Skip to main content

எஸ்.வி.சேகருக்கு ஒரு நீதி! சூரியகுமாரிக்கு ஒரு நீதி! -காவல்துறை கண்ணாமூச்சி!

ரு பிரச்சினைக்கு நாலுவிதமான தீர்வுகள் இருக்கலாம், ஒரேவிதமான குற்றத்துக்கு நாலுவித தீர்ப்பிருக்கமுடியுமா? தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடுகள் அப்படித்தான் சொல்கிறது.

svsekar

சமீபத்தில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் தமிழிசை குறித்து முகநூலில் ஒருமையிலும், ஆபாசமாகவும் பெண்ணொருவர் பேசும் காணொலிப் பதிவொன்று வேகமாகப் பரவியது. இதையடுத்து அந்த காணொலியைப் பதிவிட்ட மணப்பாறையைச் சேர்ந்த சூரியகுமாரியை சென்னை -போலீசார் விருகம்பாக்கத்தில் வைத்து கைதுசெய்தனர்.

தமிழிசை குறித்து தரக்குறைவாகப் பேசியதை ஒப்புக்கொண்ட சூரியகுமாரி, வழக்கை எதிர்கொள்ளவும் தயாரானார். தூத்துக்குடியில் போலீஸ் நடத்திய படுகொலைபற்றி காக்கி உடையில் வாட்சாப்பில் பேசிய டி.வி. நடிகை நிலானிக்கும் போலீஸ் தரப்பிலிருந்து மிரட்டல் வந்தது.

ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, தூத்துக்குடியில் நடந்த கலவரங்களுக்கு சமூக விரோதிகளே காரணமென ரஜினிகாந்த் பேசியதற்கு எதிராக, ராஜ்திலக் என்பவர் மிகவும் மட்டமான தொனியில் வீடியோ பதிவொன்றை முகநூலில் வெளியிட்டார். இதனால் மனம் புண்பட்ட ரஜினி குடும்பத்தினர் காவல்துறையில் புகார்செய்ய, காவல்துறை விசாரணையை ஆரம்பித்தது.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், தனது மகனின் சகலை என்பதால், ராஜ்திலக் விவகாரத்தில் விரைவான நடவடிக்கைகளுக்கு தடைபோட்டும், எஃப்.ஐ.ஆர். போடாதீர்கள் என அழுத்தம் தர, கிடைத்த கேப்பில் ராஜ்திலக் தலைமறைவாகிவிட்டார்.

nity

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்துவின் ஆய்வுரைக்கு எதிர்வினையாக நித்தியானந்தாவின் பெண் சீடர்கள், வைரமுத்துவை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்து வீடியோ வெளியிட்டனர். இந்த சீடர்கள்மீதும் ஹெச்.ராஜாமீதும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இளையோர் கூட்டமைப்பு காவல்துறையில் புகார் கொடுத்தும் இதுநாள் வரை நடவடிக்கை இல்லை.

இதைவிட கொடுமையாக, பெண் பத்திரிகையாளர்கள் விஷயத்தில் ஆபாசமான கருத்தைப் பரப்பிய எஸ்.வி.சேகரை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை காவல்துறை கைதுசெய்யாததன் பின்னணி என்ன?

""நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை… யாருடையே பேச்சைக் கேட்டும் செயல்படவில்லை'' என்கிறார் எஸ்.வீ.சேகர் விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார். ஆனால், முதல்வரைவிடவும் அதிகாரம் வாய்ந்தவராக இருக்கும் தலைமைச் செயலாளரின் கொழுந்தன் என்பதும், மத்தியில் ஆளும் தேசியக் கட்சியின் கடைக்கண் சேகர் பக்கம் இருக்கிறது என்பதும்தான் அவர் இன்னமும் கைதாகாத காரணம் என்கிற கோட்டை வட்டாரத்தினர், சென்னை -கிழக்குக் கடற்கரைச் சாலையிலிருக்கும் தனது அண்ணன் பங்களாவொன்றில் ஹாயாக இருக்கும் எஸ்.வி.சேகரின் இடத்தை கண்டறிவது தமிழ்நாடு காவல்துறைக்கு அத்தனை சவாலானதா என்றும் கேட்கிறார்கள்.

-க.சுப்பிரமணியன்

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்

Loading...