"பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற் குப் பின்னால் நிறைய கொடூரன்கள் இருக்கின்றார்கள்' என ஆரம்பத்திலிருந்தே நக்கீரன் மட்டுமே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தது. திருநாவுக்கரசு, ரிஸ்வந்த் என்கிற சபரிராஜன், சதீஷ், வசந்த், மணி கண்டன் என்ற வரிசை நீள... பொள்ளாச்சி வழக்கு சி.பி.ஐ. வசம் போனது. அதற்குப் பின்னர் சி.பி.ஐ., அ.தி.மு.க.வைச் சேர்ந்த அருளானந்தம், பைக் பாபு, ஹெரோன் பால் என்ற மூன்றுபேரை கைது செய்தது.
"இந்த நிலையில்... தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கை 6 மாதத்திற்குள், தினமும் விசாரித்து வழக்கை முடிக்க வேண்டும்'' என சென்னை உயர்நீதி மன்றம் சில நாட்களுக்கு முன்னால் உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவுப்படி சி.பி.ஐ. தனது விசாரணையை முடுக்கிவிட, பொள்ளாச்சியை அடுத்த கிட்டசூரம்பாளையத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவனை கைது செய்தது.
"யார் இந்த அருண்குமார்?'' என சி.பி.ஐ. தரப்பில் கேட்டோம்.
"நாங்க இந்த வழக்கை கையில் எடுத்ததும், பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரிச்சுட்டு இருக்கும்போது, ஒரு பொண்ணு எங்ககிட்ட... "என்னைய அப்படி மோசமா படம் எடுத்த போது , ஒருத்தன் ரொம்ப மோசமா என்கிட்டே நடந்துக்கிட்டான். ரொம்பவும் வல்கரா நடந்துக் கிட்டான். அவனோட அடையாளம் சொல்லத் தெரியலை. ஆனா அவன் பேரு மட்டும் அருண்குமார்'னு அழுதுட்டே சொன்னா. ஆனா எந்த அருண்குமார்னு கண்டு பிடிக்க முடியாம இருக்கும்போதுதான் ஜெயில்ல இருக்கற சதீஷ், ஜோக்கர் என்கிற துணிக் கடையை நடத்திட்டு இருக்கும்போது அருண் குமார் என்கிற ஒருத்தன் ரொம்பவும் நெருக்கமா சதீஷ்கூட இருந்திருக்கற தகவல் கிடைச்சுது. அவன் அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பொறுப்பிலிருக்கிறான். அதுக்குப் பிறகுதான், ஜோக்கர் கடைக்காக சதீஷோட அம்மாவுக்கு பணம் கொடுத்து... இப்ப அந்தக் கடையை அருண்குமார் நடத்திட்டு இருக்கறாங்கறது தெரிஞ்சது.
அதுக்கப்பறம் விசாரிச்சபோது, பொள்ளாச்சி தங்கம் தியேட்டருக்குப் பின்னால குடியிருந்த அருண்குமார், ஒரு வீட்டை விலை கொடுத்து வாங்கி தன் அப்பா, தம்பியோட கிட்டசூரம் பாளையத்திற்கு குடி போயிருக்கிறான். அப்பா முருகானந்தம் முதல்ல ஆட்டோ ஓட்டி சம்பாதிச்சுட்டு இருந்திருக்காரு. இப்ப வீட்லதான் இருக்கறாரு. தம்பி ராஜா ஏதோ ஒரு வேலைக்கு போயிட்டு இருக்கறான். அருண்குமாரை தூக்கிட்டு வந்து விசாரிச்சதில்... நானும் பெண்களை அனுபவிச்சவன்தான். என்கூட இருக்கற இன்னொரு சதிஸும் இந்த பாலியல் சம்பவத்துல இருக்கறான். அவன் இப்ப தலைமறைவாகியிருக்கிறான், .என்றவனை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறைக்கு அனுப்பி இருக்கிறோம். இன்னும் நிறையபேர் சிக்குவார்கள்''’என்கிறார் தெளிவாய்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முன்பிருந்தே குற்றவாளிகளுக்கு எதிராக களத்தில் நின்று போராடிக்கொண்டிருக்கும் தி.மு.க.வின் கோவை தெற்கு மாவட்ட துணை அமைப்பாளரான நவநீதகிருஷ்ணன், "சார், இந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு இவ்வளவு தாமதமா ஏன் போயிட்டு இருக்குன்னு பொள்ளாச்சி மக்கள் கேட்டுக் கிட்டுதான் இருக்கறாங்க. கைது செய்யப் பட்டவர்களை ஒன்றாக வைத்திருக்கக் கூடாது. தனித் தனியாக சிறையில் வைத்து விசாரித்தால் உண்மை சீக்கிரம் வெளிவந்துவிடும் என்றும் இங்குள்ள மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்குள் இந்த அருண்குமார் தி.மு.க.வைச் சேர்ந்தவன் என இட்டுக்கட்டி செய்தி வெளியிட்ட ஒரு செய்தி சேனலுக்கு எதிராக தி.மு.க.வினர் குரல் கொடுத்தோம். இப்போது அந்த சேனல் மன்னிப்பு கேட்டிருக்கிறது. பெண்களிடம் கொடூரங்கள் செய்த கொடூரன்கள் சீக்கிரம் தண்டிக்கப்படும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் பொள்ளாச்சி மக்கள்'' என்கிறார் பொள்ளாச்சி மக்களின் மனசாட்சியாய்..
எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்தல் களத்திற்கு வந்த மு.க.ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அளித்த வாக்குறுதிகள், அவர் முதல்வராகியிருக்கும் நிலையில் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு அனைத்துக் கட்சியினரிட மும் உள்ளது. "குற்றவாளிகள் எந்தக் கட்சியினராக இருந்தாலும் கடுமையான தண்டனை அளிக்கப்படவேண்டும்' என்பதே மக்கள் எதிர்பார்க்கும் நீதி.