ss

(40) ஓடும் குடிகள்!

ந்த நில அமைப்புக்கு ஒரு தனி அழகிருந்தது. வயல்வெளிகளும், மாந்தோப்புகளும் நிறைந்திருந்தன. மீன் நிறைந்த குளங்கள் அந்த மண்ணின் மற்றொரு சிறப்பு. தேசமெங்கும் இவ்வாறு வளம்நிறைந்த நிலப்பகுதி மடங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. எங்கெல்லாம் இயற்கையின் செறிவுமிகுந்த வளமும், மனித உழைப்பும் இணைந்ததில் அளவில்லாத உற்பத்தி கிடைக்கிறதோ அங்கெல்லாம் நெற்களஞ்சியங்கள் வந்துவிடுகின்றன. இதில் பெருச்சாளிகளும் குடிபுகுந்துகொள்கின்றன. மோசடி மிகுந்த சுரண்டல்முறையும் புகுந்து விடுகின் றது. நாங்குநேரி வட்டத்தில் அமைந்த விளைநிலங்களில் ஒரு பகுதி மடங்களுக்கு சொந்தமாக இருந்தது.

மடங்களில் சில வைணவ மடங்கள், சில சைவ மடங்கள். ஆழ்வார்களின் பாசுரங்களும், சிவனடியார் களின் தேவாரம், திருவாசகப் பாடல்களும் கோயில்களில் மெய்சிலிர்க்கப் பாடப்பட்டன. இந்த ஆலயங்களில் ஆறுகால பூஜை தவறாமல் நடந்துகொண்டிருந்தன. படையல் இல்லாத, விளக்கெரியாத கோயில்களை இங்கு பார்க்கமுடியாது. இவை அனைத்திற்கும் ஆதாரமாக இருந்தவை அந்தக் கோயில்களின் விளைநிலங்கள். இதில் பெருச்சாளிகளும் வலிமைகொள்ளத் தொடங்கின.

Advertisment

ஒருநாள் தோழர் நல்லகண்ணு ‘"ஓடும் குடிகள்'’ என்ற சொல்லை எனக்கு அறிமுகப்படுத்தினார். நான் மேலத்தஞ்சையில் பிறந்தவன். மேலத்தஞ் சைக்கும் கீழத்தஞ்சைக்கும் நில உறவுமுறை களில் சில வேறுபாடுகள் உண்டு. எனது கிராமம் அல்லது என்னைச் சுற்றியுள்ள கிராமங்களில் பண்ணையார், ஜமீன்தார் என்ற பேச்சுக்கு இடமே இல்லை. நிலம் ஒருவரிடம் கொஞ்சம் கூடுதலாகவும் மற்றவரிடம் கொஞ்சம் குறைவாகவும் இருக்கலாம்... ஆனால் எல்லோரிடமும் நிலம் இருந்தது.

ஆனால் கீழத்தஞ்சையின் நில உறவு முறை வேறாக இருந்தது. சில இடங்களில் மடங்களுக்கும், சில இடங்களில் பெரும் பண்ணையாருக்கும் நிலம் சொந்தமாக இருந்தது. அங்கு கொத்தடிமைகள் இருந்த னர். ஆனால் ஓடும்குடிகள் இல்லை. இந்த சொல்லின் அர்த்தம் என்னவென்று அங்குள் ளவர்களுக்கு புரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைக்கவில்லை. இந்த சொல்லைப் புரிந்துகொள்ளும் ஆர்வம் எனக்குப் பிறந்தது.

ss

Advertisment

ஓடு என்றால் ஓடவேண்டும் என்பதாக, இந்த சொல்லை முதலில் நான் புரிந்து கொண் டேன். இந்த சொல் தந்த உணர்வு வெகுவாக என்னை பாதித்துவிட்டது. உணவுக்காகவும் குடிநீருக்காகவும் நாடோடிகளாக அலைந்து திரிந்த மனிதக் கூட்டம் ஒரு இடத்தில் நிலைத்து தங்கி, விவசாயம் செய்து வாழ்வதை, ஒரு காலத்தில் நாகரிகமாகத் தொடங்கியிருந்தது என்பார்கள். இவ்வாறாக இந்த மக்கள் தாங்களே முயன்று உருவாக்கிக்கொண்ட வாழ்க்கையை அழிப்பது எத்தனை அநீதியான செயல் என்று எண்ணத் தொடங்கிவிட்டேன்.

ஓடும்குடிகளைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்தேன். உழைப்பை, கிட்டத்தட்ட ஊதியம் இல்லாமல் மடங்கள் பெற்றுக்கொள்ளும் முறையாக இது தெரிந்தது. விவசாயத் தொழிலாளர்களின் உழைப்பைக் கட்டாயப்படுத்தி வாங்குவதற்கு மடங்கள் வகுத்திருந்த இந்த சட்ட திட்டங் களை தெரிந்துகொண்டவுடன் நான் கொஞ் சம் அதிர்ச்சியடைந்தேன். அவை ஏமாற்றுத் தனங்களும் தந்திரங்களும் நிறைந்தவை.

