காஞ்சிபுரம் வாலாஜாபாத் சாலையில் பூசிவாக்கம் பேருந்து நிலையமருகே சிவாஸ் பேக்கரியில் முருகன் தின்பண்டம் வாங்கினார். அதில் துர்நாற்றம் வருவதாகக் கூறி கடையின் உரிமையாளர் சிவகுமாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட, கடை உரிமையாளரின் மகன் ஸ்டாலினும், உரிமையாளரின் மருமகனும் காஞ்சிபுரம் மாவட்டம் நீதிமன்ற நீதிபதியின் காப்பாளர் லோகேஷ், மேலும் மூவர் என மொத்தம் 6 பேர் சாதி பெயரைக் குறிப்பிட்டு திட்டி முருகனை சரமாரியாகத் தாக்கியதில் காயமேற்பட்டது.
இதுகுறித்து அவரளித்த புகாரின் பெயரில் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் 25.07.2025 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் முருகனின் மனைவி பார்வதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பேக்கரி தரப்பினர்மீது வழக்கு பதிவு செய்யவேண்டுமென காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
வழக்கு விசாரணையின்போது, "இதில் காவல் துறையைச் சேர்ந்த நபர் இருப்பதால் கைது செய்யாமல் தலைமறைவு என்று கூறிவருகிறீர்களா?'' என்று டி.எஸ்.பி.யை கேள்வியெழுப்பி, "குற்ற வாளிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி இவ் வழக்கின் விசாரணை அதிகாரியான தங்களை கைதுசெய்து சிறையிலடைக்க உத்தரவு பிறப் பிக்கலாமா?'' எனக் கேள்வியெழுப்பினார் நீதிபதி செம்மல். அரசுத் தரப்பில் வழக்கறிஞர் தரப்பு வாதங்களை முன்வைத்து போலீசார் தரப்பில் கால அவகாசம் கோரிய நிலையில், புகாரில் தொடர்புடையவர்கள் அனைவரையும் மாலை 5 மணிக்குள் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும், குறிப்பாக காவலர் லோகேஷ் கைதுசெய்யப்பட வேண்டு மெனவும் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி செம்மல் தெரிவித்துச் சென்றார். அதுவரை நீதிமன்ற கஸ்டடியில் இருக்கவேண்டும் என டி.எஸ்.பி. சங்கர்கணேஷுக்கு உத்தரவிட்டார்.
5 மணியளவில் இதுதொடர் பாக மீண்டும் நீதிபதியின் முன் ஆஜரான காஞ்சிபுரம் டி.எஸ்.பி. அரசுத் தரப்பு வழக்கறிஞர் மூலம் மீண்டும் கால அவகாசம் கோர, நீதிபதி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். குற்றவாளிக்கு உடந்தை யாக இருந்ததாகக் குறிப்பிட்டு 22.09.25 வரை அதாவது 15 நாட்கள் டி.எஸ்.பி.யை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதனையெடுத்து மருத்துவப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறை பாது காப்புடன் டி.எஸ்.பி. அழைத்துவரப்பட்டார். திடீரென டி.எஸ்.பி.க்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் சுமார் ஒருமணி நேரம் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், மருத்துவர்கள் பரிந்துரையின் பெயரில் மேல்சிகிச்சைக்காக 108 வாகனம் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதற்கிடையில் காஞ்சிபுரம் எஸ்.பி. சண்முகம், உயர்நீதிமன்றத்தை அணுக, உயர்நீதிமன்றம் டி.எஸ்.பி. மீதான கைது உத்தரவை ரத்து செய்துள்ளது.