2018, 27 ஜூலை -11.50pm - 29 ஜூலை-10.30pm லைஃப் ரிப்போட்!

ரை நூற்றாண்டு காலமாக அவர்தான் தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தி. உடல்நலன் குன்றியிருக்கும் இந்த நிலையிலும் அவரை மையமாக வைத்தே தமிழ்நாட்டு ஊடகங்கள் இயங்குகின்றன.

kalaingar

dateஜூலை 26 வியாழன்

காவேரி மருத்துவமனை டாக்டர்கள், நர்ஸ்கள் பராமரிப்புடன் கோபாலபுரம் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த கலைஞரின் உடலில் பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு சிறுநீர்ப்பாதையில் நோய்த் தொற்று ஏற்பட்டதன் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், முதுமை காரணமாக உடல்நிலையில் சிறிதளவு நலிவு ஏற்பட்டிருக்கிறது என்றும் நேரில் பார்க்க யாரும் வரவேண்டாம் எனவும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை, தமிழ்நாட்டைப் பதட்டமாக்கியது.

timeஇரவு 10 மணி

டெல்லி பயண சர்ச்சை-சொத்துக் குவிப்பு வழக்கு குறித்த உயர்நீதிமன்ற கேள்வி இவற்றால் பரபரப்புக்குள்ளாகியிருந்த துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி ஆகியோர் கோபாலபுரம் இல்லத்திற்கு நேரில் வந்து கலைஞரின் உடல்நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடமும் தி.மு.க. நிர்வாகிகளிடமும் விசாரித்தது தமிழக அரசியல் களத்தில் எதிர்பாராத ஒன்று. அரசியல் பண்பாடாக இந்த சந்திப்பு நடந்தாலும், அதுவே கலைஞரின் உடல்நிலை குறித்த பரபரப்புகளுக்கும் வதந்திகளுக்கும் விதையிட்டது.

தொடர்ச்சியாகப் பல்வேறு தலைவர்கள், முக்கிய பிரமுகர்களின் கோபாலபுரம் வருகை தி.மு.க. தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் “"கலைஞருக்கு என்னாச்சு?'’ என்ற கேள்வியை எழுப்பியது. நேரில் வந்தவர்கள் கோபாலபுரம் வீட்டின் தரைத்தளத்தில் உள்ள அறையில் உட்காரவைக்கப்பட்டு, அவர்களிடம் கலைஞரின் உடல்நிலை விளக்கப்பட்டது. அ.தி.மு.க. அமைச்சர்கள் வந்தபோது, அந்த வீட்டையே சுற்றுமுற்றும் பார்த்தபடி இருந்தனர்.

Advertisment

kalaingar

timeஇரவு 11 மணி- அதிகாலை 5 மணி

Advertisment

மு.க.ஸ்டாலினும் மற்றவர்களும் கோபாலபுரம் இல்லத்திலிருந்து புறப்படுகிறார்கள். குடும்ப டாக்டர் கோபால், காவேரி மருத்துவமனை டாக்டர் அரவிந்த், ஈ.என்.டி. ஸ்பெஷலிஸ்ட் மோகன் காமேஸ்வரன், டாக்டர் எழிலன் உள்ளிட்டோர் மேற்பார்வையில் கலைஞருக்குரிய சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

கோபாலபுரம் வாசலில் திரண்டிருந்த தொண்டர்களின் வாழ்த்து முழக்கம் ஓயவில்லை. ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றதையடுத்து, தலைவருக்கு எந்த ஆபத்துமில்லை என்ற நம்பிக்கையுடன் ஒரு சிலர் புறப்பட்டுச் சென்றாலும் நிறைய பேர் அங்கேயே விடிய விடிய காத்திருந்தனர்.

date27ஜூலை 27

காலையிலிருந்தே பல்வேறு கட்சித் தலைவர்களும் கோபாலபுரத்திற்கு வரத் தொடங்கினர். முதல் நாள் துணை முதல்வர் வந்து சென்றதால், காலையில் முதல்வர் வருவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அதே நேரத்தில், யாரும் நேரில் சந்திக்க வேண்டாம் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டும், இத்தனை தலைவர்கள் அங்கு செல்வதும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் வீட்டிலேயே கலைஞருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதும் தொண்டர்களிடமும் மக்களிடமும் கவலை கலந்த கேள்விகளை எழுப்ப, அதுவே கலைஞரின் உடல்நிலை பற்றிய வதந்தியாகவும் மாறியது.

