காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கு எதிராக சொந்தக் கட்சியை சேர்ந்தவர்களே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் நெல்லை, கோவை மேயர்கள் தொடர்ச்சியாக ராஜினாமா செய்ய, அந்த வரிசையில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயரும் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தி.மு.க. உள்ளிட்ட 30 கவுன்சிலர்கள், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜுக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்கள். 10 தி.மு.க. கவுன்சிலர்கள் நிலைக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேயரை மாற்றக் கூறி மாவட்டச் செயலாளரான சுந்தரிடம் 6 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. துறை அமைச்சரான கே.என்.நேரு முன்னிலையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்த உடன்பாடும் எட்டவில்லை. இந்த நிலையில் மேயருக்கு எதிராக வரும் ஜூலை 29-ஆம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர உள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் 32 வார்டுகளில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெற்றிபெற்றனர். மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மா.செ. ஆதரவுடன் மகாலட்சுமி யுவராஜ் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராகத் தேர்வுசெய்யப்பட்டார்.
தற்போது மகாலட்சுமிக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் பற்றி விசாரித்தோம். 18-வது வார்டு கவுன்சிலரான மல்லிகாவின் கணவர் ராமகிருஷ்ணன், “"மேயரா பதவி யேற்கிறதுக்கு முன்னாடி இருந்தமாதிரி இல்ல, ரெண்டு வருஷம் முடிஞ்சும் எந்த அடிப்படை வசதியும் செய்யல. மொத்தத்துல மாநகராட்சி நிர்வாகமே சரியில்லை''’எனப் பொங்கினார்.
இவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணைமேயர் குமாரகுருவிடம் பேசினோம். "மகாலட்சுமி மேயரா பதவியேற்றதிலிருந்து யாரையும் மதிப்பதில்லை, கௌரவக் குறைவா நடத்துறாங்க. என்னோட வார்டு உட்பட 22 தி.மு.க. கவுன்சிலர்கள் வார்டுகளிலும் அடிப்படை வசதியே செய்து தரல''’என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
"மேயர் மகாலட்சுமியை நீக்கிவிட்டு, அந்த பதவிக்கு உங்கள் சித்தி சாந்தி சீனிவாசனை பதவியில் அமர்த்த நீங்கள்தான் தூண்டுகிறீர்கள் என்று கூறுகிறார்களே?''’என்ற கேள்வியை 48-வது வார்டு கவுன்சிலர் கார்த்திக்கிடம் கேட்டோம். "வரிப் பதிவேடு, எல்.ஈ.டி. விளக்கு முறைகேடு ஆரம்பிச்சு பில்டிங், வணிக வளாக அங்கீகாரத்துக்கு 40000 வசூல் செய்றாங்க. ஒரு கோடியே 82 லட்சம் வரி தள்ளுபடில முறைகேடு, மேயர் கணவர் யுவராஜுக்கு வேண்டப்பட்ட வேல்முருகன் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் குடிநீர் குழாய் இணைப்புப் பணியை எடுத்துச்செய்கிறார், பிரகாஷ், மேயர் பிஸி என்ற பெயரில் வசூல் செய்கிறார். கிரி, கட்டட மறுசீரமைப்பு என்ற பெயரில் 60 லட்சத்துல பணி செய்கிறார், மேயர் கணவர் யுவராஜ் தம்பி, எம்.எஸ் பாண்டியன், தசரதன் இவர்களுக்கெல்லாம் மாநகராட்சியில் என்ன வேலை? இவங்க வசூல் வேட்டை செய்றதால மக்கள்கிட்ட நாங்க கெட்ட பேரு வாங்கிட்டிருக்கோம். இதையெல்லாம் தட்டிக்கேட்டா, மேயர் பதவிக்கு நாங்க ஆசைப்படுறதா வீண் பழி போடுறாங்க''’என்று ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் உள்விவகாரங்களை அறிந்த ஒரு நபர் தன் பெயர் வேண்டாமென்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேசினார். "மேயர் கணவர் யுவராஜுக்கு எதிரா தி.மு.க. மாநகராட்சிச் செயலாளர் தமிழ்ச்செல்வன், குமாரகுரு, கார்த்தி, ராமகிருஷ்ணன் ஆகியோர் செயல்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், காஞ்சிபுரம் மாநகராட்சியில் சேரும் குப்பைகளை அகற்றும் டெண்டரை தமிழ்ச்செல்வன், எஸ்.கே.பி.கார்த்தி, எம்.எஸ். சுகுமார், பில்லோபாங் ராதாகிருஷ்ணன், துணைமேயர் முத்துசெல்வன் ஆகியோர் இணைந்து எடுத்துள்ளனர். முன்பைப்போல வேலையாட்களை மட்டும் காண்ட்ராக்ட் அடிப்படையில் அமர்த்தி குப்பைகளைச் சேகரிப்பதில் முறைகேடு ஏற்படுவதால், அந்த முறையை மாற்றி தற்போது குப்பைகளைச் சேகரித்து, அதை பிளாஸ்டிக், இரும்பு, பாட்டில் போன்றவை தனித்தனியாகப் பிரித்து அதற்கு கிலோவுக்கு ஏற்ப பில் வழங்கப்படும். இதில் இவர்களுக்கு வருமானம் கிடைக்கவில்லை. மாநகராட்சி ஆணையர் குப்பைகள் தேங்கியிருந்தால் அதற்கான அபராதம் விதிக்கிறார். இதற்குக் காரணம் மேயர் என்று அவர்மீது கோபம் திரும்பியுள்ளது. தற்போது அது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரை வந்துள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் பாதாளச் சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்புப் பணிக்காக உலக வங்கி சுமார் 700 கோடி ஒதுக்கியுள்ளது. அதில் பெரிய தொகையைப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தால் இந்த எதிர்ப்பு அலைகள் மேயருக்கு எதிராகத் திரும்பியுள்ளது''’என்றார்.
காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜோ, "காஞ்சிபுரம் மக்களும் தலைமையும் எங்களை நம்பிக்கையுடன் தேர்ந்தெடுத்துள்ளனர். அந்த நம்பிக்கையை என்றும் காப்பாற்றுவோம். தவறான புரிதலால் எங்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். புரிய வைத்து மீண்டும் மக்கள் பணியைத் தொடர் வோம்''’என்றார்.
ஜூலை 29-ஆம் தேதி நம்பிக்கையில்லாத் தீர் மானத்தின் மீதான வாக் கெடுப்பு நடக்கும். 80% ஆதரவு இருந்தால் மட்டுமே மேயரை நீக்கமுடியும். அது தான் மேயர் மகாலட்சுமிக் கான ஒரே நம்பிக்கை.