தேதப்படுத்தியதாக வழக்கைப் பதிவு செய்தனர்.

walternagaraj

இதற்கிடையே இந்த பரபரப்பு ஓய்வதற்குள், மீண்டும் 17-ந் தேதி மாலை, தாளவாடியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில், இரு மாநில எல்லையில் உள்ள எத்திக்கட்டையில், தமிழக அரசின் ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றிய வரவேற்புப் பலகையையும், நெடுஞ் சாலைத் துறையின் ’எல்லை முடிவு’என்னும் பலகையையும் சில மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இது கொந்தளிப்பை அதிகப்படுத்தி யிருக்கிறது. இதுவும் வாட்டாள் நாகராஜின் கும்பலின் கைங்கர் யம்தான் என்கிறார்கள் ஏரியாவாசிகள்.

இதுகுறித்துக் கொதிப்போடு நம்மிடம் பேசிய பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் செயலாளர் கன.குறிஞ்சி, ""தமிழ்நாடு மாநில அரசான முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட வர்கள், இது குறித்து எந்தவித கண்டனத் தையும் தெரிவிக்காமல் இருக்கிறார்கள். அதற்குக் காரணம், கர்நாடகாவில் பா.ஜ.க. அரசு இருப்பதால்தான். வாட்டாள் நாகராஜ் தொடர்ந்து தமிழர் விரோதப் போக்கில் ஈடுபடும் ஒரு இனவெறியர், இரு தேசிய இனங்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டி, தேசவிரோத செயலில் இறங்கிய இவரை கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்து தண்டனை கொடுக்கவேண்டும். வன்முறை கும்பலால் சேதப்படுத்தப் பட்ட தமிழ் பெயர்ப் பலகைகள் அதே இடத்தில் நிறுவப்பட வேண்டும்'' என்கிறார் அழுத்தமாக.

வாட்டாள் நாகராஜ் குரூப்பை கண்டித்து தாளவாடி, ஈரோடு, சத்தியமங்கலம், கோபி பகுதிகளில் அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றன. தமிழர்களைத்தொடர்ந்து தீண்டி வரும் அந்த மொழிவெறிக் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.