kalaingar

தி.மு.க.வின் தலைவராக கலைஞர் பொறுப்பேற்று, 49 ஆண்டுகள் நிறைவடைந்து, 50வது ஆண்டு தொடங்கும் நாள் என்பதால், ஊடகங்களில் கலைஞரின் அரசியல் நிர்வாகம் குறித்தும், உடல்நிலை குறித்தும் தொடர்ச்சியான செய்திகள் வெளியானதும் பல்வேறு யூகங்களைப் பரப்பியபடி இருந்தது. அண்ணா சமாதி அருகே பொக்லைன் கொண்டுவரப்பட்டு வேலைகள் நடக்கின்றன என்றும், ராஜாஜி ஹாலில் புது லைட்டுகள் போடப்பட்டு, சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது என்றும் பதற்றப் பரபரப்பு தொற்றியது.

timeஇரவு 10.15 மணி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கோபாலபுரம் வருகை தந்து கலைஞரின் உடல் நிலை பற்றி மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார். அவர் புறப்பட்ட பிறகு, மு.க.ஸ்டாலினும் தி.மு.க. நிர்வாகிகளும் கோபாலபுரத்திலிருந்து புறப்பட்டனர். தொண்டர்களோ கலைஞரையும் ஸ்டாலினையும் வாழ்த்தி முழக்கமிட்டபடி இருந்தனர்.

timeஇரவு 10.50 மணி

கோபாலபுரம் இல்லத்தில் மாடி அறையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த கலைஞருக்கு, தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. அந்த இரவு நேரத்திலும் டாக்டர் மோகன் காமேஸ்வரன் கலைஞரை முழுமையாகப் பரிசோதித்து விட்டு, கலைஞரின் மகள் செல்வி, மருமகன் முரசொலி செல்வம் ஆகியோரிடம், “"காய்ச்சல் இல்லை.. இன்ஃபெக்ஷனும் குறைந்து வருகிறது' என்று நம்பிக்கை வார்த்தைகளைத் தெரிவித்துச் சென்றார். கலைஞரின் உடல்நலன் அறிய விசாரிக்க நேரில் சென்றிருந்த நமது நக்கீரன் ஆசிரியரிடம் முரசொலி செல்வம், "தலைவரிடம் நல்ல முன்னேற்றம் தெரியுது. எங்க அம்மா (கலைஞரின் அக்கா) 99 வயசு வரைக்கும் இருந்தாங்க. 100 வயசுக்கு 3 மாசம்தான் குறைவு. அதிலே 4 வருசம் இப்படித்தான் இருந்தார். செயல்பாடுகள் குறைந்தாலும் உடல் ஆரோக்கியம் இருந்தது. தலைவரிடமும் அதே ஆரோக்கியம்' என்றார்.

kalaingar

timeஇரவு 11.50 மணி

இந்த ஆண்டின் நீண்ட சந்திர கிரகணம் தொடங்கும் நேரம். சித்தரஞ்சன் சாலை வீட்டுக்கு சென்றிருந்த ஸ்டாலின் தனது மனைவியுடன் பரபரப்பாக கோபாலபுரம் வீட்டுக்குத் திரும்புகிறார். கலைஞரின் குடும்ப டாக்டர் கோபாலும் அங்கே வந்திருக்கிறார். எல்லோரும் பதற்றத்துடன் மாடிக்கு ஓடுகிறார்கள். வாசல் மின்விளக்குகள் அணைக்கப்பட்டிருந்த நிலையில், கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவராக வீட்டுக்கு வருகிறார்கள். எல்லோருடைய முகமும் கலங்கியிருக்கிறது. 3 தலைமுறையாக கலைஞர் குடும்பத்துடன் இயக்கரீதியாகவும் நட்புரீதியாகவும் நெருங்கியுள்ள அன்பிலார் குடும்பத்தின் அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ. கண்ணீரை அடக்க முடியாமல் பரிதவிக்க, ஸ்டாலின் மருமகன் சபரீசன் மகேஷை தேற்றிவிட்டு, மேலும் கீழும் பரபரப்புடன் ஓடிக் கொண்டிருந்தார். முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி நிற்க முடியாமல் நடுங்குகிறார். துரைமுருகன், ஜெகத்ரட்சகன், பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு, தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் அத்தனை பேருமே கலங்கிய கண்களும் கதறலுமாக இருக்கிறார்கள்.

