2020-ல் உலகையே அதிரவைத்த சலனப் படங்களின் பட்டியலைத் தயாரித்தால், அதில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் ப்ளாய்டின் கழுத்தில் தன் கால் முட்டியை வைத்து அழுத்தும் டெரெக் சாவின் படம் முதலிடம் பெறும். கடையொன்றில் சிகரெட் வாங்கும்போது ஏற்பட்ட சில்லறைத் தகராறுக்காக கைதுசெய்ய வந்த போலீஸ், காரில் ஏற மறுத்த ஜார்ஜை மூச்சுத் திணறடித்தே கொலைசெய்த காட்சி உலகையே உறையவைத்தது.

america

ஜார்ஜ் ப்ளாய்டின் மரணத்தின் எதிரொலியாக அமெரிக்காவே கொந்தளித் தது. போராட்டங்களில் கறுப்பர்கள் மட்டுமல்லாமல் வெள்ளையர்களும் கலந்துகொண்டது நீதியை நேசிப்பவர் களை ஆசுவாசம் கொள்ளச்செய்தது. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நீடித்த கொந்தளிப்பு மெல்ல மெல்ல அடங்கிய நிலையில் நீதிமன்றத்தில் இந்த வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியது. இந்திய நீதிமன்றங்களைப் போல் வருடக்கணக்கில் போட்டு வழக்கை இழுத்தடிக் காமல், மிக விரைவாக விசாரித்துமுடித்து காவல் அதிகாரி டெரெக் சாவின் குற்றவாளி எனத் தீர்ப்பளித்திருக்கிறது மினியா போலீஸ் விசாரணை நீதிமன்றம்.

இந்த வழக்கின் ஆரம்பம் முதல் தனது அண்ணனது மரணத்துக்கு நீதி கிடைக்கப் போராடிய அவரது சகோதரர் பிலோனைய்ஸ் ஃப்ளாய்ட், அவரது ஆதரவாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் நடுவே, “""நீதி இன்னும் சாகவில்லை. இன்று சற்று ஆறுதலாக உணர்கிறேன். கடைசியாக கொஞ்சம் உறங்குவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிற தென நம்புகிறேன்''’எனக் கூறியுள்ளார்.

தனது சகோதரனின் மரணத்தைப் பற்றிக் குறிப்பிடும் ஃப்ளாய்ட், “""உலகம் எனது சகோதரனின் உயிர் பறிக்கப்படுவதைக் கண்ணால் பார்த்தது. அதை வேடிக்கை பார்ப்பதைத் தவிர எதுவும் செய்யமுடியாதவனாக நான் இருந்தேன்''’என்கிறார். இந்த வழக்கின் வேதனை தரும் அம்சம் என்னவென்றால், விசாரணையின்போது, பலமுறை அந்த வீடியோ திரும்பத் திரும்ப திரையிடப்பட்டதும், தனது கடைசி மூச்சுக்காகத் தவித்ததைப் பார்க்க நேர்ந்தததும்தான் என்கிறார்.

வழக்கின் தொடக்கத்திலே, இந்த வழக்கு பதியப்பட்டுள்ள விதத்தில் தீர்ப்பின்போது ஜார்ஜ் ப்ளாய்டின் மரணம் பர்ஸ்ட் டிகிரி கொலை எனக் குறிப்பிடப்படாது எனப் பலரும் உறுதிபடக் கூறினர். எனினும், இரண்டாவது மற்றும் மூன்றாவது டிகிரி கொலையென தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளின் அமர்வு, வெளியுலகத் தாக்கம் தீர்ப்பில் செல்வாக்கு செலுத்திவிடக்கூடாது என்பதற்காக பல நாட்கள் வெளியுலகத் தாக்கமின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, “""இன்றைய தீர்ப்பு குறிப்பிடத்தக்க ஒன்றானாலும், இன்னும் நெடுந்தொலைவு செல்லவேண்டியிருக்கிறது. அதுவரை நாங்கள் ஓய்வெடுக்க முடியாது''’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisment