"என்ன திடீர்னு தி.மு.க. ஆதரவு' எனக் கேட்டால், தனது தெளிவான, தர்க்கரீதியான வாதத்தை எடுத்துவைத்தார் நாஞ்சில் சம்பத். ""தி.மு.க.விலே நான் கிடையாதே,…ஏன் அந்தக் கட்சிக்கு ஆதரவாகப் பேசுகிறேன் எனக் கேட்டால் என் பதில் இதுதான். ஒரு கலாச்சார பாசிசம் இங்கே காலூன்றத் துடிக்கிறது. எனது பண்பாட்டுக்கும் மொழிக்கும், கலாச்சாரத்துக்கும் ஒரு பேராபத்து வரவிருக்கிறது. நான் உண்ணும் உணவில், உடுத்தும் உடையில், எண்ணும் எண்ணத்தில் எல்லாம் அத்துமீறலை செய்கிற பகாசுரர்கள் இந்த மண்ணைக் காவு கேட்கிறார்கள்.
அவர்கள் இங்கே காலூன்றக்கூடாது என எண்ணுகிறவர்கள் தீர்க்கதரிசனமாக யோசிக்கிறோம். அதற்கு எடுபிடியாக எடப்பாடி அரசு மாறிப்போனதால் எடப்பாடி அரசைப் புதைப்பதென்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்.
கமலின் அழைப்புக்கு திருமா ஏன் செவிசாய்க்கவில்லையெனில், திருமாவளவன் கொள்கையில் தெளிவுள்ள ஆள். தமிழ்நாட்டு அரசியலில் கொள்கை அரசியலை மிகத் தெளிவாக எடுத்துச்செல்கிற ஆள். திருமாவளவனையெல்லாம் கமல் கூப்பிடக்கூடாது. ஒடுக்கப்பட்டு, அழுத்தப்பட்ட, காலம்காலமாக மக்கள் மீதிருக்கிற விலங்குகளை உடைக்கிற வேள்விக்கு தலைமை தாங்கியிருக்கும் தலைவர் அவர். அவருக்கு தெளிவான பார்வை, கொள்கை இருக்கிறது
"தி.மு.க.வை அகற்றுவது காலத்தின் கட்டாயம், ஊழலை ஒழிக்க வந்திருக்கிறோம்'னு கமல் பேசுவார். ஆட்சிக்கு வந்த பிறகல்லவா ஊழல் இல்லாத ஆட்சி. நீதான் வரவே முடியாதே. நீ யாரை எதிர்க்கணும்? பத்தாண்டு காலம் ஆட்சியிலில்லாத தி.மு.க.வை ஏன் எதிர்க்கணும்?
பட்டவர்த்தனமா கொள்ளையடிக்கிற கட்சியை விட்டுட்டு, 10,000 கோடி மின்சாரத் துறையில் நடக்கும் ஊழலைச் சுட்டிக்காட்டாமல், அதைக் கேள்விகேட்க வக்கில்லாமல், கமல் பேசுகிறார். இதெல்லாம் பி.ஜே.பி.யின் திட்டமிட்ட வேலை.
தமிழ்நாட்டு மக்களுக்காக எதுக்காவது கமல் பேசியிருக்கிறாரா… கமலின் நான்கு சதவிகித வாக்கு வங்கி இந்த தேர்தலில் 2 சதவிகித மாகக் குறையும். கமல், சனாதனக் கும்பலுக்கு கள்ளத்தனமாக வால்பிடிக்கும் ஆளென தமிழக மக்களுக்குத் தெரிந்துவிட்டது. அவர் பா.ஜ.க.வின் பி டீம் அல்ல. கமல் பா.ஜ.க. ஆளேதான். அதானிக்கும் அம்பானிக்கும் இந்தியாவையே தாரைவார்க்கத் துடிக்கும் பா.ஜ.க.வை அவர் என்றாவது கேள்வி கேட்டிருக்கிறாரா…?
தி.மு.க. ஒடுக்கப்பட்டவனுக்கும் பிற்படுத்தப்பட்டவனுக்கும் பாதுகாப்பாக இருக்கும் அமைப்பு. கைவிடப்பட்டவனை, நிராகரிக்கப்பட்டவனை கைதூக்கிவிடும் அமைப்பு. தி.மு.க.தான் இதைச் செய்தது. ஒவ்வொரு வீட்டிலும் முதல் தலைமுறை பட்டதாரி இருக்கிறான் என் றால் அதற்குக் காரணம் தி.மு.க. பிறகு எந்தக் கட்சிக்கு ஆதரவாகப் பேசவேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்!''