timeஇரவு 12.30 மணி

ராஜாத்தியம்மாள் கலங்கியபடி வருகிறார். மு.க.தமிழரசு மற்றும் செல்வியின் கண்களில் கண்ணீர் பெருகி வழிகிறது. எல்லோரையும் ஆறுதல்படுத்தும் கனிமொழியாலும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கலைஞரின் செயலாளர் சண்முகநாதன், உதவியாளர்கள் மருதநாயகம், வடிவேல், முன்னாள் உதவியாளர் பாண்டியன் எனப் பலரும் கலங்கி நிற்கிறார்கள். கலைஞரின் பாதுகாவலர்கள் வினோத், கணேசன் இங்கும் அங்குமாக பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருடைய பார்வையும் மாடிப் படிக்கட்டிலேயே இருக்கிறது.

timeஇரவு 1 மணி

காவேரி மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் புறப்படுகிறது. கோபாலபுரத்தில் பெருங்கூட்டம். அதைக் கடந்து வருவதற்கு ஆம்புலன்ஸ் சிரமப்படுகிறது. சக்கரத்துடன் கூடிய ஸ்ட்ரெச்சரை கோபாலபுரம் வீட்டின் தரைத்தளத்திற்கு கொண்டு வருகிறார்கள். மாடியிலிருந்து துர்கா ஸ்டாலின் கலங்கியபடி இறங்கி வருகிறார். டாக்டர் கோபால் வந்து, ஸ்ட்ரெச்சர் ரெடியாக இருக்கிறதா என்று பார்க்கிறார்.

இரவு 1.30 மணி

time

மாடியிலிருந்து கை ஸ்ட்ரெச்சரில் கலைஞரை தூக்கிக் கொண்டு வருகிறார்கள். எல்லாருடைய முகத்திலும் பதட்டம். கீழே நிற்பவர்கள் கதறுகிறார்கள். அதை கவனித்து, வெளியே திரண்டிருக்கும் தொண்டர்கள் கதறுகிறார்கள். துவண்டிருக்கிறார் கலைஞர். உடலில் அசைவுகள் இல்லை. ஆனாலும், "உடன்பிறப்பே' என்று கோடிக்கணக்கான தொண்டர்களைக் கட்டிப் போட்ட அவரது உதடு மட்டும் ஓசையின்றி அசைகிறது. அதைக் கவனித்த நக்கீரன் ஆசிரியர், கலைஞர் வழக்கமாக அணிந்திருக்கும் கருப்புக் கண்ணாடி இல்லாததை நினைவூட்ட, கலைஞரை கவனித்துக்கொள்ளும் உதவியாளர் நித்யா, தன் கையிலிருந்த கண்ணாடியை கலைஞருக்கு அணிவித்து, மஞ்சள் துண்டையும் போர்த்திவிட, வீல் வைத்த ஸ்ட்ரெச்சருக்கு மாற்றப்பட்ட கலைஞர், ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டார்.

மு.க.ஸ்டாலின் உள்பட அத்தனை பேரும் உறைந்து போய் நிற்கிறார்கள். என்ன செய்வதென்றே தெரியாத உணர்ச்சிமயமான நிலையில், ஆம்புலன்சுக்கு வழிவிடுவதற்காக, தொண்டர்களை ஒதுங்கச் செய்வதற்குக்கூட யாராலும் இயலவில்லை.

kalaingar

timeஇரவு 1.40 மணி

ஆம்புலன்ஸ், காவேரி மருத்துவமனையை அடைந்த நிலையில், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகளும், கலைஞரின் குடும்பத்தினரும் கோபாலபுரத்திலிருந்து மருத்துவமனை சென்றனர். அப்போது கோபாலபுரம் வீட்டிலிருந்து புறப்பட்ட மருத்துவர் எழிலனிடம், கலைஞரின் உடல்நிலை பற்றிக் கேட்டோம். ""ரத்த அழுத்தம் குறைஞ்சிடிச்சி. அதுக்கு மருந்து ஏத்தணும். இங்கே அந்த வசதி இல்லை. அதனால ஹாஸ்பிடல் போகவேண்டியிருக்கு'' என்று நிலவரத்தைச் சொன்னார்.

