காயத்தைக் குறிவைத்து அம்பு எய்து மரத்திலிருந்து மாங்காய் விழுந்தது போல ஐம்பது வருடங் களுக்கு முன்பு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவு பிரச்சினையை பா.ஜ.க. கையில் எடுத்திருக்கிறது என்கிறார்கள் ஒன்றிய அரசை சேர்ந்தவர்கள். திடீரென்று ஒரே நேரத்தில் ஆங்கில நாளிதழ்களில் கச்சத்தீவு தொடர்பான செய்திகள் வெளியானது. உடனே பா.ஜ.க. மா.த. ஒரு வீடியோ வெளியிட்டார். அவரது வீடியோவைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கைகள் வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக ஒரு செய்தியை வெளியிட்டார்.

ss

நேருவின் காலத்திலேயே கச்சத்தீவை தாரை வார்க்க வேண்டுமென்று முடிவு எடுக்கப்பட்டது. சுதந்திரம் பெறுவதற்கு முன்பே ராமநாதபுரம் ராஜாவின் ஆளுமையில் இருந்த கச்சத்தீவை இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு உரிமை கொண்டாட ஆரம்பித்தது. கச்சத்தீவுக்குச் சென்ற இந்திய ராணுவ தளபதிகளை இலங்கை எதிர்க்க ஆரம்பித்தது. இதுபற்றி 1968ல் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி 1974ஆம் அண்டு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டு கன்னியாகுமரியைச் சுற்றியுள்ள இந்தியப் பெருங்கடலிலும் வங்கக் கடலிலும் 1000 சதுர கிலோமீட்டர் மீன் வளம் நிறைந்த கடல் பகுதியில் இந்தியாவின் ஆதிக்கத்தை இந்திரா காந்தி உறுதி செய்தார். இதனால் இந்தியா இலங்கை கடற் பரப்பில் மற்ற சர்வதேச நாடுகளின் நடமாட்டம் கட்டுப் படுத்தப்பட்டது என கச்சத்தீவு தொடர்பாக இந்தியா இலங்கை இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், கச்சத்தீவில் இந்திய மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட, அங்கு வலைகளை உலர்த்தவும் மீன் பிடிக்கவும் அந்த ஒப்பந்தத்திலேயே வழிவகை செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து பா.ஜ.க. மா.த. வெளியிட்ட அறிக்கையில், “"தமிழக மீனவர்களின் உரிமை ஒரு வருடம்கூட நீடிக்கவில்லை. ஒப்பந்தம் போட்ட அடுத்த வருடமே அவர்களது உரிமை இரு நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர்களுக்கு இடையே நடந்த ஒரு சந்திப்பில் பறிக்கப்பட்டு விட்டது. கச்சத்தீவு முழுமையாக இந்தியாவின் கையை விட்டுப் போனது. இதற்கு தி.மு.க. உடந்தையாக இருந்தது'’ எனக் குறிப்பிட்டார். நிர்மலாவும் ஜெயசங்கரும் பா.ஜ.க. மா.த. சொல்வதை அப்படியே எதிரொலித்தார்கள். கச்சத்தீவு தொடர்பான விவரங்களை ஆர்.டி.ஐ. மூலம் பெற்றேன் எனச் சொன்ன பா.ஜ.க. மா.த. கச்சத்தீவுக்குப் பதிலாக ஒரு பெரிய கடற்பரப்பின் மீதான ஆளுமையை இந்தியா பெற்றது என்பதை வசதியாக மறைத்துவிட்டார்.

Advertisment

அவருக்கு பதிலளித்த தி.மு.க.வினர் "நேரு காலத்திலிருந்தே கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதை தி.மு.க. எதிர்த்தது' என பழைய வரலாற்று தகவல்களோடு மறுத்தனர். பா.ஜ.க.வுக்கு கச்சத்தீவின் மேல் ஏன் திடீர் பாசம். மோடி ஆட்சிக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிறது. இந்தியா நினைத்திருந்தால் கச்சத்தீவை கைப்பற்றியிருக்கலாமே? பத்து ஆண்டுகள் கழித்து தேர்தல் நேரத்தில் திடீரென்று கச்சத்தீவைப் பற்றி பா.ஜ.க. பேசுவது ஏன் என ஊடகங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

இதுபற்றி நம்மிடம் பேசிய ஒன்றிய அரசு வட்டாரங்கள், "இந்த விவகாரத்தின் மூளையே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்தான். கடந்த ஆறு மாதங்களாக இது தொடர்பான நகர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் இலங்கைக்கு பா.ஜ.க. தலைவர்கள் சென்ற போது இதுபற்றி முடிவு செய்யப்பட்டது. சீனா, அம்பன்தோட்டா’ துறைமுகத் தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. அதற்குப் போட்டியாக ‘"இலங்கை வான்வெளியில் இந்தியா இலங்கை ஆகிய இரு நாடு களின் விமானங்கள் மட்டுமே பறக்கலாம்'’என்கிற உரிமையை இந்தியா பெற்றுள்ளது. கடன் வலை யில் மூழ்கிய இலங்கை மீண்டது இந்தியாவின் கோடிக்கணக்கான டாலர் பண உதவியால்தான். ரணில் விக்ரமசிங்கே இந்தியாவுடன் நட்புறவு வைத்திருப்பதால் அவருடன் பேசி கச்சத்தீவில் இந்திய உரிமைகளை நிலைநாட்டலாம் என ஒரு திட்டம் போடப்பட்டது. தமிழகத்தில் அ.தி. மு.க.வுடன் கூட்டணி அமைத்து, அதே நேரத்தில் இந்த கச்சத்தீவு விவகாரத்தைப் பெரிதாக்கினால் மோடி கூட ராமநாதபுரத்தில் நின்று வெற்றி பெறலாம். தமிழகம் முழுவதும் பா.ஜ.க. அலை வீசும் என ஒரு பெரிய திட்டம் போடப்பட்டது. அந்தத் திட்டம் தோல்வியடைந்தது.

இந்த விவகாரத்தில் உள்ள சட்டச் சிக்கல்களை ஆராய்ந்த ஒன்றிய அரசு கடைசியாக இந்த ஆயுதத்தைக் கையில் எடுக்கலாம் என லேட்டாகச் சொன்னதால் லேட்டஸ்ட்டாக இதைப்பற்றி ஒட்டுமொத்த பா.ஜ.க.வும் பேச ஆரம்பித்துள்ளார்கள். தேர்தல் நெருக்கத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரமாக பா.ஜ.க. இதைக் கொண்டு செல்லும். தமிழகத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் அமித்ஷாவும் மோடியும் இதைப்பற்றி முழங்குவார்கள். ஆனால், கச்சத்தீவு விவகாரம் இந்தியாவில் கிளப்பப்படு வதைக் கண்ட இலங்கை அரசு இதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. "அடுத்து என்ன நடக்கும் என்பதை அடுத்ததாக அமையும் ஆட்சிதான் தீர்மானிக்கும். அதுவரை இது தேர்தல் கால கூட்டங்களில் பேசப்படும் பேச்சாகவே அமையும்'” என்கிறார்கள் சர்வதேசப் பார்வையாளர்கள்.

Advertisment