வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் அந்தப் பகுதி முழுக்க இருந்த மலை கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு பெரும் கொடுமைகள் நடந்தன. யுத்தங்கள் முடிந்து எதிரி நாட்டை கைப்பற்றிய ராணுவ வீரர்கள் அங்கு நிகழ்த்தும் கொடுமைகளை படித்திருப்போம். அதைவிட மோசமானவை இங்கு நடந்தன. பெண்கள், ஆண்கள், குழந்தைகள் எனப் பாகுபாடே இல்லாமல் அந்தரங்க பகுதிகளில் ஷாக், அந்தரத்தில் தொங்கவிட்டு அடிக்கும் ஏரோப்ளேன் கொடுமை, மரம் உருட்டுதல், ஒரே குடும்பத்தை சேர்ந்த அப்பா - அம்மா - மகன் - மகள் என அனைவரையும் நிர்வாணப் படுத்தி ஒருவர் முன் ஒருவரை நிறுத்தி நடந்த உச்சகட்ட மனரீதியான கொடுமைகள், உணவே கொடுக்காமல், சிறுநீர் கழிக்க இடம் கொடுக்காமல் எனச் சொல்லத்தயங்கும் எல்லா கொடுமைகளையும் மக்கள் அனுபவித்தனர். பல இயக்கங்களின் முயற்சியால் சதாசிவா கமிஷன் அமைக்கப்பட்டு, நக்கீரன் உள்பட பலரின் முயற்சியால் விசாரணை முகாம் நடந்து, அங்கு மக்கள் வரவழைக்கப்பட்டு, தங்கள் கொடுமைகளை வெளியே கூறினர்.
தமிழக -கர்நாடக கூட்டு அதிரடிப்படையினரால் மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டது உண்மைதான் என்று சதாசிவா கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையை வெளியிடவே பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. சதாசிவா கமிஷன் அறிக்கையின்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க உத்தர விடப்பட்டிருந்தது. அப்போது வழங்கப்பட்டதில் பல குடும்பங்கள் விடுபட்டன. விடுபட்ட மக்கள் ஒன்றுகூடி வழக்கு தொடுத்து, தொடர்ந்து போராடியதில் கடந்த 4ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் இவர்களுக்கு ஆறுதல் தரும் தீர்ப்பை அளித்துள்ளது.
மேட்டூர் சுற்றுப்பகுதி கிராமங்கள், மாதேஸ்வரன் மலை, பர்கூர் மலை, சத்தியமங்கலம், தாளவாடி வனப்பகுதி என வீரப்பன் வாழ்ந்த காட்டைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு நடந்த கொடுமைக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை, 1997-லிருந்து வலுத்து 2000ஆம் ஆண்டு சதாசிவா கமிஷன் அமைக்கப்பட்டு, 300-க்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டதில், விசாரணை நடத்தி, அதில் போதிய ஆதாரங்கள் இல்லாமல் நிரூபிக்க முடியாமல் போனவர்களை தவிர்த்து, பாதிக்கப் பட்டவர்களில் 89 பேரின் குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டன. இவர்களில் தமிழகத்தில் 38 பேரும், கர்நாடகாவில் 51 பேரும் இறுதியாக உறுதி செய்யப்பட்டு, 2004ஆம் ஆண்டு விசாரணை முடிந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/13/veerappancase1-2025-11-13-15-48-20.jpg)
அதன்பிறகு 2007ஆம் ஆண்டு, பாதிக்கப் பட்ட 89 பேரின் குடும்பங்களுக்கும் இழப்பீடாக 5 கோடி வழங்குமாறு தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் 38 பேருக்கு ரூ.1.21 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் அதில் விடுபட்டுப்போயின. அதிரடிப்படையினரால் தந்தை அநியாயமாக கொல்லப்பட, அதற்கு நீதி தேடி புறப்பட்ட முருகேசன், அவருடன் சேர்ந்து போராடிய பலர், டெல்லி மனித உரிமை ஆணையம், தமிழக தலைமைச் செயலாளர், முதல்வர் எனப் பல இடங்களிலும் தொடர்ந்து முயன்றனர். மீதமுள்ள 3.79 கோடியை வழங்கவேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதி அமர்விடமும் அரசுத் தரப்பு, "இரண்டாவது தவணையாக ரூ.1.20 கோடியை வழங்கிவிட்டோம் இதுவரை பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளை 8 கோடிக்கும் மேல் செய்துகொடுத்துள்ளோம்' என விளக்கம் அளித்தனர்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், "அடிப்படை வசதிகளை மக்களுக்கு செய்வது அரசின் கடமை. ஆகையால் இந்த அடிப் படை வசதிகள் செய்ததாக சொல்லப்படும் நிதியை இழப்பீடாக எடுத்துக் கொள்ள முடியாது. பாதிக் கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இழப் பீட்டுத்தொகை மக்களின் வரிப்பணம். அது அரசின் பணம் இல்லை. மக்களின் வரிப் பணத்திற்கு அரசு வெறும் அறங்காவலர்கள் மட்டுமே. இப்படி தொடர்ச்சியாக நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பித்தும் இதுநாள்வரையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்காமலிருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளது'' என நீதிபதி தெரிவித்தார். ஆகையால் இழப்பீட்டுத் தொகையான 5 கோடியில், 2.41 கோடி போக மீதமுள்ள 2.59 கோடியை உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு ஒரு மாதத்திற்குள் வழங்கவேண்டும். வழங்கப்பட்ட பிறகு அதனை நீதிமன்றத்தில் டிசம்பர் 5ஆம் தேதி தெரிவிக்கவேண்டும் என நவம்பர் 4ஆம் தேதி உத்தரவிட்டனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/13/veerappancase2-2025-11-13-15-48-39.jpg)
லக்கம்பட்டியை சேர்ந்த முருகேசன் தனது ஏழு வயதில் குடும்பத்தின ரோடு அதிரடிப்படை யினரால் அழைத்துச் செல்லப்பட்டு எலெக்ட்ரிக் ஷாக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர். அவரது தந்தை அதிரடிப்படையினரால் கொல்லப்பட்டு வீரப்பன் கூட்டத்துடன் நடந்த மோதலில் கொல்லப் பட்டதாக பொய்க்கணக்கு காட்டப்பட்டவர். 'விடியல் மக்கள் நல இயக்க'த்தை தொடங்கி சென்னை, டெல்லி எனப் பயணித்து, தொடர்ந்து போராடி இந்தத் தீர்ப்பைப் பெற்றுள்ளார். "ஏழு வயசுல நானும் என் கூடப் பிறந்தவங்களும் பட்ட கொடுமையை இப்போ நினைத்தாலும் என்னால பேச முடியல. கரண்ட் ஷாக் வச்சு வச்சு எங்கம்மா மனநிலை பாதிக்கப்பட்டாங்க. எங்கப்பாவை கொன்னுட்டாங்கன்ற செய்தியையே நாங்க நக்கீரன் புத்தகத்தை படிச்சுத்தான் தெரிஞ்சுக்கிட்டோம். அதுக்கப்புறம் தான் அவருக்கு இறுதிச்சடங்கே செஞ்சோம். வளர்ந்து விவரம் தெரிஞ்சதுக்கப்புறம் இதுக்கு நீதி பெற்றே ஆகணும்னு முடிவு செஞ்சு, மக்களைத் தேடி மலை மலையா போனேன். ஒண்ணா சேர்ந்து பலரை போய் பார்த்தோம்.
நிறையபேர் எங்களை பகடைக்காயா பயன்படுத்துனாங்க. அப்பதான் நக்கீரன் நிருபர் சுப்பு அண்ணன் மூலமா ஆசிரியர் கோபால் அண்ணனை சந்திச்சேன். எங்களுக்கு உதவி செய்து பல வகைகளில் துணைநின்றார். டெல்லிக்குப் போய் ஆனிராஜா அம்மாவை சந்திச்சேன். எங்க கஷ்டத்தை விளக்கி, எங்களுக்கு நீதி வேண்டுமென்று சொன் னேன். அவுங்க வீட்லயே தங்க வச்சு, மனித உரிமை ஆணையத்துக்கு கூட்டிட்டு போனதில் தொடங்கி, இப்போவரைக்கும் எங்களோட நிக்குறாங்க. வழக்கறிஞர் சங்கரசுப்பு சார் மற்றும் பார்த்தசாரதி அவர்களும் எங்க வழக்கை ரொம்ப நல்லபடியா கொண்டுபோய் இந்தத் தீர்ப்பை வாங்கித் தந்தாங்க. இன்னும் கூட நிறைய மக்கள் இருக்காங்க. அவுங்களுக்காகவும் தொடர்ந்து உழைப்பேன். இப்பவும் ஒரு பயம் இருக்கு, நீதிமன்றம் சொன்னபடி இழப்பீடு கொடுத்துருவாங்களா இல்லை திரும்ப நீதிமன்றத்துக்கு அலையவைப்பாங்களான்னு தெரியல'' என்று கண்கள் கலங்கி, நெகிழ்ந்து கூறினார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/13/veerappancase4-2025-11-13-15-49-03.jpg)
பாதிக்கப்பட்ட பெண்ணான நாகி பேசுகையில் "எங்கள் ஊர் கல்மண்டிபுராவில் பலர் இந்தப் பிரச்சினையால் வாழ்க்கையே இழந்துள்ளனர். ஒரு சிலருக்குத்தான் இந்த இழப்பீடு கிடைத்துள்ளது. எங்களுக்கு ஒரு சிறு ஆறுதலைக் கொடுத்துள்ளது'' என்றார்.
இதுகுறித்து சட்டப் போராட்டம் செய்த வழக்கறிஞர் சங்கரசுப்புவிடம் கேட்டபோது, "இந்த வெற்றி, காலம் கடந்த வெற்றி. இந்த இழப்பீடு இடைக்கால இழப்பீடே. மேலும், பாதிக்கப்பட்ட இந்த 38 குடும்பங்களுக்கும் அவர்கள் படித்த படிப் பிற்கு ஏற்றவாறு அரசுப் பணி வழங்கவேண்டும். இந்தக் கொடுமைகளை அனுபவித்த மக்களுக்கு ஆறுதல் சொல்லவேண்டிய அரசு, அவர்களை 25 ஆண்டுகளாக அலையவிட்டுள்ளது. இழப்பீடு கேட்டால் அரசு சலுகை செய்ததை கணக்குக் காட்டி முடிக்க நினைப்பது கொடுமையிலும் கொடுமையானது. எந்த அரசாக இருந்தாலும் இப்படித்தான் செய்வார்கள் என்பதற்கு இது சான்றாக உள்ளது. இதோடு முடியவில்லை... மேலும் சட்டப்போராட்டம் தொடர்ந்து அவர்களுக்கான நீதி வென்றெடுக்கப்படும்'' என்றார்.
எந்தத் தவறும் செய்யாமல் தங்கள் வாழ்க்கையை இழந்த இந்த மக்களுக்கு இப்போதாவது நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்யவேண்டும்.
-சுப்பு,
அ.அருண்பாண்டியன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/13/veerappancase-2025-11-13-15-48-05.jpg)