இரவு 2 மணி

time

கோபாலபுரத்திலிருந்து திரண்டு வந்த தொண்டர்கள் கூட்டத்தை விட பல மடங்கு காவேரி மருத்துவமனை முன்பு திரண்டிருந்தார்கள். ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குள் நுழையும் போது தொண்டர்கள் "கலைஞர் வாழ்க' என எழுப்பிய வாழ்த்து கோஷம் விண்ணைப் பிளந்தது. இது கலைஞருக்குள் வைப்ரேஷனை ஏற்படுத்தியிருக்கும் என்கிறார்கள். காவேரி மருத்துவமனையின் ஐ.சி.யூ.வார்டில் கலைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அட்மிட் செய்யப்பட்ட நேரத்தில், பி.பி.யின் அளவு 40க்கும் கீழே இருந்தது. சிறிது நேரத்தில் வெளியே வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அங்கிருந்த நிர்வாகிகளிடம், ""தலைவர் உடல்நிலை ஸ்டேபிள் ஆயிடிச்சி.. பி.பி. நல்லாயிடிச்சி'' என்றார். அத்தனை பேர் முகத்திலும் மலர்ச்சி. அதையே, மருத்துவமனை வாசலில் திரண்டிருந்த தொண்டர்களிடமும் தெரிவித்து உற்சாக அலைகளை எழுப்பினார். சோடியம் அளவு குறைந்ததால்தான் கலைஞரின் ரத்த அழுத்தம் சரிந்தது. தொண்டையில் ட்ராக்யோஸ்டமி குழாய் பொருத்தப்பட்டிருப்பதால் அதன் வழியே நியூட்ரினோ லிக்யூட் எனும் திரவ உணவு செலுத்தப்பட்டது. எனினும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய Inotropic support medicine எதுவும் கொடுக்கப்படாமலேயே அவரது ரத்த அழுத்தம் சீரானதை மருத்துவர்கள் "ஆச்சரியம்' என்றனர்.

kalaingar

timeஇரவு 2.30 மணி

மருத்துவமனையிலிருந்து அறிக்கை வெளியானது. அதில், 1.30 மணிக்கு அட்மிட்டான கலைஞருக்கு ரத்த அழுத்தம் குறைந்திருந்ததையும், தற்போது சீராகி, தொடர் கண்காணிப்பில் இருப்பதையும், அவருடைய உடலின் முக்கிய உறுப்புகள் சீராக இயங்குவதையும் குறிப்பிடப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் அவருடைய பி.பி. அளவு 120/80 என்ற இயல்பு நிலையை அடைந்தது. கலைஞரின் பி.ஏ. ராஜமாணிக்கம், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்தறிந்தனர்.

time3.30 மணி

நீண்ட சந்திரகிரகணம் முடிவடைந்திருந்தது. இயற்கை-செயற்கை-அறிவியல்- -நம்பிக்கை என சகல தரப்பையும் எதிர்கொண்டு, தனக்கேயுரிய போராட்டக்குணத்துடன் மீண்டிருந்தார் கலைஞர். மருத்துவமனை அறிக்கையை வெளியிலிருந்த தொண்டர்களிடமும் மீடியாக்களிடமும் படித்துக் காட்டினார் ஆ.ராசா. கலைஞரின் குடும்பத்தினரும் நிர்வாகிகளும் ஒவ்வொருவராக மருத்துவமனையிலிருந்து புறப்பட்டனர். மு.க.ஸ்டாலினின் முகத்தில் பெரும் நிம்மதி. தலைவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், எந்த ஒளிவுமறைவுமின்றி ஸ்டாலின் செயல்படுவதை அத்தனை பேரும் பாராட்டினார்கள்.

timeஅதிகாலை 5 மணி

"எங்களுக்கு சந்திரகிரகணம் இல்லை… சூரியோதயம்தான்' என மருத்துவமனை வாசலில் நின்ற தொண்டர்கள் உற்சாகத்துடன் கிளம்பினர். பொழுது புலர புலர மேலும் பல தொண்டர்கள் வருகை தந்தனர்.

dateஜூலை 28

காலையிலிருந்தே பல்வேறு கட்சியினரும் முக்கிய பிரமுகர்களும் திரைப்படத்துறை சார்ந்தவர்களும் கலைஞரின் நலன் விசாரித்தறிய வந்தபடி இருந்தனர். எவ்வித உயிர்காக்கும் கருவிகளின் துணையுமின்றி, கலைஞர் இயல்பாக சுவாசிப்பதும் அவரது உடல்நிலை சீராக இருப்பதும் அவரது குடும்பத்தினருக்கும் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் நிம்மதியைத் தந்தது. ஊடகங்களின் முழு கவனமும் காவேரி மருத்துவமனையிலேயே இருந்ததால், தமிழ்நாடு முழுவதுமிருந்தும் மக்களின் ஆர்வமும் கலைஞரின் உடல்நிலை குறித்து அறிவதிலேயே இருந்தது.