ஓடும்குடிகள், குடிசை ஒன்றை மடத் துக்குச் சொந்தமான நிலத்தில் கட்டிக் கொள்ளலாம். இதன்படி இவர்கள் கட்டிக் கொள்ளும் வீடுகளில் நிலையோடு கூடிய கதவுகள் இருக்கக்கூடாது, எதையும் மண் ணில் பதிக்கக்கூடாது. இது தங்களுக் கான இரவல் குடிசை என்ற உணர்வு அவர்களிடம் எப்பொழுதும் இருக்கவேண்டும். இதைப்போலவே அம்மி, குடக்கல் ஆகியவற்றை யும் மண்ணில் புதைத்து வைத்துக்கொள்வது சட்டவிரோதமானது. இந்த இடம் தனக்கு சொந்தமில்லை என்ற உணர்வை பரம்பரை, பரம்பரையாக அவர்களின் மனதில் நிரந்தரமாக உருவாக்கவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.

ஓடும்குடிகள் என்னும் இந்த சொல்லின் உட்பொருள், மடத்தின் நிர்வாகம் இவர்களை ஓடு என்றால், பொருள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஓடவேண்டும். இதனால் மண்ணில் எதையும் புதைக்கக்கூடாது. இந்த நடைமுறை ஆழ்வார்களின் ஜீயர் மடங்களில் தான் கூடுதலாக இருந்தது. சைவ மடங்களில் இதற்கு இணையான வேறு ஏற்பாடுகள் இருந்தன.

எதிர்பாராமல், நாங்குநேரி வட்டத்தில் புலிக்குறிச்சி, கட்டளை, சிதம்பராபுரம், மலையடிபுதர், வடகரை பத்தை, கோயில் அம்மாள்புரம், கருவேலங்குளம், தேவகளம் ஆகிய பகுதிகளில் இந்த ஆதிக்கமுறையை எதிர்க்கும் எதிர்ப்பு இடி முழக்கத்தைப் போல வெளிப்பட்டது. இந்தப் பகுதியை தங்க் ஸ்ரீர்ழ்ழ்ண்க்ர்ழ் என்று காவல்துறை குறிப்பு கள் கூறுகின்றன. இந்தப் புத்தெழுச்சி, விவசாய சங்கங்களாக உருப்பெற்று, பின்னர் போராட்டங்கள் மூலம் பக்குவம் பெற்று கம்யூனிஸ்டு இயக்கமாக உறுதிபெறத் தொடங்கி யது. இயக்கம், இந்த நிலங்களை மடங்கள் எவ்வாறு குறுக்கு வழியில் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டன என்பதை வரலாற்றுப்பூர்வமாக அந்தக் கூலி விவசாயி களுக்கு விளக்கிச் சொல்லியது. இதில் இவர்களின் உழைப்பு இல்லை என்றால் எதுவுமே இல்லை என்பதை எடுத்துக் கூறியது. தோழர் நல்லகண்ணுவும், அவரது தோழர்களும் அதற்கான உந்து விசையை வழங்கிக்கொண்டிருந்தார்கள்.

கண்ணுக்குத் தெரியாமல் அடித்தளத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவத் தொடங்கியிருந்த, இந்த இயக்கத்தை பண்ணையாராலும் மடத்தின் பொறுப்பாளர்களாலும் எப்படி சகித்துக்கொள்ள இயலும்? எல்லாவிதமான எதிர்நடவடிக்கைகளையும் எடுத்துப் பார்த்தார்கள்.. பயன் கிடைக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்திற்கு காத்திருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது.

அவர்கள் எதிர்பார்த்ததைப் போன்று அவர்களுக்கு அந்த சந்தர்ப்பமும் கிடைத்தது. இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டது. நொடிப்பொழுதில் எல்லாமும் தலைகீழாக மாறிவிட்டது. நல்லகண்ணுவையும், தோழர்களையும் போலீஸார் கைது செய்யத் தேடினார்கள். கடல்நீரில் மீன்கள் கூட்டத்தையும், அடர்வனத்தில் முயல் கூட்டத்தையும் பிடிப்பது அத்தனை எளிதானது அல்ல. அவர்கள் காற்றில் கலந்து நிற்கிறார்களா? புதரில் மறைந்து நிற்கிறார்களா? என்பதை காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. இத்தனை போலீஸ்காரர்கள், இத்தனை போலீஸ் வாகனங்கள் இருந்தும், இவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற விரக்தி போலீஸ் அதிகாரிகளுக்கு வந்துவிட்டது. இப்படி நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அப்பொழுதுதான் அந்த நிகழ்ச்சியும் நடந்தது.

அந்தக் குடிசை சுற்றி வளைக்கப்பட்டுவிட்டது. அந்த வீட்டில் கம்யூனிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக ஒரு தகவல். ஊர்மக்கள் நெருங்கிவிடாமல் தடுக்கப்பட்டுவிட்டார்கள். ஆனால் என்ன நடக்கப்போகிறது என்ற பதட்டம் அந்த நிலமெங்கும் பரவிக்கிடந்தது. கம்யூனிஸ்டுகளை கைதுசெய் யச் செல்லும் போலீஸ்காரர்களுக்கு அவர்களை அறியாம லேயே அவர்களிடம் தலைகாட்டி நிற்பது உயிர் பயம்தான். இவர்களை கைது செய்தால் பதவி உயர்வு கிடைக்கும் என்ற ஆசை ஒருபுறம் இருந்தாலும், உயிர் பயம் அந்த ஆசையைத் தோற்கடித்துவிடும். யாரும் உள்ளே செல்லத் தயங்கு கிறார்கள். காலம் சிறிதுநேரம் நகர்ந்து செல்கிறது.

ஒருவர் மட்டும் துணிந்து செல்லத் தயாராகிறார்... அவரது பெயர் கிருஷ்ணமூர்த்தி. அவர் ஒரு இன்ஸ்பெக்டர்.

(தொடரும்)