அ.தி.மு.க. ஆட்சியில் கந்துவட்டி வசூல் கொடுமையால், பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மனஉளைச்சலால் தற்கொலை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. கடந்த கொரோனா லாக்டௌனால் வேலைவாய்ப்பை இழந்த பலரும் வட்டிக்கு கடன் வாங்கி குடும்பம் நடத்தும் சூழல்தான். இதனாலும் கந்துவட்டிக் கொடுமை அதிகரித்து வந்தது.
இந்நிலையில், சேலம் அருகே, பா.ம.க. கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர், கந்துவட்டி கொடுமையால் தனது மகளுடன் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகேயுள்ள கன்னந்தேரி ஏரிக்காட்டு வலவு பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர், மகுடஞ்சாவடி ஒன்றிய பா.ம.க. கட்சித் தலைவராக உள்ளார். இவரது மனைவி சுமதி, மகுடஞ்சாவடி பா.ம.க.வில் ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினராகவும், பா.ம.க.வின் ஒன்றிய மகளிரணி தலைவியாகவும் இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களுடைய இரண்டாவது மகள் பெயர் ஜமுனா (வயது 19). கடந்த மே 29-ம் தேதி சனிக்கிழமையன்று இரவு, வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு அனைவரும் படுக்கைக்குச் சென்றுவிட்டனர்.
மறுநாள் காலையில் அனைவரும் எழுந்தபின்னர், நீண்ட நேரமாகியும் சுமதியும், ஜமுனாவும் மட்டும் படுக்கையிலிருந்து எழவேயில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், அவர்களது அறையை ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, அம்மாவும் மகளும் ஒரே சேலையில் உத்திரத்தில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையிலிருந்ததால் பதறிப்போய் கதவைத் திறந்து உள்நுழைந்த கணவரும், பிள்ளைகளும், ஏற்கனவே அம்மாவும் மகளும் உயிரிழந்தது தெரியவந்ததால் கதறி அழுதனர். இதுகுறித்து கொங்கணாபுரம் காவல்நிலையத்துக்கு தகவல் தரவும், காவல்துறையினர் விரைந்துவந்து இருவரின் சடலங்களையும் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கந்துவட்டி தொல்லைதான் இதற்கு அடிப்படைக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. சுமதியின் கணவர் முத்துச்சாமி, உள்ளூரில் பலபேரிடம் கந்துவட்டிக்குக் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாததால் பலரும் அவரது வீட்டு வாசலில் வைத்தே தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் அக்கம்பக்கத்தினர் மத்தியில் கூனிக்குறுகி வாழவேண்டிய நிலை. இதுதொடர்பாக முத்துச்சாமிக்கும் அவரது மனைவிக்கு மிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சுமதி, அவரது மகள் ஜமுனாவுடன் இணைந்து ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தாகத் தெரிகிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்துவருகிறார்கள்.