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், காவேரி மருத்துவமனைக்கு வந்து நலன் விசாரித்தார். அன்றிரவு 8 மணிக்கு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கலைஞரின் உடல்நிலை சீராக இருப்பதையும், டாக்டர்கள் தொடர்ந்து கண்காணிப்பதையும் குறிப்பிட்டிருந்ததால், எல்லாரும் நிம்மதி கொண்டிருந்தனர்.

dateஜூலை 29

கலைஞரின் உடல்நலன் விசாரிக்க வந்த வி.வி.ஐ.பி., குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு. அவருடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் காவேரி மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவர்களை வார்டுக்கு அழைத்துச் சென்றபோது, லைஃப் சப்போர்ட் கருவிகள் எதுவுமின்றி கலைஞர் சிகிச்சை பெற்று வருவதை அவர்கள் கண்டனர். அப்போது மானிட்டரில் கலைஞரின் இதயத்துடிப்பு 94 என்ற அளவைக் காட்டியது. ஒரு நிமிடத்திற்கு 30 முறை மூச்சு விடுகிறார் என்பதும் மானிட்டர் மூலம் தெரியவந்தது. இவை கலைஞரின் உடல்நிலை சீராக இருக்கிறது என்பதை வெளிப்படுத்த, அந்தப் புகைப்படங்களும் வெளியாகி, நிம்மதியைத் தந்தன.

time

மாலை 6.15 முதல் இரவு 7.30 வரை

மதியத்திலிருந்து உற்சாகம் காட்டிய கலைஞரின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு. இதயத்துடிப்பு 30 முதல் 36 வரையே இருந்தது. நம்பிக்கை தளர்ந்த நிலையில் கலைஞரின் உடலை மருத்துவ ஊழியர்கள் சுத்தப்படுத்தி, டிரெஸ்ஸிங் செய்ய ஆயத்தமானார்கள். மு.க.ஸ்டாலின், தயாநிதி, கனிமொழி, பொன்முடி என அங்கிருந்த யாரும் அசையவில்லை. உறைந்து போயிருந்தனர். பல்ஸ் ஏறுகிறதா எனப் பார்த்துக் கொண்டிருந்தனர். 6.30 மணிக்கும் மானிட்டரில் 30 முதல் 36 வரைதான் மாறி மாறி காட்டிக் கொண்டிருந்தது. 6.50க்கு 48 முதல் 72 வரை உயர்ந்தது. 7 மணிக்கு 72ல் இருந்த பல்ஸ் ரேட், 7.30க்கு 55க்கு இறங்கியது.

இப்படி ஏறி இறங்குவது ஆபத்தானது எனத் தெரிவித்த டாக்டர்களே வருத்தத்திலும் வேதனையிலும் இருந்தனர். கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த கொள்ளுப் பேரன்-பேத்திகள் வரை அத்தனை பேரையும் மருத்துவமனைக்கு வரவைக்கும் ஏற்பாடுகள் நடக்க, ஒவ்வொருவராக வந்தபோது எல்லோருக்கும் பதற்றம் அதிகமானது.

எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பில் இருந்த ஸ்டாலின் ஆழ்ந்த கவலையிலும் நிதானமாகவும் தெளிவாகவும் முடிவுகளை எடுத்தார். “கலைஞரின் உடல்நிலை குறித்து எதையும் மறைக்க வேண்டாம். அவர் இயற்கையான முறையில் எவ்வளவு காலம் சுவாசிக்கிறாரோ சுவாசிக்கட்டும். வெண்ட்டிலேட்டர் போன்ற செயற்கை சுவாசக்கருவிகள் தேவையில்லை’’ என்ற அவரின் முடிவிலேயே கனிமொழி, செல்வி உள்ளிட்ட எல்லோரும் உடன்பாடாக நின்றனர்.

