"தமிழ்நாட்டையே கொள்ளையடித்ததை அள்ளி இறைக்கிறார்கள் "பரிசுப் பெட்டிக்காக' என திருப்பரங்குன்றம் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்துப் பேசும் போது தினகரன் மீது அட்டாக் பண்ணினார் அக்கட்சியின் தலைவரான கமல். காஷ்மீர் பிரச்சனையில் இரட்டை வேடம் போடுவதாக சில நாட்களுக்கு முன்பு பா.ஜ.க.மீது பாய்ச்சல் காட்டிய கமல், பா.ஜ.க. சொல்படி ஆடுகிறது'' என தேர்தல் ஆணையம் மீதும் கடுப்பு காட்டினார். தி.மு.க., அ.தி.மு.க. என எவரையும் விட்டு வைக்கவில்லை.
இப்படி சகல திசைகளிலும் ரவுண்டு கட்டி அடிக்கும் கமல், கடந்த 12-ஆம் தேதி அரவக்குறிச்சியில் பேசியது பா.ஜ.க.வில் தொடங்கி ஒட்டுமொத்த சங்பரிவாரங்களையும் டென்ஷனாக்கியுள்ளது.
12-ஆம் தேதி காலை அரவக்குறிச்சி வந்த கமல், கட்சி நிர்வாகிகளுடன் பகலில் ஆலோசனை நடத்தி முடித்து சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மாலையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பள்ளப்பட்டி ஏரியாவுக்கு வேட்பாளர் மோகன்ராஜுடன் திறந்த ஜீப்பில் வந்தார். ""சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்துமதத்தைச் சேர்ந்த, காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேதான். இஸ்லாமியர்கள் இங்கே அதிகளவில் கூடியிருப்பதால் இதை நான் சொல்லவில்லை. ஏற்கனவே காந்தி சிலைக்கு முன்பாகவே நாதுராம் கோட்சே ஒரு இந்து தீவிரவாதி எனக் கூறியிருக்கிறேன்'' என போட்டுத் தாக்கியதும், தமிழ் சேனல்களைவிட இந்திய அளவிலான ஆங்கில சேனல்களில் பிரேக்கிங் நியூஸ் போட ஆரம்பித்தார்கள். சர்ச்சை தீ பரவியது.
""கமல் சொன்னது சரிதான்'' என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
தமிழக பா.ஜ.க.தலைவர் தமிழிசையோ, “""மிகவும் ஆபத்தான தீயைப் பற்ற வைத்திருக்கிறார் கமல். சிறுபான்மையினரின் ஓட்டுக்களை வாங்குவதற்காகத்தான் இப்படி பேசியிருக்கிறார். அவரின் "விஸ்வரூபம்' படத்திற்கு சிலரால் பிரச்சினை வந்தபோது நாட்டைவிட்டே ஓடப் போறேன் என்று சொன்னவர், இப்போது நான் தான் உண்மையான இந்தியன் என்கிறார். அரசியலிலும் நன்றாகவே நடிக்கிறார் கமல்'' என பொளந்து கட்டினார்.
ம.நீ.ம.வின் மாவட்டச் செயலாளர் ஒருவரிடம் நாம் பேசிய போது, ""தேர்தல் ரிசல்ட் பா.ஜ.க.வுக்கு அனுகூலமாக இருக்காது என்பது எங்கள் தலைவரின் கணக்கு. அதனால் பி.ஜே.பி.யின் "பி' டீம் தான் இல்லை என்பதை ஓப்பனாக சொல்லத்தான் இப்படி பேசியிருக்கிறார். இதன் மூலம் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் குட்புக்கிலும் இடம் பெற்று, கட்சியின் வளர்ச்சிக்கு அச்சாரம் போட்டிருக்கிறார்'' என்றார்.
13-ஆம் தேதியும் அரவக்குறிச்சியில் பிரச்சாரம் செய்வதுதான் கமலின் திட்டம். ஆனால் பிரச்சார அனுமதி விண்ணப்பத்தில் தவறு இருப்பதாக காரணம் சொல்லி, அனுமதியை போலீஸ் ரத்து செய்துவிட்டதால், சூலூருக்கு கிளம்பிவிட்டார் கமல். அவர் பற்ற வைத்த பிரச்சார நெருப்பின் தாக்கம் தேர்தல் முடிவில் தெரியும்.
-ஈ.பா.பரமேஷ், ஜெ.டி.ஆர்.