திருப்பூரில் நடந்த கவிஞர் வைரமுத்துவின் "தமிழாற்றுப்படை' (அப்துல்ரகுமான்) அரங்கேற்றம் ராம்ராஜ் காட்டன் நிறுவனங்களின் உரிமையாளர் கே.ஆர்.நாகராஜன் தலைமையில்தான் நடந்தது.
""கவிஞர் மட்டுமா கட்டுரையாற்றுவார்? இதோ நானும்கூட ஒரு கட்டுரையைத் தயார் செய்துகொண்டு வந்திருக்கிறேன்'' என்ற தெம்பூட்டும் முன்னுரையோடு தனது பளிச்சிடும் வெண்மை உரையைத் தொடங்கினார் ராம்ராஜ் வேட்டி கே.ஆர்.என்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தமிழை இந்த தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் கவிஞர் எடுத்துச் சென்றார். இதேபோல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆடை என்று ஒன்று வந்தால் முதலில் வேட்டிதான் வந்திருக்கவேண்டும். இந்த வேட்டியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லக்கூடிய ஒரே காரணத்திற்காகத்தான் என்னை தலைமையாகப் போட்டிருப்பார் என்று நினைக்கிறேன். தமிழ் தமிழனின் உயிர் மூச்சு. வேட்டி தமிழனின் அடையாளம். இந்த இரண்டும்தான் இங்கு இணைத்து வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
ஒருவருக்கு மட்டுமே ஞானம் என்ற பிரச்சனையில் உருவானது ஆறுபடை.
தமிழ் இலக்கியத்திலும், இலக்கணத்திலும் முன்னோடிகளாக விளங்கும் 3 ஆண்டுகள் பேராளுமைகளான தமிழாற்றுப்படை என்ற வரிசையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ஆய்வுக் கட்டுரை எழுதி, கடந்த 20 மாதங்களாக, இருபது ஆளுமைகளைப் பற்றி அரங்கேற்றியுள்ளார். இன்று 21-வது ஆளுமையாக கவிக்கோ அப்துல் ரகுமான் படைப்புகளை ஆய்வு செய்து அரங்கேற்றும் நேரம் இது. தன் காலத்தில் வாழ்ந்த ஒரு வரலாற்று நாயகன் கவிக்கோ அவர்களுக்கு தமிழாற்றுப்படை மூலம் தன் சலவைச் சொற்களால் ஒரு தாஜ்மஹால் கட்ட வருகிறார் கவிப்பேரரசு அவர்கள்.
மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சரவணன்
மஞ்சள் பூசிக் குளித்த பெண்களை பார்க்கின்ற கடைசி தலைமுறை இது. மயிலிறகு குட்டிப் போடுமென்று புத்தகத்திலே வைத்துவிட்டு ஒவ்வொரு காலையும் அதனை திறந்து பார்த்த கடைசி தலைமுறை வாழ்கின்ற காலம் இது. நவராத்திரி அன்று முதல்நாள் முளைப்பாரி ஓட்டில் புதைத்த நவதானியத்தை ஒன்பதாம் நாள் பறித்துச் சென்று புத்தகத்திலே வைத்துவிட்டு சரஸ்வதி கல்வி கொடுப்பாள் என்று நம்பிக்கொண்டிருந்த கடைசி தலைமுறை இது. மரணச் செய்தியை தந்தியிலே கேட்ட தலைமுறை இது. காதல் கடிதம் எழுதி காதலித்த கடைசி தலைமுறை இது. இந்த தலைமுறைக்கு சரியான செய்திகள் சொல்ல வேண்டும். இது இன்றைய தேவைகள்.
இன்னும் 50 ஆண்டுகளில் வயோதிக சமுதாயம் அதிகம் இருக்கின்ற தலைமுறையாக நாம் இருப்போம். இவற்றையெல்லாம் தாண்டி இன்னும் 50 ஆண்டுகளில் கலாச்சார சீரழிவு கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்கியவர்களாக நாம் இருப்போம். ஆகவே இதனை மையமாகக்கொண்டுதான் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மிகப்பெரிய தமிழாற்றுப் படையை அடுத்த தலைமுறைக்கு தயார்படுத்திக்கொண்டிருக்கிறார்.
தலைமுறை இந்த தமிழாற்றுப்படையை படிக்கும்போது, தமிழுக்கு இத்தனை பெருமக்கள் சிறப்பு செய்திருக்கிறார்கள் என்பதை உணரக்கூடிய நிலை ஏற்படும்.
மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் கனிமொழி
இது கவிக்கோவுக்கான ஒரு மாநாடு. கவிஞருக்கும், தலைவர் கலைஞருக்கும், கவிக்கோவுக்கும் ஒரு முக்கோண காதல் கதை உண்டு. தலைவர் கலைஞர் அவர்கள் இரண்டு பேரையும் தன் வாழ்நாளெல்லாம் நேசித்தார். நெருக்கமாக உணர்ந்தார். கலைஞர் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரோடு நின்ற இரண்டு கவிஞர்கள் இவர்கள்தான். கவிஞரைப் பார்க்கும்போது எங்க அம்மா சொல்லக்கூடியது, "உங்களை பார்த்தாலே தலைவர் முகத்தில் ஒரு தனிப் புன்னகைதான்' என்று.
அதேபோல கவிப்பேரரசு மீது என் அம்மாவுக்கே கொஞ்சம் பொறாமை உண்டு. என்னிடம் எப்போது கவிஞரைப் பார்த்தாலும், என் அம்மா பொறாமையாய் என்ன சொல்வாரென்றால் "தலைவர் என்ன கோபமாய் இருந்தாலும்... கவிஞரைப் பார்த்ததும் புன்னகை கொண்டுவிடுகிறாரே..?' என சொல்வதுண்டு. அது உண்மைதான்.
அதிகாலையில் தலைவர் கொதிநிலையில் இருப்பார். அவர் கொடுத்த வேலையை உதவியாளர்கள் சரியாய் செய்திருக்கமாட்டார்கள். அவரது உதவியாளர்கள் மேலே உள்ள தலைவர் அறைக்கு போவதற்கு தயங்கி நிற்பார்கள். பால் கொதிநிலையில் பொங்கி வழியும் போது நாம் என்ன செய்வோம்.? கரண்டியோ, தண்ணீரையோ ஊற்றி கலக்குவோம் இல்லையா..? அதுபோல தலைவரை பார்க்கத் தயங்கி நிற்கும் உதவியாளர்கள்... கவிப்பேரரசு வந்துவிட்டால் போதும், உடனே தலைவரைப் பார்க்க மேலே அனுப்பிவிடுவார்கள். ஏன் என்றால் பொங்கிக் கொண்டிருக்கும் பாலில் கரண்டியாகவோ, தண்ணீராகவோ கவிப்பேரரசு மாறி பாலை சமநிலைப்படுத்திவிடுவார் என்பது அவர்களுக்கு தெரியும். அதன்பின்னரே உதவியாளர்கள் தலைவரைப் பார்க்க மேலேபோவார்கள்'' என்னும்போதே வைரமுத்து மெல்ல உடைந்து கொண்டிருந்தார்.
மேலும் பேசிய கனிமொழி... ""உண்மையை சொல்வதென்றால், தலைவர் பெற்றெடுத்த பிள்ளைகளை விட அதிகமான உறவுகொண்டிருந்தது கவிப்பேரரசுவிடம்தான்.'' (சொல்லச் சொல்ல கைகுட்டைக்குள் முகம் புதைத்து கண்ணீரை கவிதையாக்கிக்கொண்டிருந்தார் வைரமுத்து.)
-தொகுப்பு: அருள்குமார்