கலைஞரின் உடல்நிலை பற்றிய கவலை மிகுந்த செய்திகள் தொண்டர்களிடம் பரவி, பொதுமக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல்ஸ் குறைந்து கொண்டே இருந்த நிலையில், டாக்டர்களின் தொடர் கண்காணிப்பினால் மெல்ல உயர்ந்து, இரவு 9.30 மணிக்கு 84 முதல் 95 வரை காட்டியது. மானிட்டரில் அதனை முதலில் பார்த்த செல்வி, “பல்ஸ் ஏறிடிச்சி..’’ என்று சத்தமாக சொல்லிக் கொண்டே வர, டாக்டர்கள் உள்பட எல்லோருக்குமே ஆச்சரியம். கலைஞரின் வாய் துடிப்பதையும், கண்களில் நீர் தேங்கி நிற்பதையும் செல்வி சுட்டிக்காட்ட, மாலையிலிருந்து மிரட்டி வந்த எமன், தெறித்து ஓடும் அளவுக்கு கலைஞரின் உடல்நிலை ஒரு மெடிக்கல் மிராக்கிளை நிகழ்த்தியிருந்தது. கலைஞர் உடல்நலம் பின்னடைவை சந்தித்து மீண்டு வந்து, சீராக இருப்பதை காவேரி அறிக்கையாக வெளியிட, 10.30 மணிக்கு பதற்றம் மெல்ல குறைந்தது.

குடும்பத்தினரும் கட்சி நிர்வாகிகளும் மருத்துவமனையிலிருந்து நிம்மதியுடன் கிளம்ப, நள்ளிரவுக்குப் பிறகும் சீராகத் தொடர்ந்த கலைஞரின் இதயத்துடிப்பு, அவரது உயிர்த்துடிப்பான உடன்பிறப்புகளை நிம்மதி கொள்ள வைத்தது.

timeஜுலை 30

உதயசூரியனின் வெளிச்சம் காவேரி மருத்துவமனையில் பிரகாசமாக இருந்தது. முதல்வரில் தொடங்கி பல வி.ஐ.பி.யும் நேரில் வந்து கலைஞரின் உடல்நிலையை விசாரித்த நிலையில், இரவு மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார். ""தலைவரின் உடல்நிலை சீராக உள்ளது. தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் கலைஞர் இருக்கிறார்'' என்றார். உடல் இயக்கம், பேச்சு, செவித்திறன், பார்வை இவையெல்லாம் கலைஞருக்கு குறைந்திருந்தாலும் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உள் உறுப்புகள் அவரது வயதுடன் ஒப்பிடும்போது நன்றாகவே உள்ளன. அதில் உள்ள சிறுசிறு குறைபாடுகளை சரி செய்வதற்கு மருத்துவம் எடுக்கும் முயற்சிகளுக்கு நடுவே, கலைஞரின் இயல்பான போராட்ட குணம் மருத்துவமனையிலும் தொடர்கிறது. ஜூலை 30-ந் தேதி நள்ளிரவு கடந்தும் தனது போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார் கலைஞர்.

-கீரன்

படங்கள்: எஸ்.பி.சுந்தர், ஸ்டாலின், அசோக், குமரேஷ்

______________

இறுதிச்சுற்று

சமூக நீதி அர்ச்சகர்!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை 2006ஆம் ஆண்டே கலைஞர் அரசு சட்டம் இயற்றியும், நீதிமன்றப் படிக்கட்டுகளை அது கடப்பதற்கு பெரும் போராட்டமாக இருந்தது. முறைப்படி ஆகமப் பயிற்சி பெற்ற 206 பேர் அர்ச்சகர் பணிக்காக பல ஆண்டுகளாகக் காத்திருந்த நிலையில், மதுரையில் அழகர் கோவில் கட்டுப்பாட்டிற்குள் வரும் அய்யப்பன் கோவிலில் பிராமணரல்லாத அர்ச்சகரை இந்து அறநிலையத்துறை நியமித்துள்ளது. எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு இந்து அறநிலையத்துறை அறிவித்திருந்த அர்ச்சகர் தேர்வு எழுதி, இந்தப் பணியைப் பெற்றுள்ளார். மாற்று சாதியினர் அர்ச்சகராவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் என்பதால் இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் வெளிப்படையாக பேச மறுக்கின்றனர். எனினும், கலைஞர் உடல்நலிவுற்ற நிலையில், அவரது இலட்சிய சட்டத்தை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியிருப்பது அரசியல் கடந்த பண்பாடாகவும் திராவிட இயக்கத்தின் வெற்றியாகவும் கவனிக்கப்படுகிறது. ஏற்கனவே ஆகமப் பயிற்சி பெற்ற அனைவரையும் வெளிப்படையாக அர்ச்சகராக நியமிக்கும்போதுதான் முழு வெற்றியாக அமையும்.

-அண்ணல்